எம் ஜி ஆர் இறந்த அதே நாளில், அதே வேளையில் எம்ஜிஆர் பக்தரான பூமிபிச்சைக்கு (ராஜ் கிரண்) பேரன் பிறக்க, அந்த எம்ஜிஆரே தனக்கு பேரனாக பிறந்திருக்கிறார் என நினைத்து வளர்க்கிறார். தாத்தாவின் தாக்கத்தினால் ராமேஸ்வரன் (கார்த்தி) எம்.ஜி.ஆரின் அறநெறிகளை பின்பற்றுகிறார். ஆனால் ஒருகட்டத்தில் எம் ஜி ஆர் பாதையில் சென்றால் வசதியாக வாழ முடியாது என நினைக்கும் ராமு, இனி நான் போற பாதை, நம்பியார் பாதை என குறுக்கு வழியில் பயணிக்கிறார்.
தாத்தாவின் முன் நேர்மையான போலீசாக நடிப்பதும், வெளியே லஞ்சம் வாங்கும் மோசமான போலீசாகவும் இரட்டை வேடம் போடுகிறார். இன்னொரு பக்கம் அரசியல் தரகரான பெரியசுவாமி (சத்யராஜ்) கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றை நிறுத்த சதித்திட்டம் திட்டமிடுகிறார். தவறான பாதையில் செல்லும் ராமுவையும், சதித்திட்டம் தீட்டும் சுவாமியையும் தடுக்க 'வாத்தியார்' என்ன செய்கிறார்? என்பதே மீதிக்கதை.
ஒரு சூப்பர்ஹீரோ கதையை எம் ஜி ஆர் கனெக்ட் கொடுத்து முயற்சித்து இருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி. அந்த ஐடியா தான் இப்படத்தை ஃபிரெஷ்ஷாக மாற்றி இருக்கிறது.
நடிகர்களின் நடிப்பு பொறுத்தவரை, கார்த்தி வழக்கம் போல் நல்ல ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். Corrupt போலீஸ் ஆக நடந்து கொள்வதும், ஒரு சம்பவத்துக்கு பிறகு அவர் நடந்து கொள்ளும் விதமும் என இந்த நம்ப முடியாத கதை களத்தை, நம்பும் படி மாற்றுவது கார்த்தி தான். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என புரியாமல் விழிப்பது, இன்னொரு நபராக நடிப்பது என முடிந்தவரை நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்.
எம் ஜி ஆர் ரசிகராக வரும் ராஜ் கிரண் சின்ன வேடம் என்றாலும் மனதில் நிற்கிறார். வில்லன் ரோலில் சத்யராஜ், கெட்டப் வித்தியாசமாக இருப்பது போல, கேரக்டரும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான். கெஸ்ட் ரோலை விட கொஞ்சம் பெரிய ரோல் ஆனந்த் ராஜூக்கு, அவர் செய்யும் எம் ஜி ஆரின் இமிடேஷன் மூலம் கலகலப்பு கூட்டுக்கிறார். க்ரித்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஜி எம் சுந்தர், ஜே கே போன்றோர் கொடுக்கப்பட்ட வேலையை செய்து போகிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசை, பழைய பாணியிலான இசையும், மார்டன் இசையும் கலந்து கொடுத்து படத்தின் பல காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துகிறார். பாடல்கள் தனியாக கேட்க நன்றாக இருந்தாலும் படத்தில் அவ்வளவாக பொருந்தவில்லை. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் ஸ்பெஷலாக தர உழைத்திருக்கிறார். குறிப்பாக சண்டைகாட்சிகள் எல்லாம் மிக சுவரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாசிலா என்ற கற்பனை நகரம், அதற்குள் ராமு, பாபு என எம் ஜி ஆரை குறிக்கும் பெயர்கள், பல இடங்களில் எம் ஜி ஆர் பாடல்கள் என இந்த உலகத்தை கவனமாக வடிவமைத்திருக்கிறார் நலன். அதற்குள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுள்ள வில்லன் என வித்தியாசமான கமர்ஷியல் படம் தர முயன்றிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் புதிதாக எந்த விஷயமும் இல்லாமல் வழக்கமான ஒரு டெம்ப்ளேட் படமாக தேங்குகிறது படம். அதிலும் எதற்கு எடுத்தாலும் ஹேக்கிங், வீடியோ வைத்து மிரட்டல், க்ளைமாக்ஸில் 20 பேரை அடிப்பது என அரதப்பழைய விஷயங்களை சேர்த்து சோர்வடைய செய்கிறார்கள். அதிலும் க்ளைமாக்ஸில் எப்படியாவது படத்தை முடிக்க வேண்டுமே என அவசர கதியில் முடித்துள்ளனர்.
மொத்தத்தில் சூப்பர் ஹீரோவாக எம் ஜி ஆர் என்ற வித்தியமான ஒரு கான்செப்ட் பிடித்து, அதில் மிக வழக்கமான கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார்கள்!