செய்தியாளர் முகம்மது ரியாஸ்
1929ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில், இந்தியா பங்கேற்கத் தொடங்கியதே 1957ஆம் ஆண்டிலிருந்துதான். அன்று முதல் இன்று வரை இந்தியாவிலிருந்து ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பிவைக்கப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை 58.
அதில் அதிகபட்சமாக இந்தி மொழியிலிருந்து 32 படங்கள் போயிருக்கின்றன. அடுத்த இடத்தில் இருக்கிறது தமிழ். தமிழிலிருந்து மொத்தம் 10 படங்கள் ஆஸ்கருக்குச் சென்றிருக்கின்றன. மலையாளத்திலிருந்து 4, மராத்தியிலிருந்து 3, உருதுவிலிருந்து 3, வங்கத்திலிருந்து 2, குஜராத்தியிலிருந்து 2, அசாமி, தெலுங்கிலிருந்து தலா ஒரு படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழிலிருந்து 1969ஆம் ஆண்டில் தெய்வ மகன் , 1987இல் நாயகன், 1990இல் அஞ்சலி, 1992இல் தேவர் மகன், 1995இல் குருதிப்புனல், 1996இல் இந்தியன், 1998இல் ஜீன்ஸ், 2000இல் ஹே ராம், 2016இல் விசாரணை, 2021இல் கூழாங்கல் ஆகிய படங்கள் ஆஸ்கர் தேர்வுக் குழுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பிவைக்கப்பட்ட பெருமையைப் பெற்றவை. தமிழிலிருந்து கமலின் படங்களே அதிக எண்ணிக்கையில் ஆஸ்காருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
“வடக்கே பல மாநில திரைப்படத்துறையை இந்தி கபளீகரம் செய்துவிட்டது. ஆனால், தென் மாநிலங்கள் கலைத்துறையிலும்கூட இந்தி ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், இந்திக்கு அடுத்தபடியாக அதிகம் பொருளீட்டும் மொழிப்படங்களாக, தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் இருக்கின்றன. ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படங்கள் பட்டியலில் இந்திக்கு அடுத்த நிலையில் தமிழ் இருப்பதற்குக் காரணமும் அதுவே” என்கிறார்கள் தென்னிந்திய திரைப்பட ஆய்வாளர்கள்.