பிரபலமாகும் அரட்டை APP.. அசத்தும் ஸோஹோ
வாட்ஸ்அப்... ஃபேஸ்புக்... இன்ஸ்டாகிராம்... ஸ்னாப்சாட் என ஏராளமான சமூக ஊடகங்கள் இந்தியர்களின் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டன. ஆனால் இந்த சமூக ஊடகங்கள் எதுவும் இந்தியாவில் உருவானவை இல்லை. இந்தியாவிலிருந்து சமூக ஊடகங்கள் உருவாகவேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். கூ, மித்ரோன், மேப்பிள்ஸ் என சில சமூக ஊடகங்கள் இந்தியாவில் உருவானாலும் அவை பெரிதாக பிரபலமாகவில்லை.
இந்நிலையில்தான் வாட்ஸ்அப் போன்று அரட்டை என்ற செயலி வேகமாக பிரபலமாகி வருகிறது. சென்னையை சேர்ந்த ஸோஹோ நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. 2021இல் உருவாக்கப்பட்ட இச்செயலி முன்பு, தினசரி சுமார் 3,000 பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில் அது கடந்த சில நாட்களாக 3 லட்சத்தை கடந்துள்ளது. இச்செயலியை மேலும் மேம்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் வரும் நவம்பரில் இப்பணிகள் முடிவடையும் என்றும் கூறியுள்ளார் ஸோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்பு. இந்திய பயனாளிகளின் தரவுகள் மும்பை, டெல்லி, சென்னை ஆகிய ஊர்களில் உள்ள டேட்டா சென்டர்களில் மட்டுமே சேமிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். உலகத்தின் தேவைக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலி அரட்டை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் சமூக ஊடகங்கள் பெரிய அளவில் உருவாவதற்கான தொடக்கப்புள்ளியாக இது பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் சுமார் 50 கோடி, யூட்யூப் 48 கோடி, இன்ஸ்டாகிராம் 42 கோடி, ஃபேஸ்புக் 38 கோடி, எக்ஸ் 3 கோடி பயனாளர்களை கொண்டு இந்தியாவில் வலுவாக கால் பதித்துள்ள நிலையில் அவர்களுக்கு போட்டியாக ஒரு சமூக ஊடகம் இங்கிருந்து உருவாவது ஒரு இமாலய சவாலாகவே உள்ளது.
சீனாவும் மேற்கத்திய சமூக ஊடகங்களுக்கு தனது மண்ணில் தடை விதித்துவிட்டு தனது டிக்டாக், வி சாட் போன்ற செயலிகள் மூலம் பிற நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அரட்டை செயலி அதிவேகமாக இந்தியர்களின் ஸ்மார்ட்ஃபோன்களில் இடம்பிடித்தாலும் அது எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதிலேயே அதன் உண்மையான வெற்றி அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.