`பராசக்தி' பேசும் மொழி அரசியல், அண்ணா வரும் GOOSEBUMPS காட்சி! | Parasakthi Review | SK25
`பராசக்தி' பேசும் மொழி அரசியல், அண்ணா வரும் GOOSEBUMPS காட்சி!(3 / 5)
இந்தி திணிப்புக்கு எதிராக 1959 - 69 வரை நடந்த மாணவப் போராட்டங்களும் அதன் விளைவுகளுமே `பராசக்தி'
நாடு முழுக்க இந்தியை அலுவல் மொழியாக மாற்ற முயற்சிக்கிறது மத்திய அரசு. இதற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்க மாணவர்கள் போராட்டமும் பெரிய அளவில் ஆரம்பிக்கிறது. கல்லூரி மாணவரான செழியனும் (சிவகார்த்திகேயன்) தன் `புறநானூறு' படையுடன் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக ரயிலுக்கு தீ இடுகிறார், தடுக்க வரும் காவலதிகாரி திருநாடனிடம் (ரவி மோகன்) இருந்து தப்பிச் செல்கிறார் செழியன். இந்தப் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு அலுவல் மொழியாக ஆங்கிலமும் தொடரும் என அறிவிக்கிறார் பிரதமர். போராட்டம் வெற்றி என்றாலும் ரயில் தீயில் புறநானூறு படையின் நண்பர் ஒருவர் இறந்துபோக, இனி போராட்டம் எதுவும் வேண்டாம் என ஒதுங்குகிறார் சிவா. பிரதமர் இறந்தபின் மீண்டும் இந்தியை அலுவல் மொழியாக கொண்டு வர மீண்டும் முயற்சிகள் நடக்கின்றன.
இந்தி கற்றுக்கொண்டால் ரயில்வேயில் வேலை என அதற்கான முயற்சியிலும், எதிர்வீட்டு எம்பி மகள் ரத்னமாலா (ஸ்ரீலீலா) உடன் காதல் என வாழ்க்கையை நகர்த்துகிறார் செழியன், ஆனால் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுகிறார் கல்லூரி மாணவரான செழியனின் தம்பி சின்னதுரை (அதர்வா). இதே சமயம், இரயில் எரிப்பின்போது தன் விரலை வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற செழியனையும், இந்திக்கு எதிரான போராட்டக்காரர்களை ஒழிக்கும் முயற்சியில் இருக்கிறார் திருநாடன். சின்னதுரையின் போராட்டம் என்னவாகிறது? திருநாடனின் அழித்தொழிப்பில் இருந்து இவர்கள் தப்பினார்களா? இந்தி திணிப்புக்கு எதிரான செழியனின் முயற்சி என்னவென்பதெல்லாம்தான் இந்த `பராசக்தி'.
முதலில் இப்படியான ஒரு வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்த நினைத்த இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள். வரலாற்று நிகழ்வுகளை புனைவு கலந்து திரைக்கதைக்குள் அழகாக கொண்டு வந்திருக்கிறது சுதா கொங்கரா மற்றும் குழு.
படத்தின் பெரிய ப்ளஸ் இந்த நடிகர் பட்டாளம். சிவகார்த்திகேயனின் 25வது படம் இது, வாழ்த்துகள் SK! சிவா உணர்ச்சிப் பெருக்கோடு போராடுவது, ஒரு இழப்புக்காக உடைந்து அழுவது, ஸ்ரீலீலாவுடன் ரொமான்ஸ், சில இடங்களில் அவரது வழக்கமான ஹுமார் என அசத்துகிறார். அவருக்கு அடுத்தபடி கவர்வது, வில்லனாக வரும் ரவி மோகன். பார்க்க அமைதியாக, மென்மையாக இருந்தாலும் செய்வதெல்லாம் கொடூரமான வேலை என்பதற்கு கட்சிதமாக பொருந்துகிறார்.
