ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர் 2' படத்தின் வெளியீட்டில் பல தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தி பதிப்பு மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, மற்ற மொழி பதிப்புகள் இன்னும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இயக்குநர் ரசிகர்களை ஸ்பாய்லர்கள் பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில் 1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' நாளை (மார்ச் 19) வெளியாக உள்ளது.
இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளது என்பதால் இந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. கூடவே இந்தியா முழுக்க இன்று Paid Premier எனப்படும் சிறப்பு காட்சி மாலை மற்றும் இரவு திரையிடப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் நேற்று இரவு வரை இப்படம் திரையரங்குகளுக்கு அனுப்பப்படவே இல்லை. இன்று காலையில் இந்தி பதிப்புக்கான முதல் பாதியும், மதியம் இரண்டாம் பாதியும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட பதிப்புகள் எதுவும் இன்னும் தியேட்டர்களுக்கு வரவில்லை. எனவே இன்று சிறப்புக்காட்சி இந்தியில் மட்டுமே திரையாகவுள்ளது.
என்னதான் இந்தி படத்தின் கன்டென்ட் வந்துவிட்டாலும், அதற்கான ஆங்கில சப்டைட்டில்கள் இன்னும் வரவில்லை எனவும் சிலர் சொல்கின்றனர். கூடவே வந்திருக்கும் கன்டென்ட் 2K தரத்தில் தான் வந்துள்ளது. 4K தரத்திலான பதிப்பு அடுத்த வாரம் தான் வரும் என சொல்லப்படுகிறது. இவ்வளவு பெரிய படத்தினை அனுப்புவதில் தாமதம், ஓவர் சீஸ் திரையரங்குக்கு அனுப்புவதில் தாமதம், ஐமாக்ஸ் பதிப்புக்கான கன்டென்ட் இன்னும் வரவில்லை என பலவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளது, திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலைக்குள் பிறமொழி பதிப்புகள் வந்தால் இன்று இரவு சிறப்பு காட்சி திரையாகும் என சொல்லப்படுகிறது.
இவ்வளவு களேபரங்கள் நடந்து வந்தாலும் படத்தின் இயக்குநர் ரசிகர்களுக்கு படத்தின் ஸ்பாய்லர்களை பதிவிடாதீர்கள், படத்தின் எண்ட் கிரெடிட்-க்கு அடுத்து வரும் காட்சியை பார்க்க தவறி விடாதீர்கள் என பதிவை வெளியிட்டுள்ளார். விரும்பிய மொழியில் படம் பார்க்க முடியாத ரசிகர்கள் பலர் தங்கள் அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் இப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 49 நிமிடங்களும், வெளிநாடுகளில் 3 மணிநேரம் 59 நிமிடங்களும் ஆக திரையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.