ரவி மோகன் நடிப்பில் உருவாகிவரும் `கராத்தே பாபு' படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியான நிலையில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முறையாக ரவியை அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவான விஷயங்களை சொல்லி வருகிறார்கள். இதில் ஹீரோவாக கலக்கும் அதே நேரத்தில், பராசக்தி படத்தில் வில்லனாக மிரட்டும் டீசரையும் நேற்று பார்த்தோம்.
ஹீரோவை கவனிக்கும் அதே வேளையில் இயக்குநர் கணேஷ் பாபு, `டாடா' என எமோஷனலான படத்தை கொடுத்து, இரண்டாவது படத்திலேயே பொலிட்டிகல் களத்தை `கராத்தே பாபு' மூலம் கையில் எடுத்திருக்கிறார். என்னென்ன பேசுகிறது இந்த டீசர்... பார்க்கலாம்
எதிர்க்கட்சி தலைவரை பேச சொல்வதில் இருந்து துவங்குகிறது கராத்தே பாபு டீசர். எதிர்க்கட்சி தலைவராக நடித்திருக்கும் கே எஸ் ரவிக்குமார் எழுந்து "மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, எதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரை தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்? பெயரில் என்ன இருக்கிறது?" எனக் கேட்கிறார்.
முதலமைச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நாசர் அதற்கு பதிலளிக்கும் விதமாக "பெயர்கள் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. மனிதத் தொடர்புகளின் அடிப்படை பங்கு" என பெயரின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சிறிய உரையாற்றுவார்.
அதன் இறுதியில் "மெட்ராஸ் மாகானம் தமிழ்நாடாக மாறியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தமிழ்நாடு தமிழகம் ஆகாமல் இருக்க பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது" என சொல்வார்.
இதற்கு பதிலளிக்கும்படி, ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் சண்முக பாபு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரவி மோகன் பேசும் போது "முதலமைச்சர் அவர்கள் மிக அழகாக பெயரின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். அவரின் தமிழ் புலமைக்கு என்றும் தாசனே" எனப் பேசிவிட்டு,
தன்னுடைய பெயர் பற்றி சொல்ல ஆரம்பிப்பார் "உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாக தான் தெரியும். ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அந்தப் பெயர்" என சொன்னதும் கராத்தே பாபு என படத்தின் தலைப்பு திரையில் தோன்றும்.
இதில் சில விஷயங்கள் படத்தின் கதை சார்ந்த அம்சங்களாக தோன்றினாலும், சில விஷயங்கள் நிஜமான சம்பவங்கள் அல்லது மனிதர்களோடு ஒத்துப் போகிறது. முதல் விஷயம் எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் போன்ற கதாப்பாத்திரங்கள் யாரைக் குறிக்கிறது என்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கிறது.
"மெட்ராஸ் மாகானம் தமிழ்நாடாக மாறியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தமிழ்நாடு தமிழகம் ஆகாமல் இருக்க பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது" என்ற வசனம் நிகழ்காலத்தில் தமிழ்நாடா, தமிழகமா என விவாதிக்கப்பட்டதை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.
கடைசி விஷயம்... பெயர். இந்த டீசரின் நோக்கமே படத்தின் பெயரை அறிவிப்பதுதான். கூடவே பெயர் சம்பந்தப்பட்டு படத்தில் ஏதாவது விஷயம் கூட இருக்கலாம். ஆனால் சமீபத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என்பதிலிருந்து ரவி மோகன் என மாற்றியதை குறிப்பிடும்படியாக "17 வருடங்களுக்கு முன் ஆர் கே நகர் மக்களால் எனக்கு கொடுக்கப்பட்ட பெயர் அது. அந்த பெயர் தான் இன்று உங்கள் முன் என்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகதான் தெரியும். ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது" என்ற வசனம் வைக்கப்பட்டிருக்கலாம்.
இந்தப் படத்தின் இன்னொரு சுவாரஸ்யம் என்ன என்றால், இதில் ஹீரோயினாக நடிப்பது தவ்தி ஜிவால். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள். எது எப்படியோ படத்தில் கண்டிப்பாக ஏதோ அரசியல் விஷயத்தை வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் தெளிவாக சொல்லியிருக்கிறது இந்த டீசர்.