ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022இல் வெளியான கன்னடப் படம் `காந்தாரா'. கன்னடத்தில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியான படம் மிகப்பெரிய ஹிட்டானது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பும், வசூலையும் பார்த்த தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் `காந்தாரா' படத்தின் இன்னொரு பாகத்தை எடுக்க முடிவு செய்தது.
அதன்படி, ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் பணிகள் 2023 நவம்பரில் தொடங்கப்பட்டு இந்தாண்டு ஜூலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. `காந்தாரா' படத்தின் ப்ரீகுவலாக மன்னர் காலகட்ட படமாக உருவாகியிருக்கிறது இந்தப் பாகம். மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (செப்.22) வெளியானது. இதற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தச் சூழலில் ’காந்தாரா’ படம் பற்றி இணையத்தில் உலவிய ஒரு போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது. அந்தப் போஸ்டரில், "காந்தாரா படத்தைப் பார்க்க வேண்டுமென்றால் இந்த மூன்று விதிமுறைகளைப் பின்பற்றவும். 1.மது அருந்தக் கூடாது, 2.புகைபிடிக்கக் கூடாது, 3. அசைவ உணவைச் சாப்பிட்டு வந்து பார்க்கக் கூடாது. இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தால், பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பல்வேறு எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் சமூகவலைதளங்களில் வெடித்தன.
இந்நிலையில் நேற்று, ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றபோது, இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட, அதற்குப் பதிலளித்திருக்கும் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, "உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது, யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர். எங்கள் கவனத்திற்கு அது வந்தபோது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. படத்தின் பிரபல்யத்துக்கு இடையே தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சிலரின் வேலைதான் இது. இதற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று விளக்கமளித்திருக்கிறார்.