ஹீரோயினாக ஸ்ரீலீலா, க்யூட் காட்சிகளானாலும் சரி, முக்கியமான காட்சியில் அழுத்தமான உரையாற்றும் காட்சியானாலும் சரி, நல்ல நடிப்பைக் கொடுக்கிறார். அதர்வா போராட்டக் காட்சிகளில் ஆக்ரோஷத்தைக் காட்டுகிறார். இந்த முக்கிய நால்வர் தவிர மற்ற அனைவருக்கும் உதிரி வேடங்கள்தான். சின்ன ரோல் என்றாலும் காளி வெங்கட் தனித்துத் தெரிகிறார். கெஸ்ட்ரோலில் வரும் பிற மொழி நட்சத்திரங்களும் சர்ப்ரைஸ் எலமென்ட்ஸ். குறிப்பாக சேத்தன், அண்ணாவாக வரும் காட்சிகளுக்கு க்ளாப்ஸ் தெறிக்கிறது. `இதை நாங்க செய்யல, ஆனா இதை யார் செஞ்சிருந்தாலும் அவன் என் தம்பி' எனச் சொல்லும் அவரது வசனம் எல்லாம் ப்யூர் கூஸ் பம்ப்ஸ்.
இப்படத்தின் எழுத்தும் பல விஷயங்களை ஈர்க்கிறது. மேலோட்டமாக பார்க்கையில், இது ஹீரோ வில்லன் மோதும் படம் என தோன்றலாம். ஆனால் இது இந்தி திணிப்பு கூடாது என்ற சித்தாந்தத்திற்கும், ஏன் இந்தியை ஏற்றால் என்ன என்ற சித்தாந்தத்திற்கும் இடையேயான யுத்தமே.
உதாரணமாக இதில் திருநாடன் பாத்திரம், "என்னுடைய விரலை நான் இழந்த பின்பு, நான் இடது கையை எல்லா விஷயங்களுக்கும் பயன்படுத்த கற்றுக் கொண்டேன், அதுபோல நீங்களும் ஏன் இந்தியை கற்றுக் கொள்ளக் கூடாது" என்று கேட்க, செழியன் அதற்கு பதிலாக "ஒருபோதும் திணிப்பை ஏற்க முடியாது" எனப் பேசுவார். இந்த இருவேறு சித்தாந்த மோதலாக படம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுருக்கமாக சொன்னால், ஒரு மாஸ் படத்தின் டெம்ப்ளேட் உள்ளே இந்தி எதிர்ப்பு பற்றிய வரலாற்றை இணைத்து, கொடுத்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் 100வது படம் இது, வாழ்த்துகள். அவரின் இசையும், பாடல்களும் அற்புதம். எமோஷனல் காட்சியோ, மாஸ் காட்சியோ அவரின் பின்னணி இசை அந்த உணர்வுகளை பயங்கரமாக எலிவேட் செய்கிறது. பாடல்களாகவும் அடி அலையே, ரத்னமாலா, சேனை கூட்டம் என எல்லாம் இதம். 1960 காலகட்டங்களில் நடக்கும் கதை, அதன் உண்மை தன்மை குறைந்துவிடக் கூடாது என தீவிரமாக உழைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், கலை இயக்குநர் கார்த்திக் ராஜ்குமார் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா.
திருநாடன் பாத்திரம் இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கலாம். ரவியின் நடிப்பால் அப்பாத்திரம் உயிர்பெறுகிறதே தவிர, மற்றபடி மிக வழக்கமான வில்லனாக தெரிகிறார். அவருக்கு தமிழ் மேல் ஏன் வெறுப்பு என ஒரு பின் கதை இருந்தாலும்கூட, அது பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. வெறுமனே காரில் வந்து இறங்குகிறார், ஸ்டைலாக நடக்கிறார் என்ற அளவை தாண்டி இன்னும் சில நுணுக்கங்களை அப்பாத்திரத்திற்கு கொடுத்திருக்கலாம். படத்தில் இருக்கும் சில சினிமாத்தனங்கள் மற்றும் எளிதில் யூகிக்கக்கூடிய திருப்பங்கள் போன்றவை ஏமாற்றம் அளிக்கிறது. படம் முடிந்த அளவு இந்தி திணிப்பு பற்றியே நகர்ந்தாலும் சில இடங்களில் காதல், நகைச்சுவை என திசை மாறுகிறது. அவற்றை இன்னும் கொஞ்சம் கட்சிதமாக கொண்டு சென்றிருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், நிச்சயமாக ஒரு சிறப்பான பொழுதுபோக்கு படமாகவும், வரலாற்றில் நடந்த ஒரு முக்கியப் போராட்டத்தை பற்றி அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லும் பதிவாகவும் முக்கியமான படைப்பு `பராசக்தி'.

