எழுத்தாளர் to பிக்பாஸ் போட்டியாளர்.. பவா செல்லதுரை பற்றிய அரிய தகவல்களும், இணைய விவாதங்களும்!

பவா செல்லதுரை -  இவர் சிறந்த இலக்கியவாதி. பிக்பாஸ் சீசன் 7 ல் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறார். யார் இவர் ? இவர் கடந்து வந்த பாதை என்ன ? இலக்கியத்தில் இவரின் பங்கு என்ன? அனைத்தையும் விரிவாக பார்க்கலாம். 
பவா செல்லதுரை
பவா செல்லதுரைBavachelladurai Bava | facebook

குடும்ப பின்னணி

பவா செல்லதுரை - இவர் ஜுலை 27, 1965ல் திருவண்ணாமலையில் பிறந்தவர். இவரின் தந்தை ஆசிரியராகப் பணி புரிந்ததால் பவா செல்லதுரையின் பள்ளிப் பருவம் பல்வேறு ஊர்களில் கழிந்தது. படித்து முடித்ததும் தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

பவா செல்லதுரை குடும்பம்
பவா செல்லதுரை குடும்பம்

இவரின் மனைவி, சைலஜா. இவருக்கு வம்சி என்ற மகனும் மற்றும் மானசி என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவியும் ஒரு இலக்கியவாதி. சிதம்பர நினைவுகள், சுமித்ரா போன்ற புகழ்பெற்ற மொழியாக்கங்களைச் செய்தவர். மகன் வம்சி ஆவணப்படம் மற்றும் குறும்படங்களை இயக்குபவர். மகள் மானசி, ஆயிஷா என்னும் புத்தகத்தை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

எங்கிருந்து தொடங்கியது இலக்கிய ஆர்வம்?

பவா செல்லதுரை தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க புனைவெழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கதைசொல்லி, களப்பணியாளர், திரைப்பட நடிகர், இயற்கை விவசாயி, அரசியலாளர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மாவட்டச் செயலாளராகவும், தலைவராகவும், மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். இவரின் தந்தை பழங்குடி மாணவர்களுக்கான உண்டுறைவிட பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், விடுதிக்காப்பாளராகவும் இருந்தவர் .

பவா செல்லதுரை
பவா செல்லதுரை

தனது சொந்த அனுபவங்களும் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’ நாவலை வாசித்த தாக்கமும் சேர்ந்து பதினாறாவது வயதில் உறவுகள் பேசுகிறது என்ற நாவலை எழுதினார். புதுமைப்பித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தர ராமசாமி இவர்கள் எழுதிய புத்தகத்தை படித்து வளர்ந்தவர்.

பல இதழ்களில் வெளியான பவா செல்லதுரையின் சிறுகதைகள் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற தொகுப்பாக வெளிவந்தன. பவா செல்லதுரை எழுதிய கதைகளில் சத்ரு, பச்சை இருளன், ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் மாய யதார்த்தக் கூறுகளைக் கொண்டவை.

எழுத்தாளரை தாண்டி கதை சொல்லியாக மிளிர்ந்த பவா!

பவா செல்லதுரை அவருடைய நண்பர் ஜே.பி.யின் வேண்டுகோளுக்கிணங்க ஐம்பது பேர் முன்னிலையில் தமிழிலக்கியக் கதைகளைச் சொல்ல ஆரம்பித்து நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தில் கதை சொல்லத் துவங்கி இருக்கிறார். எழுத்தாளனாக அடைந்ததைவிட, பத்துமடங்கு வாசகர்களை கதைசொல்லியாக அடைந்திருப்பதாகவும், தனது புத்தகங்களை மட்டுமல்லாது தான் கதை சொல்லும்போது குறிப்பிடுகின்ற அனைத்து எழுத்தாளர்களின் கதைகளையும் தனது வாசகர்கள் தேடி வாசிக்கிறார்கள் என்று பவா தெரிவித்திருக்கிறார்.

மேய்ப்பர்கள் புத்தகம்
மேய்ப்பர்கள் புத்தகம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது இவர் எழுதிய ’நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ என்ற நாவலுக்கு கிடைத்தது.

