BIGGBOSS Day 5 | படிப்பு முக்கியம் இல்லையா? ஜோவிகாவின் பேச்சில் உள்ள பிரச்னைகள்!

படிப்பதற்கு சிரமப்படும் சிறப்புக் குழந்தைகளின் Representation-ஆக ஜோவிகா நிற்கிறாரா அல்லது மீடியா புகழ் வெளிச்சம் இருப்பதால் படிக்க வேண்டாம் என கூலாக இருக்கும் priveleged சிறார்களின் Representation-ஆக நிற்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
Big boss season 7 tamil
Big boss season 7 tamil Facebook

நேற்றைய எபிசோடில் வைக்கப்பட்ட லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில், போட்டியாளர்கள் தோற்கும்பட்சத்தில் மேக்கப் பொருட்களை எடுத்து சென்று விடுவோம் என்று சொல்லியிருந்தார் பிக்பாஸ். இதுதான் சான்ஸ் என்று நினைத்து ப்ரதீப் மணியிடம் “இந்த டாஸ்க்ல நாம தோத்துடுவோம். அப்பதான், மேக்கப் இல்லாம பெண்களைப் பார்க்கமுடியும், அதனால அவங்களுக்கு வர்ற ஓட்டு குறையும், நாம ஜெய்சிடலாம்” என்று பக்கா(!??) ப்ளான் போட்டு சொல்ல… இதை முறியடுத்து போட்டியில் வெற்றி பெற்றுவிட்டனர்.

Big boss season 7 tamil
BIGG BOSS DAY 4 Review | ”உன் Peace of Mind-ஐ நீயே பீஸ் பீஸா ஆக்கிடுவ!”
Big boss season 7 tamil
Big boss season 7 tamil Facebook

இதற்கிடையே பிரதீப் பேசியதை கேட்ட சில பெண்கள் வெகுண்டெழுந்து, “ப்ரதீப் எப்படி அப்படி நினைக்கலாம்? மேக்கப் என்பது ஒரு கலை. இதற்கெல்லாம் தனித்திறமை வேண்டும். மேக்கப் இல்லாமல் இருக்க முடியாதா என்ன? இன்று ஒரு நாள் மேக்கப் இல்லாமல் இருப்போம்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்த பெண்கள் அனைவருமாக சேர்ந்து, தாங்கள் போட்டிருந்த மேக்கப்பை அழித்து ப்ரதீப் நினைத்ததை மாற்றிக் காட்டினர்.

இதற்கிடையே ப்ரதீப் தன் ஷூவை எடுத்துச்செல்கையில் விஜய் மீது அது பட்டுவிடவே, விஜய் அதை அப்பொழுதே ப்ரதீப்பிடம் சொல்லாமல் எல்லோர் முன்னிலையில் வைத்து, “ப்ரதீப் ஷுவால் என்னை தட்டிச்சென்றார், அச்சமயம் எனது முழங்கை அவர் மூக்கில் பட்டிருந்தால் மூக்கு உடைந்து ஆஸ்பத்திரி கொண்டுசெல்லவேண்டிய நிலை வந்திருக்கும். எனக்கு வெளியில் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு வார்த்தை சொன்னேன் என்றால் ப்ரதீப்பை ஒரு கை பார்த்து விடுவார்கள்” என்று மிரட்டும் தொனியில் கூறியது முற்றிலும் தவறானது.

ப்ரதீப் பேச்சு சாமர்த்தியம் கொண்டவர். ரூல்ஸ் படி விளையாடுபவர். மன்னிப்பு கேட்க தெரிஞ்ச மனுஷன். இதெல்லாம்தாண்டி, அவருக்கு எதிரி அவரின் வாய்தான். மனுஷனை பேசவிட்டால் அடுத்தவரை குழப்பி விடுவார்போல.!

