vijay
vijay goat song
சினிமா

”போதைப்பொருள், ரத்த வெறியைத் தூண்டுகிறார் நடிகர் விஜய்” - GOAT பட பாடல் குறித்து போலீசில் புகார்!

யுவபுருஷ்

செப்டம்பர் 5ல் ரிலீஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT - The Greatest Of All Time படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

படம் குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வபோது வெளியாகி வரும் சூழலில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியானது. அப்பா, மகன் லுக்கில் விஜய் இருப்பது போல போஸ்ட்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதையடுத்து, 4 தினங்களுக்கு முன்பாக புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.

பாடல்களில் விஜய் வைக்கும் விமர்சனம்!

இதற்கிடையே, நேற்றைய தினம் கோட் படத்தின் முதல் பாடல் நேற்று மாலை வெளியானது. ஹீரோவாக இருந்து, மக்கள் இயக்க தலைவராக வளர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக வளர்ந்திருக்கும் விஜய்யின் இந்த பாடல் பேசு பொருளாகியிருக்கிறது. ‘நான் ரெடி-தான் வரவா’ என லியோ படத்தில் பாடல் பாடிய விஜய், சொன்னது போலவே அரசியலுக்கு வந்தார். இப்போது, பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா, campaign தொறக்கட்டுமா என அதிரடி காண்பித்திருக்கிறார்.

தனது ஒவ்வொரு படத்திலும் விஜய் பாடுவதற்காகவே ஒரு பாடல் எழுதப்படுவது சமீப காலமாக வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, தனது அரசியல் சார்ந்த கருத்துக்களையும், விமர்சனங்களையும் தனது படத்தில் மட்டுமல்லாது, தான் பாடும் பாடல்களிலும் பதிவு செய்து வருகிறார் நடிகர் விஜய். அந்த வகையில், அரசியல் என்ட்ரியைத் தொடர்ந்து, “பார்ட்டி தொடங்கட்டுமா? மைக்க எடுக்கட்டுமா ? குடிமக்க-தான் நம் கூட்டணி.. பார்ட்டி விட்டு போமாட்ட நீ” என்று தொடங்கி பல அழுத்தமான வரிகளை எழுதியுள்ளார் மதன் கார்க்கி.

டிஜிபி அலுவலகத்தில் விஜய் மீது புகார்!

ஒரு மதுக்கூடத்தில் நடக்கும் மகிழ்ச்சிக் கொண்டாட்ட சூழலில் பாடல் எழுதப்பட்டிருந்தாலும், அதன் ஒவ்வொரு வரியின் பின்னணியும் விஜய்யின் அரசியலை உணர்த்துவதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு படத்திற்கும் யாராவது ஒருவர் புகார் கொடுத்து வந்ததைப்போலவே, கோட் பட பாடல் வெளியானவுடன் சட்டென டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.

ஆன்லைனில் அவர் கொடுத்துள்ள புகாரில், “நடிகர் விஜய் பிரச்னையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்படுகிறார். லியோ படத்தில் கூட போதையை ஆதரித்து பாடலை வெளியிட்டார். தற்போது, தனது சொந்த குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் இருக்கிறது. பார்ட்டி ஒண்ணூ தொடங்கட்டுமா என்ற வரிகள் வரும்போது, தணிக்கை குழு வாரிய விதிகளின்படி போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக வரும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வர வேண்டும். ஆனால், இதில் வரவில்லை” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தனது புகாரில் முன்வைத்துள்ளார் அந்த நபர்.

படத்திற்காக மட்டுமே பேசுவதாக குற்றச்சாட்டு

தொடர்ந்து, “நடிகர் விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல், தன் படத்திற்காக வாயை திறக்கும் நடிகராக விஜய் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. மைக்கை கையில் எடுக்கட்டுமா போன்ற வரிகளில் தமிழ்நாடு அரசியலில் சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்றவர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை எடுக்கட்டுமா என ஒருவரை புண்படுத்தும் வகையில் பாடுகிறார். தனது பாடல்களில் இளைஞர்களிடம் ரத்த வெறியை தூண்டுகிறார்.

எனவே, விசில் போடு பாட்டை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும்படியும், மேலும் நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.