”என்னை வீணடித்துவிட்டார்.. லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” - சஞ்சய் தத்!
நடிகர் விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’லியோ’ திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியிருந்தாலும், திரைப்படமாக கலவையான விமர்சனத்தையே பெற்றது.
அதிலும் KGF திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்த சஞ்சய் தத்தின் கதாபாத்திரம், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. விஜய்க்கு தந்தையென்ற ரோலில் நடித்திருந்தாலும், அவருடைய திறமைக்கான நடிப்பை அக்கதாபாத்திரம் ஏற்றிருக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜ் மீது கோபத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
லோகேஷ் மீது கோபத்துடன் உள்ளேன்..
கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பில் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடிப்பில் பான்-இந்தியா படமாக ‘KD The Devil' உருவாகியுள்ளது. 1970 காலகட்டத்தில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படும் இப்படத்தில், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ், கன்னடா, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சஞ்சய் தத், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரகளான ரஜினி காந்த், கமல்ஹாசன், விஜய், அஜிது குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “சென்னையில் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். லோகேஷ் கனகராஜுடன் ஒரு படம் செய்திருக்கிறேன், அதில் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ரஜினிகாந்த் சாருடன் பல இந்தி படங்களில் பணியாற்றியுள்ளேன், அதேபோல கமல்ஹாசன் சாரை மிகவும் மதிக்கிறேன், அஜித் சார் எனக்கு மிகவும் நெருக்கமானவர்.
லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் நடித்ததை மிகவும் விரும்பினேன், ஆனால் லோகேஷ் கனகராஜ் மீது நான் கோபத்தில் இருக்கிறேன். அவர் எனக்கு பெரிய கதாபாத்திரத்தை கொடுக்கவில்லை, என்னை வீணடித்துவிட்டார்” என்று சிரித்தபடி கூறினார்.