ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் நடிக்கும் ‘பெத்தி’ படத்திற்காக ராம் சரண் எட்டு மாதங்கள் தினமும் கடுமையான பயிற்சி செய்து, உண்மையான மல்யுத்த வீரரைப் போல் கட்டுமஸ்தான உடலமைப்பை உருவாக்கியுள்ளார். ஐயப்பன் மாலை காலத்திலும் பயிற்சியை நிறுத்தாமல், முழுக்க சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்டு உடற்தகுதியை பராமரித்த அவரது ஒழுக்கம் இயக்குநர் புஜ்ஜி பாபுவை வியக்க வைத்துள்ளது.
ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா இயக்கிவரும் படம் `பெத்தி'. ரத்னவேலு ஒளிப்பதிவில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியானது. இதில் ராம் சரணின் கட்டுமஸ்தான உடலமைப்பு பெரிய அளவில் கவனம் குவித்தது.
ராம் சரண் உடலமைப்பு பற்றி கூறிய புஜ்ஜி பாபு சனா "படத்தில் உண்மையான மல்யுத்த வீரரின் உடலமைப்பைப் கொண்டு வருவதற்காக எட்டு மாதங்கள் கிட்டத்தட்ட எல்லா நாளும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார் ராம் சரண். உடல் தசைகளை மெருகேற்றுவது மட்டுமில்லை, கதாபாத்திரத்தின் உடல் மொழி, நடை என அனைத்தையும் முழுமையாக உள்வாங்க வேண்டியிருந்தது.
உடற்பயிற்சி மட்டுமல்ல, மிக கட்டுப்பாடான உணவு முறையை மேற்கொண்டார். அதில் மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், ஐயப்பனுக்காக அவர் மாலை போட்டிருந்த நேரத்திலும் அவர் தனது உடற்தகுதியைக் கவனித்துக் கொண்டார். அப்போது கடுமையான ஆன்மீக ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டியிருந்தாலும், ராம் சரண் ஒரு நாள்கூட பயிற்சியை நிறுத்தவில்லை. சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு தனது உடலைச் சிறப்பாகப் பராமரித்தார். இந்த உறுதியும் ஒழுக்கமும் பலரை வியக்க வைத்தது" எனக் கூறியிருக்கிறார்.