டிஜி தியாகராஜன் எக்ஸ் தளம்
சினிமா

பிரபலங்களின் இறுதிச்சடங்கில் ஊடகங்களின் செயல்பாடு.. தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் வைத்த வேண்டுகோள்!

“ஊடகங்கள் கார்களின் உள்ளேயும்.. நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்” என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியிருப்பதுடன், வேண்டுகோளும் விடுத்துள்ளது.

Prakash J

பிரபலங்களின் இறப்பு நிகழ்வுகளில், சமீபகாலமாக ஊடகங்களின் பங்கு அதிகரித்து வருகிறது. அதிலும் யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் போன்றவற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரபலங்களின் துக்க வீடுகளில் உள்ளே நுழையும் மீடியாக்கள், அங்கே அஞ்சலி செலுத்த வரும் பிற நபர்களை ஓடியோடிப் போய்ப் படம் பிடிக்கிறது. இது, பலருக்கும் நெருடலாக உள்ளது. அதாவது, ஓர் உயிரை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லவும், உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் வருகை தரும் பிற பிரபலங்களை, சில மீடியாக்கள் புகைப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் அத்துமீறிச் செயல்படுகிறார்கள்.

சமீபத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமாகி இருந்தார். அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திரைப் பிரபலங்களை காரில் இருந்து இறங்கி வருவதற்கு முன்னேயே ஓடிச் சென்று புகைப்படக்காரர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தது பேசுபொருளானது. இந்த நிலையில்தான் இதுதொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் டி.ஜி.தியாகராஜன் வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

tfapa

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பத்திரிகைகளுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார். அதில், “அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும். ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன். மரண வீடுகள் மௌனிக்கப்படவும்... துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும், துயர் கொள்ளவும் வேண்டியவை.

யாரோ இறந்துபோனார்... எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?! நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலுக்கிறது. ஊடகங்கள் கார்களின் உள்ளேயும்.. நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்?!

tfapa

அதுவும் முண்டியடித்துக்கொண்டு துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது?! இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும். அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும். கையில் கேமரா இல்லாமல். இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு முன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.