இந்த ஸ்பை திரில்லரில் எது நிஜம்.. எது பொய்? - Dhurandhar The Revenge Review | Ranveer Singh
இந்த ஸ்பை திரில்லரில் எது நிஜம்? எது பொய்?(2.5 / 5)
இந்திய உளவாளி பாகிஸ்தானில் தன் சாகசங்களைத் தொடர்வதே Dhurandhar: The Revenge
துரந்தர் பாகம் ஒன்று, ஹம்சா அலி மஸாரி என்ற ஜெஸ்கிரத் சிங் ராங்கி (ரன்வீர் சிங்) இந்திய உளவுத்துறை அதிகாரி அஜய் சன்யால் (மாதவன்) மூலம் பாகிஸ்தானுக்கு உளவாளியாக அனுப்பப்பட, அவர் லையாரியை கட்டுக்குள் வைத்திருக்கும் ரஹ்மான் தாக்கித் (அக்ஷய் கண்ணா) குழுவில் இணைத்தார். மெல்ல மெல்ல அந்த குழுவின் நம்பிக்கையைப் பெற்று, பல குழப்பங்களை விளைவித்து இறுதியில் ரஹ்மானை கொலை செய்வதோடு நிறைவடைந்தது. இந்த பாகத்தில் ஜெஸ்கிராத் எப்படி ஹம்சாவாக மாற்றப்பட்டான் என்ற பின்னணி கதை சொல்லப்படுகிறது. திட்டமிட்டபடி லையாரியின் தலைவனாக மாறுகிறான். பல்வேறு தீவிரவாத தாக்குதல்களைச் செய்த நபர்களை அழிப்பதுதான் அவரின் மிஷன். இந்த ஆபத்தான மிஷனை எப்படி செய்து முடித்தார், அதில் எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன என்பதெல்லாம்தான் இந்த 4 மணிநேர படத்தின் கதை.
முதல் பாகத்தைப் போலவே நிஜ சம்பவங்கள் பலவற்றை கலந்து கட்டி ஒரு ஸ்பை த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் ஆதித்யா தர். 4 மணிநேர நீளம் என்பது எந்த இடத்திலும் இடையூறாக இல்லாமல் ஒரு சுவாரஸ்யமான படத்தைக் கொடுத்ததிலேயே வென்று விடுகிறார்.
நடிப்பாக இந்தப் பாகத்திலும் கவர்வது ஹம்சாவாக வரும் ரன்வீர் தான். ஆக்ஷன், எமோஷன், துரோகம், இழப்பு எனப் பல்வேறு உணர்வுகளைக் காட்ட பிரமாதமான களம், அதில் புகுந்து விளையாடி இருக்கிறார். உணர்வுகளை மறைத்துக்கொண்டு வாழ்வது, மறைக்கவே முடியாமல் சில இடங்களில் உடைந்து போவது என கமர்ஷியல் படத்திலும் அவரின் நடிப்புத் திறமையைக் காட்ட அட்டகாசமான வாய்ப்பு. மாதவன் ஒரு கறாரான அதிகாரியாக அசத்தி இருக்கிறார். இந்தப் பாகத்தின் மெயின் வில்லன் அர்ஜூன் ராம்பாலுக்கு அழுத்தமான ரோல் இல்லை என்றாலும் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. போலீஸ் பாத்திரத்தில் சஞ்சய் தத், மனைவியாக சாரா எல்லோரும் கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பு. இந்தப் பாகத்திலும் தனித்து அசத்துவது அரசியல்வாதியாக வரும் ராகேஷ் பேடி. அதிலும் அவரைவைத்து வரும் டிவிஸ்ட் எல்லாம் மிரட்டல்.
இந்தப் படத்தில் வரும் சம்பவங்கள், அதன் உள்நோக்கம் அவை எல்லாம் படம் பார்க்கையில், இடையூறாகவே இல்லாமல் படத்தை நகர்த்தியதில் தெரிகிறது இயக்குநர் ஆதித்யா தர் திறமை. சிவக்குமார் படத்தொகுப்பு, விகாஷ் ஒளிப்பதிவு, சாஸ்வத் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்ட உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். அது படத்தை மிகுந்த தரத்துடன் கொடுத்திருக்கிறது.
