பிக்பாஸ்
பிக்பாஸ் PT
பிக்பாஸ்

BIGG BOSS Day 6 | “நானும் படித்தவன் கிடையாது; படிப்பை ஜோவிகாவே முடிவு செய்யட்டும்”-கமல் பதில்கள்!

Jayashree A

பிக்பாஸ் நேற்றைய எபிசோட்டில் ஆக்ரோஷமாக ஜோவிகா விசித்திராவுடன் சண்டை போட்டு ” எனக்குப் படிப்பு வராது, நான் படிக்கல்ல… செத்துத்தான் படிக்கனும்னு அவசியம் இல்லை… ”என்றெல்லாம் பேசி தன் தரப்பு நியாயத்தை எடுத்து கூறினாலும், அவரிடம் நியாயம் இல்லை என்பது தான் பல ரசிகர்களின் எண்ணம்.

படிக்காதவர்கள் பெரிய ஆளாக வருவது இல்லையா? என்று கேட்டால், படிக்காமல் பெரிய பதவியில் இருப்பவரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் படித்து பெரிய பதவியில் இருப்பவர்கள் கோடிக்கணக்கானோர். அதை ஏன் விசித்திரா அவரிடம் சொல்லவில்லை என்று தெரியவில்லை.

காமராஜர் மாணவர்கள் நன்றாக படிக்கவேண்டும், அவர்கள் பசியுடன் இருந்தால் படிப்பு வராது என்று பள்ளிக்கூடம் கட்டி அவர்களுக்கு மதிய உணவையும் வழங்கி, சீருடையையும் இலவசமாக வழங்கினார். ஆனால் அவர் படித்தவரில்லை. “நான் படிக்கவில்லை ஆனால் மாநிலத்திற்கு முதலமைச்சர் ஆகிவிட்டேன். ஆகையால் நீங்கள் யாரும் படிக்க வேண்டாம்” என்று சொல்லவில்லையே… காரணம் படிப்பின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார்.

பிறந்த குழந்தைக்குத் தாய் ஆசிரியராக இருந்து பாடம் புகட்டித் தான் அது பேச ஆரம்பிக்கிறது. பெண் கல்வி முக்கியம் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஜோவிகா போன்றவர்கள் படிப்பின் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய அறியாமையைப் பிறர் சுட்டிக் காட்டும் பொழுது அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. ஆதலால் தான் விசித்திரா முன் குரலை உயர்த்திப் பேசி, பேச்சினால் மற்றவர்களைப் பயமுறுத்தி தன் தரப்பு வாதத்தைச் சரி என்று கூறுகிறார்.

இனி.. மாயா கூல் சுரேஷின் ஜாடையைத் தவறாக புரிந்துகொண்டு அவருடன் வம்பு செய்ய முயல்கிறார். “நீங்க என்னைப் பார்த்து தவறாக கண்ணடித்துக் கூப்பிடுவது அசிங்கமான ஒரு கேவலமான ஒரு வேலை” என்கிறார்.

கூல் சுரேஷ், ”இதை நீ அங்கேயே சொல்லி இருக்கலாம்ல…” என்று கேட்கிறார்.

“ அங்கேயே தான் கேட்டேனே…”

“எனக்கு கேட்கலாமா…” என்கிறார்.

இதெல்லாம் பார்ப்பதற்கு நமக்கு மாயா டிராமாடிரிக் செய்வது போல ஒரு பிம்பம் உருவாவதைத் தடுக்க முடியவில்லை.

சரி இது இருக்கட்டும், பிக்பாஸ் வீட்டில் இன்று கமல் இவர்களுடன் இது குறித்து என்ன விவாதித்தார் என்பதைப் பார்க்கலாம்.

கமலை பார்த்ததும் அனைவரும் ஒருவார கால அனுபவத்தை பகிர்ந்துகொள்கின்றனர்.

கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன், பவா செல்லத்துரையைக் கேள்வி எல்லாம் கேட்பார், ஜோவிகா விசித்திரா பிரச்சனையில் யார் பக்கம் தவறு என்று கூறுவார் என்றெல்லாம் நினைத்து நிகழ்ச்சியைப் பார்த்தால் நடந்ததென்னவோ வேறு.

Jovika- Vichithra

ஜோவிகா கமலிடம், “ நான் படிப்பது தவறு என்று சொல்லவில்லை படிப்பு முக்கியம் தான் ஆனால் படிப்பு வரலை என்றால் அதில் focus பண்ணுவதை விட்டு எதில் விருப்பம் இருக்கிறதோ அதில் கவனம் செலுத்தி முன்னுக்கு வரலாம். இது தான் என் பாயிண்ட்” என்கிறார்.

இதற்குப் பதில் கூறிய கமல், ”படிப்பு வரவில்லையென்றால் விட்டுடனும், உயிரைக்கொடுத்தாவது கல்வி கற்கவேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஏனெனில் நானும் படித்தவன் கிடையாது. ஆனால் எனது வட்டத்தை படித்தவர்களோடு உருவாக்கிக் கொண்டேன். கல்வி தான் கலங்கரை விளக்கம். ஆனால் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியாமல் கலங்கரை விளக்கத்தை நோக்கி போன்னா…? அவ்வை சொன்ன மாதிரி கல்லாதது உலகளவு… கைமண் அளவை வைத்துக்கொண்டு இது தான் கல்வி இதிலிருந்து தான் நீ கட்டடம் எழுப்பவேண்டும் என்றால் நடக்க வாய்ப்பு இல்லை.. ஆனால் விசித்திராவின் அபிப்ராயம் தப்பு என்று நான் சொல்ல மாட்டேன். படிப்பை வைத்து குடும்பத்தை காப்பாற்றுகிறவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் படித்துத் தான் தீரவேண்டும். விசித்திராவிற்கு படிப்பின் மேல் நம்பிக்கை இருந்ததால் தான் இந்த வயதில் phd முடித்து இருக்கிறார்கள். இது இவர்களின் சிஸ்டம். என்னை நிறையப் பேர் படிக்காதவன் என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். அவர்களே இப்பொழுது ‘என்ன சார் நீங்க… இவ்வளவு படிக்கிறீர்களே என்பார்கள். விட்டதை பிடிக்கிறேன் அவ்வளவு தான். அதே போல அதை எப்ப பிடிக்கவேண்டும் என்பதை ஜோவிகா முடிவு செய்யட்டும். கற்றலில் விதி இருக்கலாமே தவிர, கற்றலில் வதை இருக்கக்கூடாது” என்றார்.

