இன்னொரு ‘தளபதி’யா கூலி!! லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி! காத்திருக்கும் தரமான சம்பவம்!
நடிகர் கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து ’விக்ரம்’ என்ற மிகப்பெரிய வெற்றிபடத்தை கொடுத்தார். நேர்த்தியான திரைக்கதை, வெறித்தனமான இண்டர்வல் கட், அடுத்த பாகத்திற்கான லீட், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) என விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் அதிகப்படியான வரவேற்பை பெற்றது.
தன்னுடைய வித்தியாசமான மேக்கிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமலை தொடர்ந்து ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஒரு தீவிரமான கமல் ரசிகர் ரஜினியை வைத்து என்னமாதிரியான கலவையை தயார் செய்துள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பே படத்திற்கு ஹைப் ஏற்றி உள்ளது.
இந்த சூழலில் கூலி படம் குறித்தும் ரஜினி குறித்தும் லோகேஷ் கனகராஜ் பேசியிருப்பது, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
ரஜினியை ரொம்ப மிஸ் செய்கிறேன்..
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி காம்போவில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சென்றுகொண்டிருக்கும் நிலையில், படம் குறித்தும் ரஜினி குறித்தும் சமீபத்திய நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
ரஜினி குறித்து பேசியிருக்கும் லோகேஷ், ”ரஜினியின் போர்ஷன்ஸ் முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த நான்கு மாதங்களாக நாங்கள் ரஜினி சாரை ரொம்ப மிஸ் செய்கிறோம். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு சென்று ரஜினி சாரை பார்த்து வருகின்றேன்.
டப்பிங்கின் போது ஸ்டுடியோவில் கூலி படத்தை பார்த்த ரஜினி சார், கட்டிப்பிடித்துக்கொண்டு தளபதியை போல இருப்பதாக கூறினார். மணிரத்னத்தை போல என்னால் திரைக்கதை எழுதமுடியாது, ஆனால் நான் ரஜினிக்காக படம் செய்தால் அது தளபதியை போல இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். ரஜினிசாரும் அப்படியே சொன்னது பெரிய உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது” என்றார்.
கூலி படம் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஹார்பர்கள் பற்றிய கதையாக இருக்கும் என கூறிய லோகேஷ், ரஜினிக்காக ஒரு ஃபேண்டஸி கதை எழுதியதாகவும் பின்னர் அதை படம் ஆக்க நேரம் தேவைப்படும் என்பதால், கூலி திரைக்கதை எழுதி படப்பிடிப்பை முடித்ததாகவும் கூறியுள்ளார்.
படம் சார்ந்து பேசியதை விட, தீவிர கமல் ரசிகரான லோகேஷ் ரஜினியை ரொம்ப மிஸ் செய்து ஜெய்லர் 2 படப்பிடிப்பிற்கே சென்று பார்த்திருப்பது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் மற்றும் ஹீரோ இருவருக்கும் இடையேயான பாண்டிங் படத்திலும் பிரதிபலிக்கும் என்பதால், கூலி திரைப்படத்தில் நிச்சயம் சம்பவம் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.