பாலியல் குற்றச்சாட்டு கோப்புப்படம்
சினிமா

பாலிவுட் நடிகை முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டு!

ஹைதராபாத்தில் உள்ள சிறு பட தயாரிப்பாளர்கள், பட வாய்ப்பு வழங்குவதாக கூறி, தன்னை தவறாக பயன்படுத்த முயன்றதாக பாலிவுட் நடிகையொருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

PT WEB

ஹைதராபாத்தில் உள்ள சிறு பட தயாரிப்பாளர்கள், பட வாய்ப்பு வழங்குவதாக கூறி, தன்னை தவறாக பயன்படுத்த முயன்றதாக பாலிவுட் நடிகையொருவர் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவை உலுக்கிய ஹேமா கமிட்டி விவகாரத்தைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகை ஒருவரின் வேதனை நிறைந்த வார்த்தைகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்த நடிகை, சினிமாவில் தான் சந்தித்த நெருக்கடிகள் குறித்து மனம் திறந்தார். அதில் அவர் குறிப்பிட்டு சொன்னது, தென்னிந்திய சினிமாவைத்தான். அந்த நடிகை, தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி, அதில் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் தடம் பதிக்க நினைத்துள்ளார். அதற்காக தென்னிந்திய சினிமாவில் நடிப்பதற்காக முயற்சிகளை எடுத்தபோது, கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டுள்ளார்.

என்ன நடந்தது?

ஒரு படத்தின் கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்ய, சினிமாவில் CASTING DIRECTOR-கள் இருப்பார்கள்.. அவர்கள் எதிர்பார்க்கும்படியான தோற்றம் கொண்ட நடிகர்களை அழைத்துவரும் ஏற்பாடுகளை CASTING ஏஜெண்டுகள் செய்வார்கள்.

இந்த CASTING டைரக்டர்கள் மற்றும், CASTING ஏஜெண்டுகள்-தான் அவரின் புகார் பட்டியலில் முதலாவதாக இருப்பவர்கள். பட வாய்ப்பு தருவதாக கூறி தொடர்பு கொள்ளும் ஏஜெண்டுகள், தவறான நோக்கங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என மறைமுகமாக கூறுவார்கள் என்றுள்ளார் அந்த நடிகை. அவர்கள் பேசும் வார்த்தைகள் எரிச்சலூட்டும் விதமாக இருக்கும் எனக்கூறிய அவர், ஹைதராபாத்தில் உள்ள சிறு பட தயாரிப்பாளர்களை குறிப்பிட்டு பேசினார்.

இதே விவகாரத்தை வெளிப்படையாக சொல்லாத ஹைதராபாத் தயாரிப்பாளர்கள், தங்களின் நோக்கத்தை வேறு விதமாக தெளிவுபடுத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

எழுந்த விவாதம்!

இந்திய சினிமா என்றால், ஹிந்தி சினிமாதான் என்ற நிலை கடந்த காலத்தில் இருந்தது. ஆனால், அண்மை காலமாக தென்னிந்திய சினிமா ஏற்படுத்தியுள்ள பாய்ச்சல், கலை மற்றும் வர்த்தக ரீதியாக இந்திய திரையுலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது. பாராட்டப்படும் தெலுங்கு சினிமா, பரபரப்பான குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது, விவாதத்தை உருவாக்கியுள்ளது.