மனோஜ் பாரதிராஜா உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி!
இதய பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி நேற்றைய தினம் (25.3.2025) காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், வி.கே.சசிகலா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் கார்த்தி, சூர்யா, சீமான், வைரமுத்து ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், தற்போது தளபதி விஜய்யும் அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் , இவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றினயும் வெளியிட்டுள்ளார்.
அதில், “ மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா? பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதிப் பருவத்தில் பறந்து விட்டாயா? 'சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா' என்று உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா? உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்? "எனக்குக் கடன் செய்யக் கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன்செய்வது காலத்தின் கொடுமைடா" என்று தகப்பனைத் தவிக்கவிட்டுத் தங்கமே இறந்துவிட்டாயா? உன் கலைக் கனவுகள் கலைந்து விட்டனவா? முதுமை - மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம்தான். ஆனால், முதுமை வயதுபார்த்து வருகிறது; மரணம் வயதுபார்த்து வருவதில்லை சாவுக்குக் கண்ணில்லை எங்கள் உறக்கத்தைக் கெடுத்துவிட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும் “ என்று பதிவிட்டுள்ளார்.