"மாணவர்கள் சார்பாக நன்றி சொல்றேன்மா" மகள் நினைவாக சொத்தை தானம் செய்த தாயிடம் அமைச்சர் நெகிழ்ச்சி

தனது மகளின் நினைவாக 4.5 கோடி மதிப்புள்ள சொத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய மதுரையைச் சேர்ந்த தாய் பூரணத்தை, தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
அன்பில் மகேஸ், பூரணம்
அன்பில் மகேஸ், பூரணம்pt

மதுரை மாவட்டம் கே புதூர் அருகே உள்ள சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் உக்கிரபாண்டியன் - பூரணம் தம்பதியினர். இவர்களது மகள் ஜனனி உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று தாய் பூரணம் முடிவெடுத்துள்ளார்.

இதனிடையே, கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக தனது சொத்தை தானமாக வழங்கியுள்ளார். பள்ளிக்கு கட்டடத்தை கட்டிக்கொள்வதற்காக அவர் கொடுத்த 1 ஏக்கர் 52 செண்டு சொத்தின் மதிப்பு ரூபாய் 4.5 கோடியாகும். அந்த இடத்தில் உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டிக் கொள்வற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியதென்றும், இந்த தானப் பத்திரத்தை இன்றைய தேதியிலேயே அரசுக்கு கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கட்டடம் கட்டும்போது ஒரு வாசகம் பொறித்த கல்லை வைக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, பள்ளிக்கு கட்டடம் கட்டுகையில், அதற்கு “ஜனனியின் நினைவு வளாகம்” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சொத்தை மகளின் நினைவாக அரசுக்கு தான பத்திரப் பதிவு செய்து கொடுத்ததை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, தாய் பூரணத்தை அவர் பணியாற்றும் வங்கிக்கே சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன், "இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால், அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது. இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தை கொண்டாட வேண்டிய நேரம் இது. அந்த வகையில்தான் பூரணம் அம்மாவை, மதுரையின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன்" என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.

இதனையடுத்து தாய் பூரணத்திற்கு, பள்ளிக்கூடத்தில் வைத்து பாராட்டு விழாவும் நடைபெற்றது. அப்போது அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த நிலையில், தனது மகளின் கனவை நிறைவேற்றவே அவளது நினைவாக சொத்தை தானம் செய்தேன். மாணவர்களின் கண்களில் எனது மகளைப் பார்க்கிறேன் என்று உருக்கமாக பேசினார் தாய் பூரணம்.

இதனையடுத்து, தற்போது அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். 29-ம் தேதி மதுரைக்கு நேரில் வந்து சந்திப்பதாகவும், அனைத்து மாணவர்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com