விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, தேர்தல் ஆணையத்தால் படம் தடுத்து நிறுத்தப்படலாம் என கூறியுள்ளார். அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகள் உள்ளதால், படம் வெளியீடு தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயின் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம், கடந்த ஜனவரி 9ஆம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த தணிக்கை வாரியம் படத்தை நிறுத்திவைத்துள்ளது. இவ்விவகாரம் நீதிமன்றம் வரை சென்றநிலையில், படம் எப்போது வெளியாகும் என்று தெரியாத நிலையே உள்ளது.
இந்தசூழலில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இதற்கு மேல் படம் தேர்தலுக்கு முடிந்துதான் திரைக்கு வரும் என்ற நிலை உள்ளது. ஒருவேளை திரைப்படம் தேர்தலுக்கு முன்வந்தால் அதை தேர்தல் ஆணையத்தால் தடுத்து நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது ஜனநாயகன் படம் வெளிவருமா என்ற கேள்வி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, ஒரு நடிகனாக இருக்கும் வேட்பாளரின் (விஜய்) சினிமாவை (ஜனநாயகன்) வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள்
இது நல்ல கேள்விதான். ஆனால் இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் கேட்டு பதிலளிக்கிறேன்” என கூறியிருந்தார்.
இந்தசூழலில் இதுகுறித்து புதியதலைமுறை உடனான பிரத்யேக உரையாடலில் பதிலளித்திருக்கும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை தேர்தல் ஆணையத்தால் நிறுத்திவைக்க முடியும் என தெரிவித்துள்ளார். விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், தணிக்கை சான்றிதழ் கிடைத்தாலும் படம் தேர்தலுக்கு முன்னர் வெளியாகாத நிலையே இருப்பதாக சொல்லப்படுகிறது.