NBK Akhanda 2 Review
திரை விமர்சனம்

"இடிய உள்ளங்கைல பிடிக்க நினைக்கிறீங்களா?" - பாலய்யாவின் அகண்டா 2 அதிரடியா? சோதனையா? | Akhanda 2

என்ன ஒரு விஷயம், `அகண்டா' படத்தில் தெய்வீகம் ஊதுபத்தி ஏற்றியது போல் இருக்கும், இதில் சூறாவளி போல் சுழற்றி அடிக்கிறது.

Johnson

கடவுள் நம்பிக்கையை காப்பாற்ற, ஒரு பக்தன் ஆடும் தாண்டவமே `அகண்டா 2'

2021ல் வெளியான முதல் பாகத்தில் அகண்டா (பாலகிருஷ்ணா) தன் சகோதரன் முரளி கிருஷ்ணா (இதுவும் பாலகிருஷ்ணா தான்) மகள் ஜனனிக்கு ஏதாவது ஆபத்து வந்தால், உடனடியாக வந்து காப்பாற்றுவேன் என சொல்லி செல்வதோடு படம் முடிந்தது. ஆனால் ஆபத்து ஜனனிக்கு, மட்டுமல்ல ஜகத்துக்கே வருகிறது. முதல் பாகம் வெளியாகி சில ஆண்டுகள் கழித்து துவங்கு இந்த கதையில், அஷ்ட்ட லிங்க சக்தி பெற்று தவ நிலையில் இருக்கிறார் அகண்டா. முரளி கிருஷ்ணா மகள் ஜனனி (ஹர்ஷாலி மல்ஹோத்ரா) வளர்ந்து சைன்டிஸ்ட் ஆகிறார். ராணுவ வீரர்களுக்கான பயோ ஷீல்டு கண்டுபிடிக்கும் பணியில் இருக்கிறார். இந்த சூழலில் இந்தியாவை அழிக்க திட்டம் தீட்டுகிறது ஒரு எதிரி நாடு. இந்தியாவிலிருக்கு சிலரும் எதிரி நாட்டுடன் இணைந்து கொண்டு, மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வைரஸ் மூலம் வியாதியை பரப்புகிறார்கள். சாமி கும்பிட வந்தவர்கள் கொத்து கொத்தாய் இறந்து போக, மக்கள் கடவுள் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கிறார்கள். இன்னொரு புறம் அந்த வைரஸை அழிக்கும் மருந்தை ஜனனி கண்டுபிடிக்கிறார். எனவே அவரை கொலை செய்ய எதிரி நாட்டு வில்லன் ஆட்களை அனுப்புகிறார். ஜனனியை காக்கவும், மக்களிடம் தெய்வ பக்தியை நிலைநிறுத்தவும் அகண்டா என்ன செய்கிறார் என்பதே இந்த `அகண்டா 2 தாண்டவம்'.

Akhanda 2

இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு படம் என்றாலே விதிகளுக்கு அப்பாற்பட்ட படம் என்று அர்த்தம். அந்தக் கதையில் எதையும் யோசிக்காமல் கமர்ஷியல் விருந்தை மட்டுமே கொண்டாட வேண்டும். அதுவே இந்தப் படத்திலும் தொடர்கிறது. என்ன ஒரு விஷயம், `அகண்டா' படத்தில் தெய்வீகம் ஊதுபத்தி ஏற்றியது போல் இருக்கும், இதில் சூறாவளி போல் சுழற்றி அடிக்கிறது. அதே நேரம் ஆன்மிகம் சார்ந்த ஒரு காட்சியில் சிவன் வரும் இடத்தில் க்ளாப்ஸ் அள்ளுகிறது என்பதும் நாம் புறந்தள்ள முடியாத உண்மை.  

பாலகிருஷ்ணா படங்களில் எப்போதும் பாலகிருஷ்ணா தான் ஒன் மேன் ஆர்மி. மற்ற அனைவரும் கெஸ்ட் ரோல் தான். அது எந்த அளவுக்கு என்றால், சில படங்களில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிப்பார். அதிலும் ஒரு பாலகிருஷ்ணாவை ஓவர் டேக் செய்து இன்னொரு பாலகிருஷ்ணா ஓடுவார். அதுவே தான் இதிலும். முரளி கிருஷ்ணா பாத்திரத்தை கெஸ்ட் ரோல் போல வைத்துவிட்டு, அகண்டாவாக வந்து அலறவிடுகிறார். எதிரிகளிடம் பன்ச் பேசுவது, விபூதி பறக்க ஸ்லோ மோஷனில் நடப்பது, சண்டையில் எதிரிகளை டிசைன் டிசைனாக கிழித்தெடுப்பது, அவ்வப்போது கொஞ்சம் எமோஷன் என பாலய்யாயிஸம் படம் முழுக்க பறக்கிறது. இவர்கள் தவிர ஜனனி பாத்திரத்தில் வரும் ஹர்ஷாலி மல்ஹோத்ராவுக்கு கொஞ்சம் முக்கிய ரோல். நடிப்பு பெரிதாக வரவில்லை என்றாலும், லிப் சிங்கோடு டயலாக் பேசி சமாளிக்கிறார். சம்யுக்தாவுக்கு ஒரு பாட்டு, இரண்டு காட்சிகள் மட்டுமே, சஞ்சய், சாஷ்வதா சேட்டர்ஜி, கபீர் துஹன் சிங், ஆதி என வில்லன்களுக்கு பெரிய ரோல் எதுவும் இல்லை.