இதை தவிர, தமிழக அரசின் சிறந்த கட்டுரைக்கான விருது - எல்லா நாளும் கார்த்திகை என்ற நூலுக்கும், நொய்யல் இலக்கிய விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற நூலுக்கும் கிடைத்துள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது- 2021 - செந்நாய் என்ற படத்திற்காக பெற்றிருக்கிறார்.

செந்நாய்
செந்நாய்

டொமினிக் , நீர் மற்றும் கோழி, கட்டுரைகள் 19, டி. எம். சாரோனிலிருந்து ,எல்லா நாளும் கார்த்திகை, நிலம் , பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல ,பங்குக்கறியும் பின்னிரவுகளும், மேய்ப்பர்கள், இலக்கில்லா பயணங்கள் என்று இவரது படைப்புகள் நீண்டுக்கொண்டே செல்கிறது.

மொழிபெயர்த்த நூல்கள்

மலையாளத்திலிருந்து பால் சக்கரியா எழுதிய "தேன்" என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.

தொகுத்த புத்தகங்கள்

கந்தர்வன் கதைகள்

ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்

சிறகிசைத்த காலம்

நிராயுதபாணியின் ஆயுதங்கள் (ஜெயந்தனின் சிறுகதைகளடங்கிய தொகுப்பு)

கந்தர்வன் கதைகள்
கந்தர்வன் கதைகள்

பிற மொழிகளில் பவா செல்லதுரையின் நூல்கள்

சிறுகதை தொகுப்பு

நட்சத்திரங்கள் ஒளிமிகுந்த கற்ப பாத்ரம் - திரு.ஸ்டான்லி

டொமினிக் - கே.எஸ். வெங்கடாசலம் வேட்டை- கீற்று

'சத்ரு' - சிறுகதை

இதை தவிர பல மொழிகளிலும் சிறுகதையை மொழி பெயர்த்துள்ளார்.

ரியாலிட்டி ஷோவில் பவா! விவாதமான பிக்பாஸ் பங்கேற்பு

இலக்கியத்தில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட பவா செல்லதுரை ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துக்கொண்டதற்கு பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வந்த நிலையில், இவரின் நிலை பிக்பாஸில் மிகவும் சவாலாகதான் இருக்கிறது.

இவர் முதல் நாள் வந்ததில் இருந்து யாருடன் பேசாமல் இருந்ததாக பார்ப்பவர்களுக்கு தோன்றினாலும், உண்மையில் இவர் ஒவ்வொருவரின் மனநிலையை அறிந்துக்கொள்ள கால அவகாசம் எடுத்ததாகவே தோன்றியது.

பவா செல்லதுரை
பவா செல்லதுரை

ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்ட பவா!

பிக்பாஸின் கேப்டனான விஜய் வர்மா, இவரை ஐயா என்று கூப்பிட்டதும், ”என்னை ஐயா என்று கூப்பிடவேண்டாம். என்னை தனிமைபடுத்துவது போல் உள்ளது. ஆகையால் பவா என்றே கூப்பிடுங்கள்” என்றார். இதன் மூலம் ‘வயது என்பது ஒரு எண்ணிக்கைதான். நானும் உங்களில் ஒருவன்தான், உங்களுக்கு டஃப் கொடுப்பேன்’ என்று அவர் சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. ஆனாலும், இவரை விஜய் ”தன் மனதை கவரவில்லை” என்று காரணம் சொல்லி ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினார்.

அங்கிருந்தவர்களும் இவருடன் பழகவில்லை. அதனால் அங்கும் இவர் தனிமையாகதான் இருந்தார். அவர்கள் என்னை தனிமைபடுத்தினால் என்ன? நான் அவர்களுடன் பழகுகிறேன் என்ற ரீதியில் சமையல் செய்யும் போது, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ”பெண்கள் செய்யும் சமையலை புகழ்ந்து கூறாதீர்கள்; அது அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர விடாது” என்று கூறியிருந்தார்.

