தன்னுடைய வித்தியாசமான மேக்கிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து ’விக்ரம்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து, ரஜினியை வைத்து ’கூலி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ஒரு தீவிரமான கமல் ரசிகர் ரஜினியை வைத்து என்னமாதிரியான கலவையை தயார் செய்துள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பே படத்திற்கு ஹைப் ஏற்றி உள்ளது.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்த புரொமோஷன் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் ”ஆடியோ லாஞ்ச்ல வச்சிக்குறன்” என ரஜினி தன்னைபற்றி சொன்னதாக சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி காம்போவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’கூலி’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
படம் வரும் ஆகஸ்டு 14-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் படம் சார்ந்து நேர்காணல்களில் பங்கேற்றுவருகிறார்.
சமீபத்திய நேர்காணலில், ‘ரஜினி, கமல் இருவரும் நண்பர்கள், அவர்கள் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான ரைவல்ரியை வைத்திருந்தனர். அந்த வகையில் கமல் சார்ந்து ரஜினி ஏதாவது உங்களிடம் கேட்டாரா’ என நெறியாளர் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “கூலி படத்திற்கான கதை சொல்லும் உரையாடலின் போது எதார்த்தமாக நான் ஒரு கமல் ரசிகன் சார் என்று கூறிவிட்டேன், அந்த நேரத்தில் அவரும் அதை சிரித்து கடந்துவிட்டார். ஆனால் டப்பிங் வேலைகள் முடிந்துவிட்ட போது, என்னுடைய உதவி இயக்குநர்களிடம் ‘என்னிடம் முதலில் கதை சொல்லவரும்போது கமல் ரசிகர் என்று கூறினார், ஆடியோ லாஞ்ச்சில் பார்த்துக்குறன்’ என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
நான் என் அம்மாவிடம் ரஜினி சார்க்கு படம் பண்ணப்போறேன் என்று சொன்னபோது, நீ சிறுவயதில் சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா பாடலை கேட்டால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பாய் என்று கூறினார். என்னை தவிர்த்து என் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரஜினி சார் ரசிகர்கள் தான். நான் கூட முத்து, படையப்பா வரை ரஜினியின் தீவிர ரசிகராக தான் இருந்தேன், எப்போது நான் சத்யா படம் பார்த்தேனோ அதற்குபிறகு தான் கமல் சாரின் ரசிகராக மாறினேன். அதனால் நான் ரஜினிசாரின் படங்களை நான் பார்க்க மாட்டேன் என்றில்லை.
ரஜினி சார் போன்ற ஒரு நபருக்கு படம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் போது, ஒரு கமல் ரசிகராக எனக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஒரு விருது நிகழ்ச்சியின் போது ’உங்களோட ரசிகர் இப்போ உங்க நண்பருக்கு படம் பன்றாரு’ என கமல் சாரிடம் ஒரு கேள்வி கேட்டனர். அப்போது அவர், என்னுடைய ரசிகர் என் நண்பருக்கு படம் செய்வது எனக்கு தான் பெருமை. என் நண்பருக்காக படம் பன்றிங்க நல்லா பண்ணிட்டு இங்க வாங்க என்று கமல் சார் கூறியிருந்தார். அதனால் எனக்கு கூலி படத்தில் கூடுதல் பொறுப்பு நிறைய இருக்கிறது” என்று லோகேஷ் தெரிவித்துள்ளார்.