pugazh and kureshi
pugazh and kureshi pt
சினிமா

"நாங்க பண்ணது பெரிய தப்பு.. கமல் ரசிகர்களே மன்னிச்சிடுங்க" மன்னிப்பு கேட்ட விஜய் டிவி புகழ், குரேஷி

யுவபுருஷ்

மற்ற பிக்பாஸ் சீசன்களை போன்று விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும், நடந்துகொண்டிருக்கும் 7-வது சீசன் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. சீசன் தொடங்கியது முதலே, மீம் கிரியேட்டர்கள் பலரையும் கலாய்த்து வந்தனர். அப்படி, பரிதாபங்கள் கோபி, சுதாகர் கலாய்த்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

நடப்பு சீசனில், போட்டியாளர் மாயாவுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், ஆதரவாக இருப்பதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். காரணம், கடந்த 2022ம் ஆண்டு, நடிகர் கமலின் படத்தில் மாயாவும் துணைப்பாத்திரமாக நடித்திருந்தார். இதனால்தான், கமல் மாயாவுக்கு ஆதரவாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதை வைத்தும் மீம்ஸ் கிரியேட்டர்கள் சிலர் கலாய்த்து வந்தனர். அப்படி, நாமும் கலாய்க்கலாமே என்றபடி, 2 மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் டீவி புகழ் மற்றும் குரேஷி கமல்ஹாசனை விமர்சித்து பேசியிருந்தனர். தொகுப்பாளராக புகழ் நடிக்க, கமலைப்போலவே மாயாவுக்கு ஆதரவாக பேசுவது போன்று குரேஷி மிமிக்கிரி செய்திருந்தார்.

இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, காமெடி செய்யலாம், ஆனால் வரம்பு மீறி இரட்டை அர்த்தத்தில் கலாய்ப்பது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால், கமல் ரசிகர்கள் பலரும், புகழ் மற்றும் குரேஷியை சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்து வந்தனர்.

இந்நிலையில்தான், புகழ் மற்றும் குரேஷி இருவரும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். புகழ் வெளியிட்ட வீடியோவில் , “கமல் சார் ரசிகர்களுக்கு வணக்கம். துபாயில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர்கள் கொடுத்த ஸ்கிரிப்ட்டை பேசியிருந்தோம். அதில் இடம்பெற்ற ஒருசில வார்த்தைகள், கமல் சார் ரசிகர்களை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இதுபோன்று செய்யமாட்டேன். வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். கமல் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், குரேஷி வெளியிட்ட வீடியோவில், “நடந்த நிகழ்ச்சியில் கொடுத்த ஸ்கிரிப்ட்டை பேசினோம். விவரம் தெரியாமல் ஒரு ஃப்லோவில் பேசிவிட்டோம். கமல் சார் ஒரு பெரிய லெஜண்ட். நாங்க பண்ணது பெரிய தவறுதான். இனி சரியாக காமெடியை கையாள்கிறோம். மன்னித்துவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.