Jovika- Vichithra
Jovika- Vichithra file image
பிக்பாஸ்

அப்போ படிப்பு முக்கியம் இல்லையா..? பிக் பாஸ் 7-ல் கொளுத்திப்போட்ட ஜோவிகா

யுவபுருஷ்

பிக் பாஸ் சீசன் தொடங்கி ஒருவாரம் முடிவடைவதற்குள், ஜெயிக்குறதுக்கு படிப்பு ஒண்ணும் அவசியமில்ல. பிடிச்சத பண்ணணும் அவ்வளவுதான் என்ற போக்கில் பேசி வருகிறார் வனிதா மகள் ஜோவிகா.

ஜோவிகாவுக்கு எதிராக செயல்படும், விசித்திராவை எதிர்த்து பேசுவதாக நினைத்து ஜோவிகா கொட்டித்தீர்ப்பதை பார்த்த பங்கேற்பாளர்கள், கைத்தட்டி ஆரவாரம் செய்ததுதான் இதில் சோகமே. அடிப்படை கல்வியறிவு வேறு என்பதை புரியாமல், படிக்கலாம் தேவையில்ல. பிடிச்சத செஞ்சாலே ஜெயிச்சுடலாம் என்று ஆதரவாளர்கள் சிலரும் கொடியைத் தூக்க தொடங்கியுள்ளனர்.

ஏதோ ஒரு சூழலால் கல்வியைத் தொடர முடியவில்லை எனினும் தங்களுடைய கடின உழைப்பின் மூலம் வெற்றிக்கனியை உண்மையில் சிலர் தொடவே செய்கின்றனர். அந்த வரிசையில்தான் திரைப்படத்தால் பிரபலமான கமல், தனுஷ் போன்றவர்கள் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

கோலிவுட் தொடங்கி பாலிவுட்டிலும் படிக்காத நடிகர்கள் பலர் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளனர். குறிப்பாக, ரன்பீர் கபூர், தீபிகா படுகோன், சல்மான் கான், கஜோல், ஸ்ரீதேவி, அமீர் கான் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

படம் ஹிட்டாக வேண்டும் என்று ‘வாழ்க்கையில் வெற்றிபெற படிப்பு அவசியமே இல்லை’ போன்ற வசனங்களும் தொன்றுதொட்டு வரத்தான் செய்கிறது. உண்மை நிலவரம் என்னவெனில், ‘நம்ம தலைவனே சொல்லிட்டாரு.. அப்புறம் என்னத்த படிச்சுக்கிட்டு’ என்று படிப்பை கைவிட்ட சிலர், பிற்காலத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் ரோட்டில்தான் நின்றுள்ளனர் என்பது கூடுதல் சோகம்.

நடப்பாண்டு வெளியான புள்ளிவிவரத்தின்படி, தமிழ்நாட்டில் 80.09 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக கேரளத்தில் 92 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக பீகாரில் 61 சதவீதம் பேறும் படிப்பறிவு பெற்றுள்ளனர்.

பட்டியலில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த இடம் 8. தமிழகத்தில் ஆண்களில் 86 சதவீதம் பேரும், பெண்களில் 73 சதவீதம் பேரும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

கோட்டை முதல் தெருக்கோடி வரை அனைத்து மக்களும் கல்வியை ருசித்துவிட வேண்டும் என்று சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது தமிழ்நாடு அரசு.

குறிப்பாக, காமராஜர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டத்தில் தொடங்கி, இலவச மிதிவண்டி, இலவச பேருந்து பயணம், இலவச மடிக்கணிணி, புதுமைப் பெண் திட்டம், காலை சத்துணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் என்று இன்றுவரை திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், திரைவசனத்திற்காக பேசப்படும் கல்விக்கு எதிரான வசனங்களை கையில் எடுத்துக்கொள்ளும் ரசிகர்களும், இளைஞர்களும் அதுதான் வேதம் என்று புரிந்துகொள்கின்றனர்.

பெரும் நடிகர்களின் வசனமோ, பிக் பாஸில் நடக்கும் ஊர்கிழவி நாடகங்களையோ பார்த்து சிரிக்கலாமே தவிர, அதையே வேதவாக்காக எடுப்பது முற்றிலும் தவறானது என்கின்றனர் ஆசிரியர்கள். சட்ட மாமேதை அம்பேத்கர் வசனங்களை அவ்வப்போது கையில் எடுக்கும் முற்போக்குவாதிகள், அவரது ‘கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்’ எனும் முழக்கத்தை மறக்காமல் இருந்தால் சரி..