பவா செல்லதுரை
BIGGBOSS Day 1: சிக்கலில் 6 பேர்.. பவா சொன்ன உணர்வுப்பூர்வ கதை.. முதல் நாளில் நடந்ததென்ன?

முதல் கதையில் எல்லோர் மனதையும் கட்டிப்போட்ட பவா!

இச்செய்தி மக்கள் பலராலும் வரவேற்கப்பட்டது. என்னதான் இருந்தாலும் மூத்தவர் மூத்தவர் தான். அவரின் பேச்சு முதிர்சியான அனுபவத்தை காட்டுகிறது என்று நினைக்கவைத்தது. அத்துடன் அவர் நின்று விடாமல், கதைநேரம் என்று சொல்லி அனைவரையும் அமர்த்தி ஆதவன் கதையான ‘ஓட்டம்‘ என்ற ஒரு கதையை கூறினார். இந்த கதை அங்குள்ளவர்களின் மனதை கட்டி போட்டது என்றால் மிகையாகாது. அனைவருக்கும் அவர் மீது தனி மரியதை ஏற்பட்டு இருந்தது என்பதை ப்ரதீப்பின் கண்ணீரிலிருந்து தெரிந்தது. அதே ப்ரதீப் மறுநாள் அவரை எதிர்த்தது, எதிர்பார்க்காத ஒரு சம்பவம்.

ஆம், மறுநாள் அவர் இளைஞர்களுக்கு வெளிப்படைத்தன்மை அனைவருக்கும் புரியவேண்டும் என நினைத்து கமல்ஹாசன் சம்பந்தபட்ட கதை ஒன்றை கூறினார்.

பவா சொன்ன கமலின் கதை...!

கமல்ஹாசனின் அப்பா வக்கீல் சீனிவாசனுக்கு, ஜெயகாந்தன் கதை என்றால் மிகவும் பிடிக்குமாம். விரும்பி படிப்பாராம். அதனால் கமல்ஹாசன் தனது நற்பணி மன்ற விழாவிற்கு ஜெயகாந்தனை விருந்தினராக வருமாறு அழைத்திருந்தார். ஆனால் ஜெயகாந்தன் வர மறுத்திருக்கிறார். ஆனாலும் கமலின் வற்புறுத்தலால் விழாவிற்கு வந்திருக்கிறார் ஜெயகாந்தன். அரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு அமர்ந்திருந்த ஜெயகாந்தன், கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார்.

இதைக் கண்ட ரசிகர்களுக்கு ஜெயகாந்தன் மேல் பயங்கர கோபம். “எங்கள் தலைவரின் முன் நீங்கள் கால் மேல் கால் போடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது” என்று ஜெயகாந்தனை அவர்ஜஔ கேட்க, கோபம் கொண்ட கமல்ஹாசன், “இது அவர் கால். அவர் அவரின் கால்மேல் கால் போட்டுக்கொள்வது அவரின் விருப்பம், இதில் எனக்கும் பிரச்னை ஏதும் இல்லை. ஆகையால் இவரை குறை கூறிய ரசிகர் இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்“ என்று கூறவும், அடுத்த சில நிமிடங்களில், கால் இல்லாத ரசிகர் ஒருவர் மேடைக்கு வந்து ஜெயகாந்தனிடம் மன்னிப்பு கேட்டதுடன், “என் கால்தான் சார் அவர்” என்று கூறியதாகவும் இக்கதையை கமலின் அனுமதியுடன் ‘கால்’ என்ற கதையாக தான் எழுதியதாகவும் கூறினார் பவா.

பவா செல்லதுரை
BIGG BOSS DAY 3 | “நீங்கள் செய்வதெல்லாம் சரியென்று சொல்ல முடியாது” - பவாவின் கதையால் வந்த வினை!
பிக்பாஸ் 7 தமிழ்
பிக்பாஸ் 7 தமிழ்

”இடுப்பை வழுக்கும் வெண்ணைகட்டி என்று..” - சிக்கலில் சிக்கிய பவா!

