2026-ன் முதல் சிறந்த சினிமா.. `இக்கிஸ்' போருக்கு எதிரான உரத்த குரல்! | Ikkis Review
`இக்கிஸ்' போருக்கு எதிரான உரத்த குரல்!(4 / 5)
இராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் போருக்கு எதிராக ஒலிக்கும் குரலே `இக்கிஸ்'
தன் தந்தையை பின்பற்றி இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று வருகிறார் அருண் கேதர்பால் (அகஸ்தியா நந்தன்). பயிற்சிகாலம் முடியும் முன்னரே 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போர் சூழல் வருகிறது, போரில் பீரங்கி வண்டி ஓட்டும் பிரிவுக்கு அனுப்பப்படுகிறார் அருண். பீரங்கி ஓட்டும் பயிற்சி, தோழியுடன் காதல் என செல்கிறது அருணின் வாழ்க்கை. இன்னொருபுறம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது புலம்பெயர்ந்து இந்தியாவுக்கு வந்த அருணின் தந்தை கேதர்பால் (தர்மேந்திரா) 2001ல் தன் பழைய நண்பர்களை ரீயூனியனில் சந்திக்க பாகிஸ்தான் செல்கிறார். அங்கு அவரை தேவையான இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லும் பொறுப்பு பாகிஸ்தான் ராணுவவீரர் முகமத் நிசாருக்கு (ஜெய்தீப் அலாவத்) வழங்கப்படுகிறது. போரில் கலந்து கொள்ளும் அருண் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? பாகிஸ்தான் செல்லும் கேதர்பால் பயணம் என்ன ஆகிறது? இதற்கு மத்தியில் கேதர்பாலிடம் ஒரு உண்மையை நிசாரால் சொல்ல முடிந்ததா? இதெல்லாம் தான் இக்கிஸ்.
1971ல் இந்திய ராணுவத்தில் டேங்க் கமேண்டராக பணியாற்றிய போரில் உயிர்நீத்த அருண் கேதர்பால் வாழ்க்கையை மையப்படுத்தி, சில கற்பனைகள் சேர்த்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். 21 வயதிலேயே வீரமரணம் அடைந்த அவரை குறிக்கும் விதமாக படத்திற்கு `இக்கிஸ்' (21) எனப் பெயரிட்டிருக்கிறார்கள். எப்போதும் வரலாற்றின் உண்மையை பற்றி பேசும் போது, அதன் எந்தக் கோணத்தை பேசுவது அறம் என்ற தெளிவு மிக முக்கியமான ஒன்று. இந்தப் படம் கையில் எடுத்திருக்கும் அறம் Anti - War. போருக்கு எதிரான வாதங்களை பிரச்சாரமாக அன்றி உணர்வுப்பூர்வமாக முன்வைக்கிறது படம். அதற்கு இப்படத்தின் எழுத்தாளர்கள் அர்ஜித் பிஸ்வாஸ், ஸ்ரீராம் ராகவன், பூஜா லதா சூரித் ஆகியோருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
நடிகர்கள் பொறுத்தவரை படத்தின் ஆன்மாவுக்கு ஏற்ற நடிப்பை எல்லோரும் கொடுத்திருக்கிறார்கள். அருண் பாத்திரத்தில் வரும் அகஸ்தியா நந்தன் தான் முதன்மை பாத்திரம். அவருக்கு இது இரண்டாவது படம் என்பது சொன்னால் தான் தெரியும், அவ்வளவு முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கிறார். 21 வயது இளைஞனாக, துருதுவென இருப்பது, போருக்கு போக உற்சாகமாவது, நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பது, காதலில் காட்டும் தடுமாற்றம் என ஒவ்வொரு காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தர்மேந்திரா இப்படத்தின் உயிரோட்டமாகவே இருக்கிறார். பாகிஸ்தான் செல்வது, தன் பூர்வீக வீட்டுக்கு செல்வது, அங்கு எதிர்பாரா ஒருவரின் கோபத்தை சாந்தப்படுத்துவது, இறுதியில் ஒரு விஷயத்தை கேள்விப்படும் போது காட்டும் உணர்வு எனப் பல இடங்களில் கண்கலங்க வைக்கிறார். ஜெய்தீப் அலாவத் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல முடியாமல் தயங்கும் ஒவ்வொரு காட்சியிலும் அலாதியான நடிப்பு.
