விஜய்-திரிஷா நடிப்பில் ஹிட்டான படம்.. மகன் ஜேசனுக்காக ரீரிலீஸ் ஒத்திவைப்பு!
தமிழ் ரீரிலீஸ் கலாச்சாரத்தில் கில்லி, சச்சின் வெற்றிக்குப் பின், விஜய்-திரிஷா ஜோடி நடித்த ‘திருப்பாச்சி’யும் மீண்டும் திரைக்கு வர திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது திருப்பாச்சி ரீரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் அண்மைக் காலமாக பழைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் மெருகேற்றி, மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் Re-release கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று வருகிறது. அப்படி சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் கில்லி, சச்சின் திரைப்படங்கள் 10 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியிருந்தன. அதிலும் ரீரிலீஸிலும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கில்லி திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த ரீரிலீஸ் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
இந்தவரிசையில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திருப்பாச்சி திரைப்படமும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. பேரரசு இயக்கத்தில் அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக வெளிவந்த இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக வந்து ஹிட்டடித்தது. இப்படத்தில் இடம்பெற்ற அண்ணன்-தங்கை செண்டிமண்ட்டும் ‘என்ன தவம் செஞ்சிபுட்டோம்’ என்ற பாடலும் இன்றுவரை தமிழ்சினிமா ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்துவருகிறது. நடிகர் விஜயை அண்ணனாக பெண் ரசிகைகள் கொண்டாடும் இமேஜும் இந்த திரைப்படத்தின் மூலமே வலுவானதாக மாறியது.
இந்நிலையில் தான் அக்டோபர் 1ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட திருப்பாச்சி திரைப்படம், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்மா திரைப்பட ரிலீஸை ஒட்டி தள்ளிப்போய் உள்ளது.
திருப்பாச்சி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “அக்டோபர் முதல் நாள் திரையரங்கில் மீண்டும் வெளியாகவிருந்த 'திருப்பாச்சி' திரைப்படத்திற்கு நீங்கள் அளித்துவரும் மாபெரும் வரவேற்பிற்கும், அன்பிற்கும் நன்றி. தற்போதைய சூழலில், பல புதிய திரைப்படங்கள் திரைக்கு வரத் தயாராக உள்ளதால், அந்தப் புதிய படைப்புகளை முழுமையாக ஊக்குவிக்கவும், தமிழ்த் திரையுலகின் சீரான வளர்ச்சிக்கு வழிவிடவும், 'திருப்பாச்சி' திரைப்படத்தின் மறுவெளியீட்டைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருப்பாச்சி ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜயின் ரசிகர்களுக்கு முக்கிய சர்ப்ரைஸ் இருப்பதாக தெரிவித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம், திரைப்படத்திற்குள் உங்களுக்காக ஒரு சிறப்பான 'சர்ப்ரைஸ்' காத்திருக்கிறது. அது உங்கள் திரையரங்கக் காட்சியனுபவத்தை மேலும் பெருவிழாவாக மாற்றும்” என தெரிவித்துள்ளது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

