Bruce Willis pt web
சினிமா

Bruce Willis | ஹாலிவுட்டை கலக்கிய ஆக்ஷன் ஹீரோவின் இன்றைய பரிதாப நிலை!

2022ல் ப்ரூஸ் வில்ஸ்க்கு Aphasia என்ற பாதிப்பு இருந்ததாக கண்டறியப்பட்டது. காலம் செல்ல செல்ல வில்ஸ் நிலை மோசமானது. 2023ல் அவருக்கு ஏற்பட்டிருப்பது Frontotemporal Dementia (FTD) என்ற மறதி நோய் என கண்டறியப்பட்டது.

Johnson

ப்ரூஸ் வில்ஸ் பிரபல ஹாலிவுட் நடிகர். `Die Hard', `Pulp Fiction', `The Sixth Sense', `Unbreakable', `Ocean's Twelve' போன்ற பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்கள் இவர் நடித்தவையே. ப்ரூஸ் நடித்த படங்கள் அனைத்தும் மறக்க முடியாத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருப்பவை. ஆக்ஷன் படங்களில் தனித்துவமான படங்களை கொடுத்தவர் ப்ரூஸ். அப்படி அதிரடியாக படங்களை கொடுத்த நடிகரின் இப்போதைய நிலையை கண்டு ரசிகர்கள் அனைவரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

Bruce Willis

தனது 68வது வயதிலும் பரபரப்பாக நடித்து வந்தவருக்கு காத்திருந்தது சோகம். 2022ல் ப்ரூஸ் வில்ஸ்க்கு Aphasia என்ற பாதிப்பு இருந்ததாக கண்டறியப்பட்டது. இதனால் அவர் பேசவும் படிக்கவும் சிரமம் ஏற்படும் என சொல்லப்பட்டது. காலம் செல்ல செல்ல வில்ஸ் நிலை மோசமானது. 2023ல் அவருக்கு ஏற்பட்டிருப்பது Frontotemporal Dementia (FTD) என்ற மறதி நோய் என கண்டறியப்பட்டது. 

இந்த பாதிப்பின் அறிகுறிகளாக சொல்லப்படுவது, ஒரு நபரின் குணாதீசியத்தில் ஏற்படும் மாற்றங்கள், பேசுவதற்கு சிரமம்படுவது, பொதுவெளியில் மோசமாக நடந்து கொள்வது, முன்பு ரசித்து செய்த விஷயங்களில் நாட்டம் இல்லாமல் போவது, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நடப்பது, உணவு எடுத்துக் கொள்வதில் மாற்றம் எனப் பலவும். எனவே இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது, விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதால் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒய்வு பெற்றார் ப்ரூஸ் வில்ஸ். 

Bruce Willis

இப்போது 70 வயதாகும் ப்ரூஸ் வில்ஸ்க்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. உடலளவில் இயக்கம் இருந்தாலும், அவரது பேச்சு திறன், சுத்தமாக நின்றுவிட்டது. அவர் நடப்பதிலும் சிரமம் இருக்கிறது என்றே கூறப்படுகிறது. அவருடைய மூளை செயல்பாடு குறைந்துள்ளது, குடும்ப உறவுகளுடன் நேரம் செலவழித்தாலும் நீண்ட நேரம் பேச முடியாது. இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் FTDக்கு நிரந்தர மருத்துவம் இல்லை. குணப்படுத்த முடியாத ஒரு வியாதியாக தான் சொல்லப்படுகிறது. ப்ருஸின் மனைவி எம்மா ஹெம்மிங் வில்ஸ் மற்றும் குழந்தைகள் அவருக்காக முழு நேர பராமரிப்புகளை இதுவரை செய்து வந்தனர். இப்போது அவரை வீட்டிலிருந்து மாற்றி Dementia Care-க்கு அனுப்புவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ப்ருஸின் மனைவி எம்மா.

தன் கணவரோடு காதல் பற்றியும், அவருடனான வாழ்க்கை பற்றியும் மற்றும் அவருக்கு ஏற்பட்ட இந்த FTD பாதிப்பையும் பற்றி `Emma & Bruce Willis: The Unexpected Journey' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் ப்ரூஸின் மனைவி எம்மா ஹெம்மிங் வில்ஸ். செப்டம்பர் 9ம் தேதி இந்த புத்தகம் வெளியாக உள்ள நிலையில், அது தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார் எம்மா. அந்த பேட்டியில் ப்ரூஸ் வில்ஸை கவனித்துக் கொள்வதில் இருந்த எமோஷனல் சவால்கள் பற்றி பேசி இருந்தார். மேலும் ப்ரூஸை வீட்டில் இருந்து Dementia Care-க்கு அனுப்ப எடுத்த கடினமான முடிவை பற்றியும் பேசி இருந்தார். இது தொடர்பாக சில எதிர்ப்புகளை பொதுமக்கள் தெரிவித்தது பற்றி பேசும் போது "பராமரிப்பாளர்கள் நேரடி அனுபவம் பெற்றவர்கள். எனவே கருத்து மட்டுமே தெரிவிப்பவர்கள், எங்களை விமர்சிப்பது சரியானதல்ல. கருத்துக்கள் அதிகம் வருகிறதுதான். ஆனால் இதை செய்யாதவர்களுக்கு, பேசும் உரிமை இல்லை. எது சரி என்ற முடிவு சொல்ல கண்டிப்பாக உரிமை இல்லை" எனக் கூறியுள்ளார் எம்மா.

Bruce Willis

தன் கணவரை கவனித்துக் கொண்ட அனுபவத்தின் மூலம் FTD பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அது சார்ந்து உதவி தேவைப்படுவோருக்கு உதவும் பணிகளையும் செய்து வருகிறார் எம்மா ஹெம்மிங். திரையில் ப்ரூஸ் வில்ஸ் இல்லை என்ற கவலையை விட, படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு நபர், இப்போது பேச முடியாமல், நினைவுகளை மெல்ல மெல்ல இழந்து வருவது குறித்து ரசிகர்கள் பலரும் கவலை கொண்டுள்ளனர்.