ரஜினி, கமல் எக்ஸ் தளம்
சினிமா

"நாங்கள் இணைந்து வருகிறோம்..." ரஜினியுடன் இணையும் படத்தை உறுதி செய்த கமல்!|Rajini|Kamal

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு ரஜினியும் கமலும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் செய்தி சில தினங்களுக்கு முன்பு பரவியது.

Johnson

தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன். ஆரம்ப காலங்களில் இருவரும் நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினியின் முதல் படமான ’அபூர்வ ராகங்கள்’ படத்திலேயே கமல் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் `தப்பு தாளங்கள்', `மூன்று முடிச்சு', `அவர்கள்', பதினாறு வயதினிலே', `இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ எனப் பல படங்களில் இணைந்து நடித்தனர். தமிழில் 1979ல் வெளியான `நினைத்தாலே இனிக்கும்' படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி இணையாமல் இருந்தது. `தில்லு முல்லு' படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடித்தது, இந்தியில் அமிதாப் பச்சனுடன் ரஜினி - கமல் இணைந்து நடித்த `Geraftaar' போன்ற படத்திற்குப் பிறகு முற்றிலுமாக இக்கூட்டணி பிரிந்தது. 

kamal haasan

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு ரஜினியும் கமலும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் செய்தி சில தினங்களுக்கு முன்பு பரவியது. தற்போது அதனை உறுதி செய்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். நேற்று நடந்த விருது விழா ஒன்றில் தொகுப்பாளர் "நீங்களும், ரஜினி சாரும் இணைகிறீர்கள் என தகவல் வந்ததே, தரமான சம்பவம் இருக்கிறதா?" எனக் கேட்க, "தரமான சம்பவம் என்பதில்தான் ஆபத்தே இருக்கிறது. அங்கு (ரசிகர்கள்) இருப்பவர்கள்தான் சொல்லவேண்டும் தரம் எப்படி என படம் பார்த்துவிட்டு சொல்லட்டும், நடப்பதற்கு முன்பே சம்பவம் தரமாக  இருக்கிறது என்றால் எப்படி? படம் செய்துவிட்டு காட்டுவோம், அவர்களுக்கு பிடித்தால் மகிழ்ச்சி. இல்லை என்றால், தொடர்ந்து முயலுவோம்" என்றார் கமல்.

தொடர்ந்து பேசிய தொகுப்பாளர் "இதில் ஒரு அப்டேட் என்ன என்றால் உலகநாயகனும், சூப்பர்ஸ்டாரும் இணைவது உறுதி" எனச் சொல்ல, அதற்கு பதில் அளித்த கமல் "இணைந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது, நாங்கள் விரும்பி பிரிந்து இருந்தோம். ஒரு பிஸ்கெட்டை ரெண்டு பேர் பகிர்ந்து கொண்டோம். ஆளுக்கொரு பிஸ்கெட் வேண்டும் என ஆசைப்பட்டோம். அதை வாங்கி நன்றாகச் சாப்பிட்டோம். இப்போது மறுபடி அரை பிஸ்கெட் போதும் என்ற சந்தோசம் எங்களுக்கு இருக்கிறது. எனவே நாங்கள் இணைந்து வருகிறோம். எங்களுக்குள் போட்டி என்பது நீங்கள் ஏற்படுத்தியதுதான். எங்களுக்கு அது போட்டியே கிடையாது. வாய்ப்பு கிடைத்ததே எங்களுக்கு பெரிய விஷயம். அப்போதே இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும், முன்னுதாரணமாக இருக்கவேண்டும் எனவும் முடிவு செய்துவிட்டோம். அப்படியேதான் அவரும் இருக்கிறார், அப்படியே தான் நானும் இருக்கிறேன். நாங்கள் சேர்கிறோம் என்பது வியாபார ரீதியான ஆச்சர்யமே தவிர, எங்களுக்கு இது எப்போதோ நடக்க வேண்டியது, இப்போதாவது நடக்கிறதே, ஆகட்டும் என்பது மாதிரி இருகிறோம்" என்றார்.

கமல், ரஜினி

தமிழ் சினிமாவின் இருபெரும் துருவங்களாக இருக்கும் ரஜினியும் - கமலும் இணைந்து நடிக்கும் செய்தி இருதரப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, கமல் ஆகிய இருவரையும் தனித்தனியே இயக்கிவிட்ட லோகேஷ்தான், இருவரும் இணையும் படத்தை இயக்குவார் என்றும், இந்த படத்தை ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயிண்ட் இணைந்து தயாரிக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.