இந்த கதை போக, இன்னொன்றையும் கூறினார் பவா செல்லதுரை. அதில் பிரபல மலையாள எழுத்தாளரான பாலச்சந்திரன் என்பவர், தன் வீட்டுக்கு வரும் ஒரு பெண்ணின் இடுப்பழகில் மயங்கி அவரின் இடையை தொட்டதாகவும், அதில் அப்பெண் கோபம் கொண்டு அந்த எழுத்தாளரின் வலது கன்னத்தில் ஓங்கி அடித்ததாகவும் சொன்னார் அவர். அதில் அப்பெண்ணின் இடுப்பை, வழுக்கும் வெண்ணைகட்டி என்று வர்ணித்தார் பவா. இந்த வார்த்தை அங்கிருந்த போட்டியாளர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. அசௌகரியத்தை கொடுத்தது. அவர்கள் எதிர்க்கத் தொடங்கவே, ஒருகட்டத்தில் அனைவரும் அவரை எதிர்க்க ஆரம்பித்தனர். சிலர் பவாவின் மீது ஒரு ஏளன பார்வை வீசியும் நக்கல் சிரிப்பையும் உதிர்த்தனர்.

அச்சமயம் இதுதான் சாக்கு என்பது போல ப்ரதீப் அவரிடம், “அதேபோல் நீங்கள் ஆங்காங்கே எச்சில் துப்புவது எனக்கு பிடிக்கவில்லை. அதை சுத்தம் செய்பவர்களுக்கு மிகவும் கஷ்டம், ஆகையால் இக்குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். இது பவாவுக்கு அவமானமாக போய்விட்டது. சடாரென்று “என்னால் முடியாது, நான் அப்படித்தான். என் பழக்கம் மாறாது ” என்று பதிலளித்தார். அதற்கு ப்ரதீப் “இது உங்கள் வீடு என்றால் உங்கள் விருப்பப்படி இருக்கலாம். இது பிக்பாஸ் வீடு, உங்களின் எச்சிலை நாங்கள் எடுத்துபோட்டுக் கொண்டிருக்கிறோம். இது சரியல்ல” என்று வெளிப்படையாக பேசினார். இது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு பேசு பொருளானது.

பவா செல்லதுரை
பவா செல்லதுரைBiggboss

“நீங்கள் செய்வதனைத்தையும் சரி என்று சொல்ல முடியாது”

விசித்திரா ஒருபடி மேலே சென்று அவரிடம், “நீங்க பெரிய எழுத்தாளராக இருக்கலாம். அதற்காக நீங்கள் செய்வதனைத்தையும் சரி என்று சொல்ல முடியாது. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு நல்ல கதைகளை சொன்னால் அதிலிருந்து நல்ல விஷயத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். மாறாக இதே போல் எதிர்மறையான கதையை சொன்னால், அது நல்லதல்ல..” என்றார். சரிதான்!

ஜோவிகா பவாவிடம் சென்று, “நீங்கள் கூறியது எனக்கு எதுவுமே புரியவில்லை, நீங்கள் என்ன சொல்ல வறீங்க” என்று கேட்டார். பவா பொறுமையாக அவரிடம், “அதாவது உலகத்தில் உள்ள அனைவரும் 100 சதவிகிதம் நேர்மையானவர்கள் கிடையாது. அவர்களுக்குள்ளும் ஒரு டார்க் பக்கம் இருக்கும். அதை அனைவரும் மறைக்கத்தான் பார்ப்பார்கள். ஆனால் பாலச்சந்திரன் போன்ற எழுத்தாளர்கள் சில பேர்தான் அப்படியே எழுதுவார்கள். அதை சொல்லவந்தேன்” என்றார்.

“போதும் சார், இதை நிறுத்திக்கோங்க”

ஆனால் பவா கூற வந்த கருத்திற்கும், கூறிய விதத்திலும் நிறைய வேறுபாடு காணப்பட்டதால், அனைவராலும் அது சரி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் தந்த விளக்கத்தை கேட்க மறுத்து “போதும் சார், இதை நிறுத்திக்கோங்க” என்று சொல்லிவிட்டார் ப்ரதீப்.

