ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக மாரி செல்வராஜ் கருத்து pt
சினிமா

”ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பது அப்பட்டமான அநீதி..” - மாரி செல்வராஜ்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியத்தால் நடந்திருப்பது அப்பட்டமான அநீதி என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

Rishan Vengai

நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியதால், அதன் வெளியீடு தாமதமாகியுள்ளது. இதனால் படத்திற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய தணிக்கை வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். மாரி செல்வராஜ், தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையை அப்பட்டமான அநீதி என விமர்சித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் கடைசிப் படமாக உருவாகி இருக்கும் ‘ஜனநாயகன்’ படம், ஜனவரி 9ஆம் தேதியான நேற்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அது, வழக்கை எதிர்கொண்டுள்ளது. இதனால் அப்படம் பொங்கலுக்கும் ரிலீஸாகுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகன்

அதேநேரத்தில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமிருந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்கூட, ”#CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” என மத்திய தணிக்கை வாரியத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தசூழலில் இயக்குநர் மாரி செல்வராஜும் தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை மீது தன்னுடைய எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.

நிகழ்ந்திருப்பது அப்பட்டமான அநீதி..

தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், ”ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்” என பதிவிட்டுள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில், தனிநீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்து, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்துள்ளது.

இந்த விவகாரம் சார்ந்து ஜனநாயகன் படக்குழு உச்சநீதிமன்றம் செல்லுமா? அல்லது ஜனவரி 21ஆம் தேதிவரை காத்திருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எப்படி இருப்பினும் விஜய் போன்ற முன்னணி நடிகரின் படம் ரிலீஸாகாதது தமிழ் திரையுலகிற்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.