அவரே அவரைப் பற்றி சொல்லும் பொழுது, “நான் ஓவரா திங் பண்ணுவேன், என்னால என் இடத்துல சரியா தூங்கமுடியல, ஏசி சரியா இல்ல… கொசுக்கடி வேற… ஒன்னு கவனிச்சீங்களா? ஸ்மால்பாஸ் வீட்டிலிருப்பவங்க சமைச்சுட்டு நிம்மதியா தூங்கறாங்க. அங்க குளிரும் அளவுக்கு ஏசி இருக்கு. ஆனா இங்க, நமக்குதான் டாஸ்க். ஒருவேளை ஏசி, கொசுக்கடியும்கூட நமக்கு டாஸ்கா இருக்குமோ?“ என்று கேட்கும் பொழுது, “யாரு சாமி நீ” என்ற திரைப்பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

Big boss season 7 tamil
Big boss season 7 tamil Facebook

நிம்மதியான தூக்கம் வேண்டும் என்பதற்காக விசித்திராவிடம் சென்று, “உங்க பெட்டில் நன்றாக காத்தும் ஏசியும் வருகிறது. நான் அதில் படுத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டிருக்கிறார் ப்ரதீப். தன் இடத்தில் உள்ள பிரச்னையை சுட்டிக்காட்டி Cot Exchange-க்காக ப்ரதீப் கேட்டதை, தவறாக புரிந்துகொண்ட விசித்திரா இன்று நடந்த ஒரு பிரச்னையில் போட்டு அதை தவறான நோக்கத்தில் உடைத்து விட்டார். ப்ரதீப் உடனே சுதாரித்துக்கொண்டு “நான் உங்களை அம்மா போல் நினைத்துதான் கேட்டேன். தப்பாக எதுவும் கேட்கவில்லை” என்று கூறிவிட்டார். ஆனாலும் விசித்திரா அவரைப் பார்த்து “உன் ஜீன் தப்பானது” என்று கூறவே, ப்ரதீப் அவருக்கே உண்டான சிரிப்புடன் அதை கடந்துவிட்டார்.

“போடா பைத்தியம்” என்று விசித்திரா கூற, “ஆமாம் நான் பைத்தியம் என்று எனக்கு தெரியும். எல்லோருமே என்னிடம் சொல்லி இருக்காங்க” என்று ப்ரதீப் கூறிவிட்டார். அவரை பார்க்க நமக்கே பரிதாபமாகதான் இருந்தது. இருந்தாலும், அவர் விசித்திராவை தக்க சமயத்தில் இதற்கெல்லாம் திருப்பி ஏதாவது செய்வார் என்று தோன்றுகிறது.

அடுத்தது கூல் சுரேஷ்...

கூலாக படுத்தபடி புரணி பேசிக்கொண்டிருக்கிறார். கூடவே இருந்து புரணி பேசும் ந(ண்)பர்கள் தன்னை எதிர்த்து ஓட்டு போடுவார்கள் என்று கூல் சுரேஷூக்கு இன்னும் புரியவில்லை. இதைகூட ஏதோவொரு கணக்கில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டு மூக்குத்தி போட்டுக்கொண்டு வந்து கேமராவிற்கு முன் வந்து நின்று இரட்டை அர்த்தத்தில் பேசுவது அபத்தம், ஆபாசம்.

Big boss season 7 tamil
Big boss season 7 tamil Facebook

அதே போல் பவா செல்லதுரையை வைத்து நையாண்டி செய்துக்கொண்டிருக்கிறார். அவரின் கதையை திருப்பி போட்டு அவரை மாதிரியே பேசிக்கொண்டிருக்கிறார். நடுவில் நடுவில் சாமி வந்தது போல ”தமிழண்டா” என்று கத்துகிறார். இதை அடிக்கடி சொன்னால் ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கிறாராரோ என்னவோ!

