2012-ல் வெளியான வழக்கு எண் 18/9 படத்தை 90ஸ் கிட்ஸ் மறந்திருக்கமாட்டார்கள்.. அதேபோல 2023-ல் இறுகப்பற்று திரைப்படம் 2கே கிட்ஸின் நினைவுகளில் இருந்து விலகியிருக்காது... இதுமட்டுமின்றி, மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், லோகேஷ் கனகராஜின் மாநகரம், வில் அம்பு என பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் நடிகர் ஸ்ரீ.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த ஸ்ரீ, திடீரென மோசமான வகையில் இன்ஸ்டாகிராமில் சில வீடியோக்களை பதிவேற்றியிருந்தார். உடல் மெலிந்த தேகத்துடன், கலரிங் செய்யப்பட்ட தலைமுடியுடன் காணப்பட்ட அவருடைய வீடியோ எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை கண்ட நெட்டிசன்கள், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழலில் தவறான தகவல்களை மறுத்த குடும்பத்தினர், ஸ்ரீ மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சையில் இருந்துவருகிறார், தேவையற்ற தவறான தகவல்கள் வருத்தமளிக்கிறது, அவருடைய பிரைவஷிக்கு மதிப்பளியுங்கள் என கூறியிருந்தனர்.
இந்நிலையில் நண்பரும் நடிகருமான ஸ்ரீ குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது உடல்நலம் தேறிவருவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீயும், லோகேஷும் அப்போதிலிருந்தே நண்பர்களாக இருந்துவருகின்றனர். இந்த சூழலில் நடிகர் ஸ்ரீயின் மருத்துவ சிகிச்சைக்கும் லோகேஷ் கனகராஜ் உதவிவருவதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் நடிகர் ஸ்ரீ குறித்து பேசியிருக்கும் லோகேஷ் கனகராஜ், ”ஸ்ரீ தற்போது நன்றாக இருக்கிறார். எல்லாருக்கும் வர கஷ்டகாலம் தான். இப்போ எவ்வளவோ முன்னேறி வந்துட்டார். திரும்ப சினிமாவுக்கு வரப்போறாரா இல்லையான்றது ஸ்ரீயின் முடிவுதான். ஆனால் விரைவில் அவர் முழுமையாக குணமாகிவந்தவுடன் நடிக்க ஆசைப்பட்டால் என்னுடைய படத்திலேயே நடிக்க வைப்பேன். ஸ்ரீ கம்பேக் கொடுப்பதை பார்க்கதான் நானும் ஆசைப்படுகிறேன்” என பேசியுள்ளார்.