விளையாட்டு துறையின் அவலங்களை பேசும் அங்கீகாரம்! | Angikaaram Review | K J R
விளையாட்டு துறையின் அவலங்களை பேசும் அங்கீகாரம்!(2 / 5)
ஆதிரன் (கே ஜெ ஆர்) தடகள போட்டியில் சாதிக்க முயலும் வீரர். தூய்மை பணியாளராக பணியாற்றும் தாய் பானுமதி (ரமா), சட்டம் பயிலும் தங்கை செல்வி (இசபெல்லா) இவர்களுடன் சேர்ந்து தன் வாழ்க்கையையும் இந்த விளையாட்டு மாற்றிவிடும் என நம்பி அதற்கான முயற்சிகளில் இருக்கிறார் ஆதிரன். தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றும், காமன் வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ள ஆதிரனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு நீதி கேட்டு அவர் நீதி மன்றம் செல்கிறார். இதன் பின்னர் ஆதிரனுக்கு வரும் சவால்கள் என்ன? அவருக்கு நீதி கிடைத்ததா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
நாட்டிற்கு பெருமை சேர்க்க பல தடைகளை கடந்து உழைக்கும், போராடும் விளையாட்டு வீரர்களின் வலிகளை பேசும் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தென் பாதியான். இந்தக் களத்துக்குள் விளையாட்டு துறையில் என்னென்ன குறைகளை பேச முடியுமோ எல்லா விஷயங்களையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் கே ஜெ ஆர். முதல் படம் என்பதால் நடிப்பு ரீதியில் பல விஷயங்களில் நல்ல முன்னேற்றம் தேவை. விளையாட்டு சார்ந்த காட்சிகளில் பொருத்தமாக இருக்கிறார். எதிர்தரப்பு வக்கீலாக வரும் விஜி வெங்கடேஷ் ஏளனமான உடல்மொழியை நன்றாக வெளிப்படுத்துகிறார். ஆனால் நடிப்பாக சிறப்பாக சொல்ல ஏதும் இல்லை. தங்கையாக இசபெல்லா, பயிற்சியாளராக வரும் வசுந்தரா, சத்யாவாக வரும் சிந்தூரி போன்றோர் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடிக்கிறார்கள். அம்மாவாக வரும் ரமா மகனுக்கு உத்வேகம் தரும் ஒரு அம்மாவாக வந்து போகிறார். இவர்கள் தவிர அஜித் கோஷி, அருள் டி. சங்கர், அந்தோணி, மன்சூர் அலிகான், ராம்ஜி என சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்கள் ஒரு வழக்கமான நடிப்பை கொடுக்கிறார்கள்.
விஷ்வநாத் தன் ஒளிப்பதிவு மூலம் ஸ்போர்ட்ஸ் சார்ந்த காட்சிகளில் எனர்ஜி சேர்க்க முயற்சி செய்திருக்கிறார். ஜிப்ரான் பின்னணி இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை, ஆனால் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.
விளையாட்டு துறையில் இருக்கும் அரசியல், பூர்வகுடிகளை புலம்பெயரச் சொல்லும் அரசியல் போன்றவற்றை இயக்குநர் பேச நினைத்து பாராட்டும் படியான விஷயமே. ஆனால் எல்லா காட்சிகளும் ஓவர் டோஸ் ஆக இருப்பதும், நேர்த்தியான காட்சியாக இல்லாததும் தான் பிரச்சனை. "இந்த நிலைமை தொடர்ந்த இந்தியால காமன்வெல்த் பார்க்கலாம், ஆனா காமன் வெல்த்ல இந்தியா பேரையே பாக்க முடியாது", "விளையாட்டும் படிப்பும் தான் நமக்கான விடுதலையே" என சில இடங்களில் வசனங்கள் சிறப்பாக இருக்கிறது.
ஆனால் கதையையும், நாயகனின் சிக்கல்களையும் காட்சியாக கடத்த முடியாமல் எல்லா விஷயங்களையும் வசனங்கள் மூலமாக மட்டுமே கடத்த முயல்கிறார்கள். அது சுத்தமாக எடுபடவில்லை. முதல் பாதியில் ஸ்போர்ட்ஸ், இரண்டாம் பாதியில் கோர்ட் என கதை நகர்ந்தாலும் திரைக்கதையாகவும் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்பது பெரிய மைனஸ்.
மொத்தத்தில் ஒரு நல்ல கருத்தை பேச நினைத்தது போல படத்தின் சுவாரஸ்யத்திலும் கவனம் செலுத்தி இருந்தால் முக்கியமான படமாக அமைந்திருக்கும் இந்த `அங்கீகாரம்'.

