T rajender, Ilayaraja  X
சினிமா

23 ஆண்டுகள் கழித்து இளையராஜா செய்திருக்கும் விஷயம்!

டி.ராஜேந்தர் இசையில் 23 ஆண்டுகள் கழித்து மற்றொரு இசையமைப்பாளருக்காக குரல் கொடுத்துள்ளார், இசைஞானி இளையராஜா.

Johnson

’சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி, தற்போது ‘கன்னடத்து பைங்கிளி’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக புதுமுகங்களான அமல் அஜித் மற்றும் ஆதியா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாகவும் ‘கன்னடத்து பைங்கிளி’ அமைந்துள்ளது.

shooting spot

இதில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சமாக, சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்துள்ளனர். அதுவும் படத்தில் கணவன் – மனைவியாகவே இருவரும் தோன்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிக்கும் முக்கியமான வேடத்தில் பாக்யராஜ் நடித்துள்ளார்.

தமிழ்நாடு – கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990-களில் நடைபெற்றதாக கூறப்படும் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பன்முக கலைஞரான டி. ராஜேந்தர் இசையமைத்துள்ளார். இதில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான மற்றொரு சிறப்பாக, டி.ஆர். இசையில் முதன்முறையாக இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இதனால் படத்தின் இசை குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Shooting spot

இளையராஜா தன்னுடைய இசையை தவிர மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் பாடுவது மிக அரிதான ஒன்றுதான். தனது மகன்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் இசையில் சில பாடல்களை பாடியுள்ளார். அவர்கள் தவிர எஸ் பி பாலசுப்ரமணியம் இசையில் உருவான `உன்னை சரணடைந்தேன்' படத்தில் ஒரு பாடலை பாடினார். அதற்கு பிறகு வேறோர் இசையமைப்பாளர் இசையில் இளையராஜா பாடுவது இப்போதுதான். இன்னும் சொல்லப்போனால் தன் மகன்களின் இசை தவிர வேறொரு இசையமைப்பாளர் இசையில் இளையராஜா பாடுவது 23 ஆண்டுகள் கழித்து டி ராஜேந்தர் இசையில் பாடியுள்ள இந்தப் பாடல் தான்.