சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடித்து ஜூன் 20ஆம் தேதி வெளியான படம் ‘குபேரா’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் பைலிங்குவலாக உருவானது இப்படம்.
தனுஷ் போன்ற முன்னணி நட்சத்திரம் நடித்திருந்தும் தமிழில் இப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதே சமயம், தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அதனை பிரதிபலிக்கும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் வெற்றி விழா நிகழ்வு ஹைதராபாத்தில் நடத்தி கொண்டாடியது படக்குழு. ஒரே படம்தான்.. ஆனால், தமிழில் ஒரு மாதிரியும், தெலுங்கில் வேறு மாதிரியான ரிசல்ட் கிடைத்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
பணக்காரனின் பேராசை வளையத்தில் மாட்டிக் கொள்ளும் பிச்சைக்காரர் நிலைமை என்ன ஆகிறது என்பதே படத்தின் ஒன்லைன். படத்தில் தனுஷ் நடிப்பு பெரிய அளவு பேசப்பட்டது. பல பிரபலங்களும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒட்டு மொத்தமாக ஐந்து நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் பெரிய வெற்றி இல்லை என்றே சொல்லப்படுகிறது.
முதல் நான்கு நாட்களில் படத்தின் வசூல் கிட்டத்தட்ட 90 கோடி என்று சொல்லப்பட்டது. இதில் 15 கோடி தமிழ்நாட்டு வசூல். ஆரம்ப நாட்களில் படம் தமிழில் ஓரளவு ஓடினாலும், திங்கட்கிழமைக்குப் பிறகு டல் அடித்தது. ஆனால், தெலுங்கில் படத்திற்கு நல்ல வரவேற்புதான்.
தெலுங்கில் படம் பெரிதும் வரவேற்கப்பட முதன்மையான காரணம் இயக்குநர் சேகர் கம்முலா. `ஆனந்த்', `கோதாவரி', `Happy Days', `Leader', `Life is Beautiful', `ஃபிடா', `Love Story' என அவரின் பெரும்பாலான படங்கள் பெரிய வெற்றியடைந்தவை. மேலும் குடும்பங்களை மகிழ்விக்கும் படங்கள், இளைஞர்களை மகிழ்விக்கும் படங்கள் என அந்த மக்களுக்கு இவரது சினிமாக்கள் பெரிய அளவில் பிடித்தமானவை. அதே வகையில் குபேராவும் தெலுங்கு பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.
தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி உரிமை போன்ற விஷயங்கள் மூலமாகவே படத்துக்கு செலவு செய்த பணம் கிடைத்துவிட்டது என சொல்லப்படுகிறது. அதனால் இனி வரக்கூடிய வசூல் என்பது லாபம்தான். அதே சமயம் இந்த வார இறுதியிலும் படத்திற்கு வரவேற்பு இருந்தால் பெரிய ஹிட் ஆகும் வாய்ப்பும் இருப்பதாக சொல்கிறார்கள் திரைத் துறையினர்.