அடுத்ததாக பவா விஷயத்திற்கு வந்தார்.

பவா கதை சொன்னதில் என்ன தப்பு கண்டுபிடித்தீர்கள்? என்று விஷ்ணுவிடம் கேட்டார் கமல்ஹாசன்.

அதற்கு விஷ்ணு, ”அவர் சொன்ன கதையில் பெண்ணை பற்றி உருவகப்படுத்திப் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை” என்று ஒரே வரியில் பேசி முடித்தார்.

இது, பெண்களின் பிரச்சனை ஆகவே பெண்களிடமே இதைப் பற்றிக் கேட்கலாம் என்று நினைத்த கமல் இது குறித்து மாயாவிடம் கேட்டார்.

பவா செல்லத்துரை

ஒரு எழுத்தாளர் அவரது சொந்த கதையில் ஒரு பெண்ணின் இடுப்பைப் பார்த்து மயங்கி இடுப்பில் கை வைத்ததும், அந்த பெண் அடித்து விடுகிறாள். ஆனால் சாரி கேட்கிறாள். இது என்ன மனநிலை? ஒரு பெண் தன்னை மானபங்கம் நடத்த நினைத்தவரிடத்தில் எதற்காகச் சாரி கேட்கவேண்டும்? இதை ஒத்துக்கொள்ள முடியாது” என்று மாயா கூறவும், இதே கருத்தைப் பூர்ணிமாவும் ஆதரித்தார்.

அப்பொழுது பேசிய கமல், ”நீங்கள் அவர் கூறிய கதையைத் தவறாக புரிந்துகொண்டீர்கள். அந்த எழுத்தாளர் தவறான நோக்கத்துடன் அப்பெண்ணைத் தொடும்போது, அப்பெண் பளார் என்று கண்ணத்தில் அறைந்து, சாரி… உங்க மேல் நான் நிறைய மரியாதை வைத்திருந்தேன். நீங்களா இப்படி? என்று கேட்கிறாள். இந்த சாரி வேறு, நீங்கள் புரிந்துகொண்ட சாரி வேறு, அப்பெண் சொன்ன சாரியில் எழுத்தாளரின் ஒட்டுமொத்த மதிப்பையும் சுக்குநூறாகி விட்டாள்.

அவர் அவமானத்துடன் இருக்கும் சமயம் அங்கு வந்த அவரது மனைவி உடைந்து கிடந்த வளையல்களைப் பார்த்து, “என்ன நடந்தது என்று கேட்டார்… எழுத்தாளர் ஒன்று விடாமல் நடந்த அனைத்தையும் கூறினார்” அதற்கு அவரது மனைவி “இப்பெண் எனது மாணவி” என்று சொல்லியதாகவும், பிறகு அப்பெண்ணின் திருமணத்திற்கு எழுத்தாளரும் அவரது மனைவியும் தம்பதியாகச் சென்றதாகவும் எழுதி இருப்பார். இக்கதை அவர் எழுதியதன் நோக்கம், அவருக்கு அவரே தண்டனை கொடுக்கும் படி இருந்தது.

அதாவது சாட்டையை எடுத்து பளார் என்று தன் முதுகில் அடித்துக்கொள்ளும் வீரியம் இது. இதை பவா உங்களிடம் முழுமையாக கூறவில்லை என்று நினைக்கிறேன்.” என்று கமலஹாசன் கூறும் பொழுது … “ஓ கதை அப்படி போகுதா? என்று என்ற எண்ணம் எல்லார் மனதிலும் தோன்றியிருக்கும். பவாவின் மனதில், “அப்பாடி… ஆண்டவர் வயத்துல பாலை வார்த்தார்” என்ற மொமண்ட் எழுந்திருக்கும்.

அதேபோல் பவாவை கமல், சுத்தம் என்பது அனைவருக்கும் முக்கியம், பவா… நீங்கள் ஆங்காங்கே எச்சில் துப்புவது குறித்து சர்ச்சை எழுந்தது, பிரதீபை நான் பாராட்டியே ஆகவேண்டும் மிகத் தைரியமாக இதைப் பற்றி உங்களிடம் கேள்வி கேட்டார்.

ஆனால் நீங்கள் ‘கடவுளே வந்து சொன்னாலும் என் கருத்தை நான் மாத்திக்கமாட்டேன் என்று கூறினீர்கள். கடவுள் வந்து கூற வேண்டாம் சக மனிதர்கள் கூறும் பொழுது அதை மாற்றிக்கொள்ளத் தான் வேண்டும்” என்று பாலிஷாக தாமரை இலை தண்ணீர் போன்று பட்டும் படாமலும் குத்தி விட்டு சென்றார்.

பிறகு இந்த வார கேப்டன் பதிவுக்காகப் போட்டி நடத்தப்பட்டது. அதில் விக்ரம் இந்த வார தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இனி வரும் வாரங்களில் பிக்பாஸ் வீட்டில் என்னென்ன ரகளை நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.