2025ம் ஆண்டுக்கான ‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள்’ (Telangana Gaddar Film Awards) வழங்கும் விழா உகாதி தினமான நேற்று மாலை நடைபெற்றது. இதில் கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ (Paidi Jairaj Film Award) விருது வழங்கி கெளரவம் அளிக்கப்பட்டது. இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது. மேலும் இன்று 'பான்-இந்தியா சினிமா' (Pan-India Cinema) கொண்டாடப்படும் வேளையில், பல மொழிகளில் கமல் ஹாசன் அவர்கள் ஆரம்ப காலத்தில் செய்த சாதனைகளே அதற்கு உண்மையான அடித்தளமாக உள்ளது. அவரது புதுமையான கதைக்களன்கள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் என கமல்ஹாசன் இந்திய சினிமாவைத் தொடர்ந்து செதுக்கி வருவதையும் இந்த விருது கௌரவித்தது. தெலுங்கானா முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி அவர்கள், இந்த விருதை கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் கமல்ஹாசன் பேசிய போது "இதுவும் (தெலுங்கு சினிமா) என் குடும்பம் தான், முன்பு சென்னையில் இருந்தார்கள், இப்போது இடம் பெயர்ந்துள்ளார்கள். என்னை பொறுத்தவரை எல்லாம் ஒரே துறைதான். ANR நடித்த ஸ்ரீமந்துடு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற 16 வயதில் ஹைதராபாத்துக்கு முதல்முறை வந்தேன். அதனால் தான் தசாவதாரம் படத்தில் `Entho Chinnadi Jeevitham' (ஸ்ரீமந்துடு பட பாடல்) பாடலை பயன்படுத்தி இருப்பேன். அப்போதிருந்து ஹைதராபாத்தில் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.
சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுக்கு வழங்கப்பட்ட விருதை அவர் சார்பாக நான் பெற்றுக் கொண்டே போது, அவருடன் நான் பணியாற்றிய `Sommokadidhi Sokokadidhi' படத்தின் நினைவு வந்தது. எல்லா பணிகளையும் அவர் செய்தார், விருதை மட்டும் நான் பெற்றுக் கொண்டேன். அதுதான் அந்தப் படத்தின் தலைப்புக்கு அர்த்தமும் கூட. அவரை எனக்கு பிடித்துப் போக, அவருடைய பெயரும் என் தந்தையின் பெயர் போலவே இருக்கிறது என்பதற்காக அல்ல. என் தந்தை பெயரும் ஸ்ரீனிவாசன். நான் சினிமாத்துறையில் சந்தித்ததிலேயே இளமையான மூத்தவர் அவர் தான். சிரஞ்சீவியும் நானும் சகோதரர்கள். அரசியலில் அவர் எனக்கு மூத்தவர், சினிமாவில் இளையவர். நாங்கள் முதன்மை நடிகர்களாக 70களில் மாறினோம். இப்போதும் 70களில் தான் இருக்கிறோம், ஆனால் காலத்தால் அல்ல வயதால்.
ரேவந்த் அவர்களே இந்த விருதுகளுக்கு கத்தார் அவர்களின் பெயரை வைத்ததற்கு நன்றி. அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இப்படி ஒரு விஷயம் நடக்கும் என 45 வருடங்களுக்கு முன் யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். அது நடப்பதில் மகிழ்ச்சி. ஒரு கவிஞர், புரட்சியாளரை நீங்கள் கௌரவிப்பதன் மூலம் எங்கள் அனைவரையும் கௌரவித்திருக்கிறீர்கள். ஒன்றிணைப்பதில் வல்லவரான உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிமேல் கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என்ற பிரிவினைகள் இல்லாமல் இந்திய சினிமாவாக ஒன்றுபட வேண்டும். அதனை அளிக்க நீங்கள் துவங்கி இருக்கிறீர்கள். அதற்கு நாங்களும் துணைநிற்போம். இது அடுத்த தலைமுறையில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்." என்றார்.