’காந்தாரா’ படப்பிடிப்பின்போது கவிழ்ந்த படகு | உயிர் தப்பிய நடிகர் ரிஷப் ஷெட்டி!
கன்னட திரைப்படமான காந்தாரா
கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான காந்தாரா, உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று, சுமார் 400 கோடி வசூலை ஈட்டியது. கர்நாடகாவில் வழிபடும் பஞ்சூர்லி தெய்வமும், பூதகோலா நடனமும் காந்தாரா படத்தின் மெகா ஹிட்டுக்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து, காந்தாரா முதல் பாகத்திற்கு முந்தைய கதையை, காந்தாரா சாப்டர் ஒன் என்ற பெயரில் படமாக்கி வருகிறார் நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்த படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் ராகேஷ், கடந்த மாதம் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே, திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதேபோல் துணை நடிகர் கபில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் ஷிவமோகாவில் படப்பிடிப்புக்காக விடுதியில் தங்கியிருந்த நடிகர் விஜூ, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், படப்பிடிப்பில் இருந்த 30 பேர் உயிர் தப்பிய சம்பவம் மேலும் அதிர்ச்சியூட்டியுள்ளது.
மாஸ்திகட்டே அருகே உள்ள மாணி அணை நீர்த்தேக்கப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, நடிகர் ரிஷப் ஷெட்டி உட்பட 30 பேர் பயணித்த படகு திடீரென, ஆற்றில் கவிழ்ந்தது. இதில், அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அதேசமயம், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கேமராக்கள் மற்றும் படப்பிடிப்பு உபகரணங்கள் நீரில் மூழ்கி நாசமாயின. அனுமதியின்றி நீர்த்தேக்கப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியதாக கூறி, படக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், படக் குழுவினர் சென்ற பேருந்து, கொள்ளூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. காந்தாரா படப்பிடிப்பின்போது ஏற்படும் தொடர் இடையூறுகளால், பஞ்சூர்லி தெய்வம் வைரலாகி வருகிறது. அந்த தெய்வத்தின் கோபமே, தொடர் துயரங்களுக்கு காரணம் என கடவுள் நம்பிக்கைக் கொண்டோர் இடையே பேசப்படுவதால், படக்குழுவினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.