ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம் web
சினிமா

ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது..? தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு!

நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. ஆனால் உடனடியாக மேல்முறையீடு செய்யவிருப்பதாக தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்துள்ளது..

Rishan Vengai

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் நீங்கிய நிலையில், படத்தின் வெளியீடு ஜனவரி 11 அல்லது 12ஆம் தேதிக்கு மாற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளதால் படத்தின் வெளியீடு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது..

சினிமாவை விட்டுவிட்டு முழுமையாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய் நடிப்பில் கடைசித் திரப்படமாக உருவாகியிருக்கும் படம் `ஜனநாயகன்'. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் ஜனவரி  9ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நடந்துவரும் நிலையில், தணிக்கைச் சான்றிதழ் பெருவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஜனநாயகன்

ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 9ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைச் சான்றிதழ்க்காக டிசம்பர் 19ஆம் தேதியே அனுப்பப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பப்பட்ட போதும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டது.

இந்தவழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர் சிபி சத்யராஜ், வெங்கட்பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் முதல் காங்கிரஸ் தலைவர்கள் வரை குரல் கொடுத்த நிலையில், இப்பிரச்னை அரசியல் களத்திலும் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவேண்டும் என தொடங்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கப்பட வேண்டும் எனவும், மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், யு/ஏ சான்று வழங்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்தசூழலில் இன்று வெளியாக திட்டமிட்டிருந்த ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அல்லது 12ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் முறையிட்டிருப்பது படத்திற்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது..

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு..

ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா தீர்ப்பு வழங்கிய நிலையில், படம் இரண்டு நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

Jana Nayagan

ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்ட சில நொடிகளிலேயே தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்ய தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர் மனுவாக சமர்பிக்க அனமதித்தும், வழக்கு விசாரணை தேதியை தானே கூறுகிறேன் என தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜனநாயகன் படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை வாரியத்தின் மேல்முறையீடு திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.