நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இதற்கு எதிராக பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், விஜய் தரப்பில் எந்தவிதமான எதிர்ப்பும் வெளிவராததை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். விஜய் செயலிழந்துவிட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம், கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை வாரியத்திடம் இருந்து சென்சார் சான்றிதழ் கடைசிவரை கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிப்போய் உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதுவரை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் தணிக்கை வாரியம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தசூழலில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை விஜய் தரப்பிலிருந்து எந்தவிதமான எதிர்ப்புக்குரலும் வெளிவராமல் இருந்துவருகிறது.
இந்நிலையில் தான் தன்னுடைய பிரச்னைக்கே விஜய் குரல் கொடுக்காததை விமர்சித்து, விஜய் செயலிழந்துவிட்டாரா, முடக்குவாதம் வந்துவிட்டதா என பாஜக நிர்வாகி கஸ்தூரி விமர்சித்துள்ளார்..
நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்பட விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி, “ஜனநாயகன் படத்தை பொறுத்துவரைக்கும் எனக்கு தெரிந்து படம் முழுமையாக மே மாதமே முடிந்துவிட்டது.. ஆனால் அவர்கள் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தணிக்கை குழுவிற்கு ஏன் அனுப்பவில்லை என்பது புரியவில்லை. விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்பதை தாண்டி, விஜய் தற்போது எதிர்ப்பார்ப்புக்குரிய அரசியல் தலைவராகவே பார்க்கப்படுகிறார். திமுகவை அதிகமாக எதிர்க்கக்கூடியவராகவும், பாஜகவையும் எதிர்க்கக்கூடிய தலைவராகவே தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அப்படி இருக்கும்போது அவருடைய கடைசி படமான ஜனநாயகனுக்கு எங்கிருந்தாவது, எப்படியாவது எதிர்ப்பு வரலாம் என்பதை அவர்கள் முன்கூட்டியே யோசித்து செயல்பட்டிருக்கவேண்டும்.
தற்போது தணிக்கை வாரியத்தால் பிரச்னை வந்துள்ளது, ஆனால் நான் இதற்கு முன்பே யாராவது கதை திருட்டு என்றோ, NOC வாங்கவில்லை என்றோ பிரச்னை செய்வார்கள் என்றோ எதிர்ப்பார்த்தேன். படம் முழுக்க ராணுவ அடையாளங்களையும், தேசிய அடையாளங்களையும் பதிவுபண்ணியிருக்காங்க, ஆனால் அதற்கான என்.ஓ.சி எதுவும் வாங்கவில்லை. அதையெல்லாம் அவர்கள் வாங்கியிருக்கவேண்டும் தானே, இதற்கு முன்னர் வந்த அமரன் திரைப்படம் அதையெல்லாம் பெற்றுத்தானே ரிலீஸ் செய்திருந்தாங்க. இந்த பிரச்னையில் அரசியலில் விஜய்க்கு அனுபவமின்மையும், பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இருக்கும் அனுபவமின்மையும் தான் வெளிப்பட்டுள்ளது. அவர்களுக்கு சென்சார் சார்ந்த எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் போனதை தான் இது காட்டுகிறது என்று கூறினார்.
மேலும் விஜய் தன்னுடைய பிரச்னைக்கு கேள்வி எழுப்பாததை விமர்சித்த அவர், பூவே உனக்காக படத்திலிருந்து மெர்சல் படம் வரை முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்த விஜயின் ரசிகை நான். காவலன் திரைப்படம் வெளிவந்தபோதும் இவருக்கு பிரச்னை வந்தது, அப்போதெல்லாம் அவரை பார்க்கும்போது பாதிக்கப்பட்டவராக சிம்பதியோட பார்த்தோம். ஆனால் இன்றைக்கு அவர் அனைத்திற்கும் கம்முனு அமைதியாகவே இருக்கிறார். தற்போது அவரை பாதிக்கப்பட்டவரா பார்க்கிறதா? இல்லை செயலிழந்துபோனவராக பார்ப்பதா? ஒருமாதிரி முடக்குவாதம் வந்தவர்போல இருக்கிறார். ஏன் இப்படி இருக்கிறார் என்று புரியவில்லை, அவருடைய பிரச்னைக்கே அவர் குரல் எழுப்பவில்லை என்றால், எங்களுடைய பிரச்னைக்கு எப்படி அவர் குரல் எழுப்புவார் என விமர்சித்தார்.