Aadhi Pinisetty, Harshaali Malhotra, Samyuktha, NBK

படத்தை முழுக்க எனர்ஜி டெம்போவில் வைத்திருக்கிறது தமனின் பின்னணி இசை. ஆனால் பாடல்களாக பெரிதாக எதுவும் கவரவில்லை. ராம் பிரசாத், சந்தோஷ் ஒளிப்பதிவு மாஸ் காட்சி அத்தனையிலும் வலு சேர்த்திருக்கிறது. சிஜி காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

படத்தின் கதையில் கோட்டை விட்டாலும், பன்ச் டயலாக்கில் எப்போதும் தெறிக்கவிடுவார் போயபட்டி, இந்தப் படத்திலும் அப்படியே. "இடிக்கிற இடிய உள்ளங்கையில பிடிக்க நினைக்கிறீங்களா?", "கடவுள் முன்னால வந்தா கும்புடணும், கூண்டுல ஏத்தக் கூடாது", "அம்மாவோட பால் குடிச்சு செரிக்காதவனும் இல்ல, மத்த பால் குடிச்சு ஆரோக்கியமா வாழ்ந்தவனும் இல்ல", "இங்க யார் வாழணும்னு முடிவு பண்றது ரெண்டு விஷயம் தான், ஒன்னு காலம், இன்னொன்னு என் கையில இருக்க சூலம்" இப்படி பல வசனங்கள் அவரது ஸ்டைலில் கொடுத்திருக்கிறார்.

Akhanda 2

இந்தப் படத்தின் குறைகள் என்ன என்றால், ஒரு படமாக சுவாரஸ்யம் பல இடங்களில் குறைவாக இருக்கிறது. காரணம் சென்ற பாகத்தில் சாமியாராக இருந்த அகண்டா, இந்தப் படத்தில் சாமியாகவே மாறிவிட்டார். ஒரு சூப்பர்ஹீரோ போல துப்பாக்கியை நெளிக்கிறார், ஹெலிகாப்டர் றெக்கையை சீலிங் ஃபேன் போல சூலத்தில் மாட்டி சுத்த விடுகிறார், தம்பி மக்களுக்கு திருஷ்டி எடுக்க அடியாள் தலையை பிடித்து சுத்தி, பூசாரி போல் சிதற விடுகிறார் இப்படி படம் முழுக்க மாஸ் மீட்டர் 2X இல்லை 2000X -ல் போகிறது. எனவே இவருக்கு எந்த சிக்கல் வந்தாலும் அது ஒரு தடையாக நமக்கு தோன்றவில்லை. கதையும் மிக சுலபமாக நாம் கணிக்க முடியும் ஒன்றாக தான் இருக்கிறது. வெறுமனே விதவிதமான சண்டை காட்சிகளை மட்டும் யோசித்துவிட்டு, சண்டை காட்சி எடுக்கும் போது வரும் இடைவேளைகளில் அமர்ந்து கதை யோசித்தது போல தான் இருக்கிறது மொத்த படமும்.

Akhanda 2

சினிமாவாக தாண்டி, இதன் மூலம் சொல்லப்படும் கருத்துக்களும் ஆரோக்கியமானதாக இல்லை. கண்டிப்பாக படம் பேசும் கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை சொல்லவில்லை. அது அவரவரது விருப்பம். ஆனால் இந்தியாவின் எதிரி நாடு ஒன்று, ஒரு வைரசை கண்டுபிடித்து இந்தியா மீது ஏவுகிறது எனவும், அந்த நாடு பெரிய சுவர் கொண்ட நாடு எனவும் சொல்வதில் உள்ள உள்நோக்கம் என்ன என கேள்வி எழுகிறது.

மொத்தத்தில் கொஞ்சம் கதையும், நிறைய சண்டைகளையும் கொண்ட ஒரு படம். முதல் பாகத்தை விட இதில் சுவாரஸ்யம் குறைவே. ஆனாலும் பாலைய்யாவின் தாண்டவம் பிடிக்கும் என்றால் ஜாலியாக ரசிக்கலாம்!