‘அப்போ யாருதான் நல்லவங்க?’ - சிக்கலில் மாட்டிய பவாவின் அடுத்தகதை!

இத்தோடு அவர் நிறுத்தாமல் தனக்கு ஏற்பட்ட ஒரு உண்மை சம்பவ கதை ஒன்றை கூறினார். அதில் தானும் வெளிப்படையான எழுத்தாளன் என்று கூறுவது போல் இருந்தது. தா. “நான் சிறு வயதாக இருக்கும் சமயம் எங்கள் அம்மா ஒருமுறை கோழியை அடித்து குழம்பு செய்தார்கள். கோழியின் இறக்கைகள் கால்கள் போன்றவற்றை ஒரு குழி தோண்டி புதைத்துவிட்டு அதன் மேல் சாணி பூச்சையும் பூசினர். சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டில் இருந்த ஒரு அம்மா அவர்கள் வீட்டு கோழியை காணோம் என்று என் அம்மாவிடம் கேட்டார்கள். என் அம்மாவும் அதுபற்றி தெரியாது என்று கூறி அந்த அம்மாவுக்கு தான் வைத்த கோழி குழம்பையும் சாப்பிடச்சொல்லி தந்தார்கள். ஆனால் அம்மா அடித்து குழம்பு வைத்த கோழி பக்கத்து வீட்டு கோழிதான். இது எனக்கு நன்றாகவே தெரியும்.

பவா
பவா

ஆனால் என் அம்மா பொய் சொன்னதுடன், எதுவும் நடக்காதது போல் அவர்கள் கோழியை அடித்து குழம்பு வைத்து அவர்களிடமே தந்ததுதான் ஹைலைட்” என்றார். இக்கதையை கேட்ட ஹவுஸ்மேட்ஸ், மீண்டும் முகம் சுளித்தனர். ”ஏன் நீங்கள் சொல்லி இருக்கலாமே… உங்கள் வீட்டு கோழிதான் குழம்பில் இருக்கிறது என்று…“ என்று சொல்லவும் பவாவால் சரியான பதிலை அவர்களுக்கு தெரிவிக்கவில்லை. மாறாக அவர் சொன்னவிதம் தவறு செய்தவர்கள், தான் செய்த தவறை ஒத்துக்கொண்டால் அவர்கள் நல்லவர்கள் என்று சொல்வது போல் இருந்தது. அப்படி என்றால் நல்லவர்கள் எல்லோரும் தவறு செய்தவர்கள்தானா? என்ற கேள்வியும் எழுகிறது.

கமல்ஹாசன் எழுத்தாளரை மதிப்பவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஏனெனில் ஒவ்வொரு சீசனிலும் நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்வதோடு, நல்ல புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அறிவுறுத்துவார். அப்படி நல்ல படைப்புகளை தந்த எழுத்தாளர் பவா செல்லதுரை மூலம் நல்ல கருத்துள்ள கதைகளை உலகம் அறியும் பொருட்டு அவரை இந்நிகழ்சியில் பங்கு கொள்ள செய்திருக்கலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்!

இப்படி ஒரு வாய்ப்பை பவா செல்லதுரை சரியாக பயன்படுத்த தவறிவிட்டு வருகிறார் என்பதே நம்முடைய தற்போதைய எண்ணமாக தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், பவாவின் சர்ச்சைகளுக்கு பிக்பாஸில் கமல் இதற்கான தீர்வு என்ன சொல்கிறார் என்று.!

பிக்பாஸில் இப்படி நிகழ்ந்து கொண்டிருக்க அவரைப் பற்றிய பெரிய விவாதமும் சமூக வலைதலங்களில் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ‘எழுத்தாளர் புகழை அடையக் கூடாதா? பணம் சம்பாதிக்கக் கூடாதா?’ என ஒருதரப்பில் அவரை ஆதரித்தும், ‘என்ன இருந்தாலும் அவர் இதில் கலந்திருக்கக் கூடாது’ என மற்றொரு தரப்பில் அவரை எதிர்த்தும் வாத பிரதி வாதங்களை வைத்துக் கொண்டே வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com