காந்தாரா சாப்டர் 1 pt web
சினிமா

மெய்சிலிர்க்கும் காட்சிகள்.. கொண்டாடும் ரசிகர்கள்.. எப்படியிருக்கிறது காந்தாரா சாப்டர் 1

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியுள்ளது.

PT WEB

திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காந்தாரா : சாப்டர் 1 திரைப்படம், திரைக்கு வந்துள்ளது. 2022ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம், தென்னிந்தியா மட்டுமின்றி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சிறு தெய்வ வழிபாடு, பழங்குடிகளின் நில உரிமை உள்ளிட்ட நுண்ணிய அம்சங்களைப் பேசிய காந்தாரா, மிகச் சிறந்த திரை அனுபவமாக அமைந்தது. இந்த வெற்றியால், ப்ரீக்குவல் திரைப்படமாக, காந்தாரா : சாப்டர் 1 திரைப்படம் தயாராகியுள்ளது.

முதல் பாகத்தில் இடம்பெற்ற கலைஞர்களுடன், ருக்மிணி வசந்த் உள்ளிட்ட கூடுதல் கலைஞர்களும் இணைந்து, இந்த பாகத்தை இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. முதல் பாகத்தைவிட இந்த பாகத்தில், மெய்சிலிர்க்கும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதாக, படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் திரைப்படம், எந்த இடத்திலும் தேக்கமில்லாமல், விறுவிறுப்பாக செல்வதாகவும் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

பழங்குடிகள் மற்றும் அவர்களின் நாட்டார் தெய்வ வழிபாட்டு கதைக்களத்தை மையமாக வைத்து, உணர்ச்சிப் பரவசம் கொடுத்த திரைப்படம், காந்தாரா. அதன் முன் கதையாக உருவாகியிருக்கிறது, காந்தாரா சாப்டர் 1. காந்தாராவைப் போலவே அதன் முன் கதையும் காட்டில் தொடங்குகிறது.. நாட்டில் உள்ள அரச குடும்பத்துக்கு, காட்டில் உள்ள காந்தாரா எனும் வனப்பகுதியை அடைய வேண்டும் என்ற வேட்கை, தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது... காந்தாரா முதல் பாகத்தில் வந்த பஞ்சுருளியைப் போல், இதில் குல தெய்வத்தின் புனிதக் கற்கள் ஹீரோ ரிஷப் ஷெட்டியிடம் இருந்து நயவஞ்சகமாக அபகரிக்கப்படுகிறது..

ராஜவம்சத்தின் சதி வலையில் சிக்கிய ஹீரோ தடைகளை தகர்த்தாரா? நீதி வென்றதா என்பதுதான் காந்தாரா சாப்டர் 1 படத்தின் கதை.. காந்தாரா முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றி, அதன் PREQUAL மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. அந்த எதிர்பார்ப்பை கதை ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் பூர்த்தி செய்திருக்கிறார், இயக்குநரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி.. கண்களைக் கவரும் காட்டுப்பகுதியையும், மன்னர் ஆட்சி செய்த நாட்டு பகுதியையும், தன் கேமராவுக்குள் கச்சிதமாக கொண்டுவந்திருக்கிறார்.

சோர்வில்லாத திரைக்கதை கதையின் விறுவிறுப்பை கூட்டுகிறது. ரிஷல் ஷெட்டி, ஜெயராம், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரமாக வரும் GULSHAN DEVAIAH வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். இருளில் மின்னும் ஒளிப்பதிவு, குறையில்லா கலை அமைப்பு, அனல் பறக்கும் சண்டை காட்சிகள், பின்னணி இசை, பாடல்கள் என எல்லா ஏரியாக்களிலும் அருமையான பங்களிப்பை பார்க்க முடிகிறது. 2ஆம் பாதியில் சில குறைகள் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை படத்தை நகர்த்திச் செல்வதால், பிரமாண்ட காட்சிப் பதிவாக கவனம் பெறுகிறது, காந்தாரா சாப்டர் 1..