தொழில்நுட்ப ரீதியாக விஜய் கங்குலியின் ஒளிப்பதிவு போர் காட்சிகளை எந்தக் குழப்பமும் இன்றி தெளிவுடன் பதிவு செய்திருக்கிறது. White Noise Collectives பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம் சேர்க்கிறது. கதைக்குள் ஃபிளாஷ்பேக், அந்த ஃபிளாஷ்பேக் உள்ளே ஒரு ஃபிளாஷ்பேக் என நகரும் திரைக்கதையில் எந்த கவனச்சிதறலும் உண்டாகாமல் படத்தை மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் மோனிஷா பல்டவா.
உண்மை சம்பவமோ, கற்பனை கதையோ, போர் படம் என்றாலே எதிரிநாடு, பகையாளி என்பதையும், எங்க நாட்டு பெருமை, வீரம் தெரியுமா எனப் பேசும் படங்கள் தான் இந்திய சினிமாவில் பெரும்பான்மை. அதுவும் சமீபத்திய பாலிவுட் படங்கள் பலவும் உண்மை சம்பவத்தை தழுவிய படங்களை கையாளும் விதம் மிக குரூரமாக சென்று கொண்டிருக்கிறது. பகைமையை வளர்ப்பது, வெறுப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது மட்டுமே அத்தகைய படங்களின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள `துரந்தர்'. அங்கு தான் `இக்கிஸ்' வேறுபடுகிறது. "எதிரியை தானே சுட்டோம்" என நிசார் சொல்லும் போது "யார் எதிரி?" எனக் கேட்பார் கேதர்பால்.
இந்தியர் என்பதற்காகவே கேதர்பால் மீது கோபமாய் பாய்ந்து வரும் ஒரு பாகிஸ்தானியை அவர் கையாளும் விதம் அத்தனை நெகிழ்ச்சியாய் இருக்கிறது. சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சச்சின் புகைப்படத்தை பார்க்கும் கேதர்பால் "அப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி என்றால், அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல ஒரு போர் போல இருக்கும்" எனக் கூற, அதற்கு பதில் கேள்வியாக "அந்த போரில் யாரும் சாவதில்லையே" என்பார் சபா நிசார். இப்படி படத்தில் எங்கெல்லாம் போருக்கு எதிரான விஷயங்களை இயல்பாக இணைக்க முடியுமோ எல்லா இடங்களிலும் சேர்த்திருக்கிறார்கள். அவை எல்லாம் இதுவரை நாம் உருவாக்கி வைத்திருக்கும் பொதுபுத்தியை கேள்வி கேட்கிறது.
இவற்றை தாண்டி படத்தின் க்ளைமாக்சில் கேதர்பால் சொல்லும் விஷயமே இப்படத்தின் ஆன்மா. 'போரில் ஏற்பட்ட காயங்கள் ஒரு போதும் ஆறாது, அது கிளறப்பட்டுக் கொண்டே இருக்கும். அது மீண்டும் ஒரு போருக்கே கூட வழிவகுக்கும். மறுபடி நம் வயல்கள், குடும்பங்கள், வீடுகள் அழிக்கப்படும். இது எப்போதுவரை தொடரும் என்றோ, எப்போது முடியும் என்றோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும், இது நாம் நினைத்தால் தான் நிற்கும்'. இதைத்தான் இப்படம் அழுத்தமாக சொல்கிறது.
இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இத்தனை உணர்வுப்பூர்வமான, போருக்கு எதிரான படத்தை கொடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். நிச்சயம் தவறவே விடக்கூடாத ஒரு சினிமா இந்த `இக்கிஸ்'. `துரந்தர்' போன்ற போலி பெருமித படங்களின் வெற்றி கோடிகள் குவிப்பது. ஆனால் இக்கிஸை ஒரு துவக்கமாக எடுத்துக் கொண்டு, போர் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை பேசும் பல சினிமாக்கள் உருவாகும் என்றால், மக்களை சிந்திக்க வைக்கும் என்றால் அதுதான் இக்கிஸின் வெற்றி!

