காந்தாரா 2 | படத்தில் பணியாற்றிய மூவர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. அதிர்ச்சியில் படக்குழு!
தென்னிந்திய சினிமாவே பெரிதும் கண்டுகொள்ளதாக கன்னட சினிமாவில் உருவாகி, இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது, காந்தாரா... பழங்குடியின மக்களின் கதையும், அவர்களின் தெய்வ வழிபாட்டு முறையையும் மையமாக வைத்து படமாக்கப்பட்ட ’காந்தாரா’ படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மலையாள நடிகர் விஜு.வி.கே, படப்பிடிப்புக்காக விடுதியில் தங்கியிருந்தார். அங்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ’காந்தாரா’ படக்குழுவில் இது முதல் மரணம் அல்ல.. கடந்த 12ஆம் தேதியும் ஒரு துயர செய்தியை எதிர்கொண்டது, ’காந்தாரா’ படக்குழு.
படத்தில் பணியாற்றிய நகைச்சுவை நடிகர் ராகேஷ் பூஜாரி, நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பதறிப்போன உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.. மே 6ஆம் தேதியும், இதேபோன்றதொரு மரண செய்தி, ’காந்தாரா’ படக்குழுவை அதிர்ச்சியில் உறைய வைத்தது. படத்தில் பணியாற்றிய கபில் என்பவர், உடுப்பி அருகே உள்ள நதியில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழ்ந்தார்... ’காந்தாரா’ படத்தில் வரும் மர்மங்களைப் போலவே, படத்தில் பணியாற்றிய மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர் மரணங்களால் படக்குழு அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.