Nasreen Hashmi - Sharib Hashmi web
பாலிவுட் செய்திகள்

புற்றுநோயை வென்ற காதல்.. பாலிவுட்டில் ஒரு நிஜ சம்பவம்.. வைரலாகும் சினிமா தம்பதி! | Sharib Hashmi

பாலிவுட் பல கற்பனை ரொமான்டிக் கதைகளை சினிமாவாக பார்த்திருக்கிறோம், ஆனால் நிஜத்தில் ஷரிப் ஹாஸ்மி மற்றும் அவரது மனைவி நஸ்ரின் ஹாஸ்மி இடையிலான உண்மையான காதல் கதை மிக அழகானது.

Johnson

பாலிவுட் நடிகர் ஷரிப் ஹாஸ்மி மற்றும் அவரது மனைவி நஸ்ரின் இடையிலான காதல் கதை பலரின் மனதை கவர்ந்துள்ளது. 2003ல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், பல சிரமங்களை கடந்து, நஸ்ரின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, ஷரிப் அவருக்கு துணையாக நின்றார். இப்போது, ஷரிப் தனது சினிமா வாய்ப்புகளால் குடும்பத்தை முன்னேற்றுகிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷரிப் ஹாஸ்மி. டேனி பாயல் இயக்கிய `Slumdog Millionaire' படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர், தொடர்ந்து `Jab Tak Hai Jaan', `Pagglait', `Dhaakad', `Vikram Vedha', `Fighter' என பல இந்தி படங்களில் நடித்தார். பல சினிமாக்களில் நடித்தாலும் `The Family Man' சீரிஸில் நடித்த `ஜேகே' பாத்திரத்தின் மூலம் பரவலாக சென்று சேர்ந்தார். சில நாட்களாக இவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ஒரு விஷயம் பரவலாக்க பரவி வருகிறது.

அது ஷரிப் ஹாஸ்மி மற்றும் நஸ்ரின் ஹாஸ்மியின் காதல் கதை. பாலிவுட்டில் பல கற்பனை ரொமான்டிக் கதைகளை சினிமாவாக பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜத்தில் ஷரிப் ஹாஸ்மி மற்றும் அவரது மனைவி நஸ்ரின் ஹாஸ்மி இடையிலான உண்மையான காதல் கதை மிக அழகானது. முதன் முதலில் சந்தித்துக் கொண்ட ஷரிப் ஹாஸ்மிக்கு 18 வயது, நஸ்ரின் ஹாஸ்மிக்கு 19 வயது. கல்லூரி காலத்தில் நஸ்ரின் அண்ணன் சமீர் மூலம் தான் நிகழ்ந்துள்ளது இவர்களது சந்திப்பு. அப்போதே அவர்களுக்கு காதல் அரும்ப, அது பற்றி சமீர் அறிய இருவரும் பிரிய நேர்கிறது.

Sharib Hashmi, Nasreen Hashmi

சில வருடங்களுக்கு இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. ஒரு பக்கம் ஷரிப் தனது தொலைக்காட்சி பணிகளில் பரபரப்பாகிறார். இன்னொரு பக்கம் ஷரிப்காக காத்திருந்த நஸ்ரின், அவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் ஆகிவிட்டது என தெரிந்த பின் தனக்கும் மாப்பிள்ளை பார்க்க வீட்டில் சொல்கிறார். அந்த சமயம் ஷரிப் மீண்டும் நஸ்ரினை சந்திக்க வருகிறார். தன்னுடைய கரியரை வடிவமைக்க நேரம் வேண்டும் என சொல்லி, தன் நிச்சயத்தை தானே நிறுத்திவிட்டதாகவும், அந்த சமயத்தில் தான் நஸ்ரின் மேல்தான் தன் காதல் இருக்கிறது என உணர்ந்ததையும் சொல்கிறார்.

ஷரிப் ஹாஸ்மி - நஸ்ரின் ஹாஸ்மி திருமணம் 2003ல் நடக்கிறது. ஆரம்பத்தில் குடும்பம் நடத்தவே சிரமப்பட்ட இருவரும் கையில் இருப்பதை எல்லாம் விற்று குடும்பத்தை நடத்துகிறார்கள். ஷரிப் தொலைக்காட்சியிலும், நஸ்ரின் இன்சூரன்ஸிலும் வேலை பார்த்த போதும் பணம் போதவில்லை. முதல் குழந்தை பிறந்த பின் நஸ்ரின் வேலைக்கு செல்ல முடியாத சூழல். ஒருபக்கம் தொலைக்காட்சியில் பணியாற்றிய படி சினிமா வாய்ப்புகள் தேடி வந்த ஷரிப், இனி முழுநேரம் சினிமா தான் என 2009ல் தன் வேலையை ராஜினாமா செய்கிறார். அவரது முடிவை புரிந்து கொண்டு இனி தான் வேலைக்கு செல்கிறேன் என கிளம்பினார் நஸ்ரின். அடுத்த சில வருடங்கள் நஸ்ரின் சம்பாத்தியத்திலும், ஷரிபின் சில ஃப்ரிலான்ஸ் வேலைகள் மூலமாகவும் ஓடுகிறது குடும்பம். 2012ல் இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஷாரூக்கான் நடித்து உருவான `Jab Tak Hai Jaan' படத்தில் ஷரிப்க்கு வாய்ப்பு கிடைத்த பின்னர் தான் அவர்களின் பண கஷ்டங்கள் எல்லாம் மெல்ல மெல்ல தீர்க்கிறது.

Sharib Hashmi

ஆனால் அடுத்து இன்னும் பெரிய கஷ்டம். 2018ல் நஸ்ரின் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுகிறது. முன்பு தன் மனைவி எப்படி தனக்கு ஆதரவாக நிற்க முடிவு எடுத்தாரோ, இப்போது அவருக்கு துணை நிற்க முடிவு செய்கிறார் ஷரிப். இதுவரை நான்கு முறை கேன்சரால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி மீண்டிருக்கிறார் நஸ்ரின். இதே சமயத்தில் ஷரிப்க்கு வரும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது, கூடவே The Family Man வாய்ப்பு, மனைவியின் சிகிச்சைகளுக்கு தேவையான படம் கிடைக்க உதவியாக அமைகிறது. இன்று இந்திய அளவில் அடையாளம் கிடைத்து, பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும், தன் மனைவிக்கு எப்போதெல்லாம் தன்னுடைய துணை தேவைப்படுகிறதோ, அப்போது அவர் முன் இருப்பதை எப்போதும் உறுதி செய்கிறார் ஷரிப்.

கிட்டத்தட்ட 40 ஆண்டு கால பந்தம், 20+ ஆண்டு திருமண பந்தம். ஒரு மகன், ஒரு மகள் என தங்களின் குடும்பத்தை சிதையாமல் அழகாக நகர்த்திக் கொண்டு செல்கின்றனர் ஷரிப் ஹாஸ்மி மற்றும் நஸ்ரின் ஹாஸ்மி. இந்த செய்தியை CoupleGoals என பலரும் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.