Kamal Haasan & Rajinikanth to reunite after 46 years
Kamal haasan | RajinikanthPT

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி~கமல்..?

ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படம்
Published on
Summary

46 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம், கமலின் 235வது மற்றும் ரஜினியின் 173வது படமாக இருக்கும். இருவரும் இணைந்து நடிக்காத காலம் முடிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், கமல்ஹாசணும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இது கமலின் 235வது படமாகவும், 173வது படமாகவும் இருக்கும். 

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார்கள் பெரிதாக இணைந்து நடித்ததில்லை. எம்ஜிஆரும், சிவாஜியும் ஒரு படத்தில் தான் இணைந்து நடித்தார்கள், அஜித் விஜய்கூட அப்படித்தான் ஒரே படம். ஆனால், கமல் ரஜினி அப்படியல்ல. பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் ரஜினியை இரண்டாம் ஹீரோவாக நிலைநிறுத்திவிடுவார்கள் என்று எண்ணிய கமல், ரஜினியிடம் இனி இணைந்து நடிக்க வேண்டாம் என அறிவுரை கூறினார். அதன்பின்னர் தான் இருவரும் இணைந்து நடிக்கும் முடிவை கைவிட்டனர். கமல் நடிப்பதாக இருந்து பின்னர் ரஜினிக்கும்; ரஜினி நடிப்பதாக இருந்து கமலுக்கும் கைமாறிய படங்கள் கூட உண்டு. இந்தியன் படத்தில் முன்பு ரஜினியும், எந்திரன் படத்தில் முன்பு கமலும் நடிப்பதாக இருந்தன.

இதற்கு முன்னரும், கமல் ரஜினி இருவரும் இணைந்து நடிப்பதாக பலமுறை தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், இருவரின் சம்பளமே அதிகம் என்பதால், சம்பளம் தாண்டி படத்தின் தரத்தில் கவனம் செலுத்தமுடியாது என கமல் மறுத்துவிட்டார்.ஆனால், இப்போது அதற்கான காலம் கைகூடிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆம், கமலின் ராஜ்கமல் நிறுவனத்துக்கு ரஜினி ஏற்கெனவே ஒரு படம் செய்துதருவதாக இருந்தது. தற்போது ராஜ்கமல் நிறுவனமும், ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. 

ஏற்கெனவே லோகேஷ் கார்த்தியை வைத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது அதற்கு முன்னதாக இந்தப் படத்தை லோகேஷ் இயக்கவிருக்கிறார் என்கிறார்கள். ஜெய்லர் 2 படப்பிடிப்பிற்குப் பிறகு, ரஜினி இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்தப் படம் LCU யுனிவர்ஸ் படமாக இல்லாமல், தனிப்படமாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.  இரண்டு வயதான கேங்க்ஸ்டர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பா அல்லது, ஏற்கெனவே ரஜினியிடம் சொன்ன வில்லன் கதையை இயக்கவிருக்கிறாரா லோகேஷ் என்பது விரைவில் தெரியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com