இப்படத்தில் இருக்கும் சிக்கல்கள் எனப் பார்த்தால், 4 மணிநேர நீளம் எங்கும் சலிப்பு வரவில்லை என்றாலும், இந்தக் கதைக்கு 4 மணிநேரம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. சுவாரஸ்யமாகவே இருந்தாலும், படத்தின் சில காட்சிகள் தேவைக்கு அதிகமாக இருக்கிறதே என தோன்றுகிறது. கடந்த பாகத்தில் ரஹ்மான் தாக்கித் என்ற ஒரே ஒரு வில்லன். அவனை வீழ்த்தும் கதையில் அத்தனை சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தன. ஆனால் இதில் டிப்பர் லாரியில் அள்ளும் அளவுக்கு வில்லன்கள் இருந்தும் வெறும் வன்முறை மட்டும்தான் இருக்கிறதே தவிர, புதிய காட்சிகள் எதுவும் இல்லை. விதவிதமாக கொலைகள் மட்டுமே இருக்கிறது. `ஏ' சான்றிதழ் என்பதை மனதில்வைத்துச் சென்றாலும்கூட படத்தில் வரும் வன்முறை அதிர்ச்சியைத்தான் கொடுக்கிறது.
படம் பேசும் கருத்துரீதியான சிக்கல் கடந்த பாகத்தைப் போலவே இந்தப் பாகத்திலும் தொடர்கிறது. இந்தியா - பாகிஸ்தான் என்ற மோதல்தான் களம் என்ற உடன், இயக்குநர் இப்படத்தின் மூலம் எடுத்திருக்கும் நிலைப்பாடு சரியானதாக இல்லை. அல்லது ஒரு சார்பாக இருக்கிறது. நிஜ சம்பவங்களையும் மையப்படுத்திய கதை என்பதால், படத்தில் சொல்லப்படுவதில்லை; எது நிஜம், எது பொய் என்ற தெளிவு பார்வையாளர்களுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. ஒருவகையில் இது பார்வையாளர்களை மூளைச் சலவை செய்யும் படமாகவும் இருக்கிறது. அதீத இஸ்லாமிய வெறுப்பை படம் கையில் எடுத்திருப்பது அச்சத்தை அளிக்கிறது.
இப்படத்தில் மோடி பிரதமராக பதவி ஏற்பது, பண மதிப்பிழப்பை அவர் அறிவிப்பது போன்ற காட்சிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. `இனி பாகிஸ்தானின் விதியை இந்தியா முடிவு செய்யும்' என்ற வசனத்தை ஹீரோ சொல்கிறார், `அந்த டீக்கடைகாரன் வந்ததுல இருந்து நம்ம மக்களுக்கு பயம் அதிகமாகிடுச்சு' என்ற வசனத்தை ஒரு பாகிஸ்தானி பாத்திரம் சொல்கிறது. பாலிவுட் தொடர்ந்து பிரசாரப் படங்களை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவற்றிலிருந்து ’துரந்தர்’ எப்படி வேறுபடுகிறது என்றால், இதுவரை எடுக்கப்பட்ட பிரசார படங்களில் செய் நேர்த்தியோ, சுவாரஸ்யமோ இருக்காது. ஆனால் ’துரந்தர்’ ஒரு பக்கா கமர்ஷியல் படம். அதன்மூலம் பரப்பப்படும் எந்த ஒரு கருத்துக்கும் மிக நீண்டவீச்சு கிடைக்கும். இத்தகைய படங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது என்ற அதேவேளையில் அதன் ஆபத்துகளையும் நாம் விளங்கிக் கொள்வது அவசியமாக இருக்கிறது.
மொத்தத்தில் இப்படம் சுவாரஸ்யமாக இருக்கிறதா என்றால், கண்டிப்பாக சுவாரஸ்யமாக இருக்கிறது. அதேநேரம் படத்திலிருக்கும் வன்முறையும், பிரசாரதன்மையும் அதை விஞ்சி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

