தங்கக் கடத்தலில் கைது | கன்னட நடிகை தாக்கப்பட்டாரா? வைரலாகும் புகைப்படம்!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது வீட்டில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளானது. நடிகை ரன்யாவிடமிருந்து மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை அவர் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கக் கட்டிகளை கடத்தி வரும் குருவி போல் நடிகை ரன்யா ராவ் செயல்பட்டு வந்ததும், ஒரு கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்து கொடுத்தால் அவருக்கு 5 லட்சம் ரூபாயை கடத்தல் கும்பல் கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கன்னட நடிகை ரன்யா ராவ் வீங்கிய கண்கள் மற்றும் காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், அவர் கைது செய்யப்பட்ட பின்பு தாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தைத் தூண்டியுள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி பதிலளித்துள்ளார்.
அவர், ”இந்த விஷயத்தை விசாரிக்குமாறு கமிஷனருக்கு அவர் கடிதம் எழுதினால் அல்லது எனக்கு கடிதம் அனுப்பினால், நாங்கள் அவருக்கு உதவவும், அவருக்கு ஆதரவளிக்கவும், முறையான விசாரணை நடத்தவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவோம். கமிஷனால் செய்யக்கூடியது அவ்வளவுதான். அவர் புகார் கேட்கவோ அல்லது பதிவு செய்யவோ இல்லை என்பதால், நான் மேற்கொண்டு கருத்து தெரிவிக்க முடியாது. தாக்குதலை யார் செய்திருந்தாலும் அப்படிச் செய்திருக்கக் கூடாது. யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. விசாரணையை நாம் அனுமதிக்க வேண்டும், சட்டம் அதன் போக்கில் செல்லும். யாரையும் தாக்க யாருக்கும் உரிமை இல்லை, அது ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, ஆனால் நான் அதை முற்றிலும் எதிர்க்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.