பவா செல்லத்துரை

காலையில் விசித்திராவிடம் வந்து காபி கேட்டார் பவா. அதற்கு அவர், “அதெல்லாம் தரமுடியாது, டீ தான்...வேணும்னா குடிங்க… ” என்று சொல்லும்பொழுது, விசித்திராவின் அதிகாரக்குரல் ஓங்கியது. பவா மனது பொருக்காமல் விசித்திராவைப் பற்றி பிக்பாஸிடம் முறையிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு சென்றார்.

விசித்திரா vs ஹவுஸ் மேட்ஸ்

“உங்களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய ஆள் யார்?” என்று பிக்பாஸ் கேட்டபொழுது ஆளாளுக்கு அவர்கள் மனதிற்கு பிடித்தவர்களை பற்றி சொன்னார்கள். ஆனால் யாருமே விசித்திரா பெயரை சொல்லவில்லை.

இது விசித்திராவிற்கு பெருத்த மனக்கசப்பாகி போய்விடவே, “நான் உங்களுக்கு என்ன குறைவச்சேன்? வாய்க்கு ருசியா சமைச்சு போடலையா? இந்த பொண்ணுங்களுக்கு அம்மா மாதிரி ஆறுதலா இல்லையா?” என்று மூக்கை உறிஞ்சவும், “ஆமா… நீங்க அம்மா மாதிரிதான். ஆனா, அம்மா இல்ல” என்று குரல் வந்துவிட்டது. அட யாருப்பா இதுன்னு பார்த்தா, அங்க நம்ம வினுஷா..!

விசித்திரா
விசித்திராமுகநூல்

நாலுநாளா மனசுல வச்சுருந்தத கொட்டிட்டாங்க போல. வினுஷா மேலும், “நான் மேக்கப் போடுறத பத்தி கேக்கறீங்க… இங்க எல்லாரும்தான் மேக்கப்போட சுத்திட்டு இருக்காங்க…. அவ்வளவு ஏன், நீங்ககூட தான் மேக்கப் போட்டுட்டு இருக்கீங்க. மேக்கப் போடுறது என் சுதந்திரம், என் உரிமை. அதுல நீங்க தலையிடாதீங்க…. ” என்று கூறவும்,

அடுத்ததாக அனன்யா “ஆமா… என்கிட்டகூட டாட்டூ பத்தி கேட்டீங்க… எங்கெல்லாம் போட்டிருக்க காட்டுன்னு வேற சொன்னீங்க.. டாட்டூ உங்களுக்கு பிடிக்காதுனா, அது உங்க விருப்பம். எனக்கு டாட்டு போட பிடிக்கும். அப்படிதான் போடுவேன். எல்லோரையும் உங்க கன்ட்ரோல்ல வச்சுக்க நினைக்காதீங்க” என்று ஆங்கிலத்தில் பாதி தமிழில் பாதி பேசிவிட்டு ஓரமாக போய்விட்டார்.

விசித்திரா வேகமாக, “நான் எப்போ உன்ன டாட்டூ போடவேண்டாம் என்று சொன்னேன்? என் பொண்ணு மாதிரி நினைத்து உங்களுக்கு அட்வைஸ் பண்ணினேன். இந்த காலம் கெட்டு கிடக்கு. அதனால சொன்னேன்” என்று சொல்லவும், பவா செல்லதுரையும் அவர் பங்குக்கு, “நீங்க எல்லோரையும் அடக்க நினைக்கிறீங்க… அது தப்பு” என்று கூறிவிட்டார்!. பவா காஃபி கேட்டும் விசித்திரா அதைக் கொடுக்காமல் டீ கொடுத்த கடுப்பும் இருக்கத்தானே செய்யும்.

படிப்புன்னா என்ன விச்சு… டிகிரி வாங்குறதா?

அப்பொழுது விசித்திரா “நீங்க தான் என்ன தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க, நேத்து நிக்ஸனைகூட தான் சொன்னேன், ஏன் இப்படி குழம்பு வைக்குறன்னு, அவ்வளவு ஏன்? ஜோவிகாவிடம்கூட நீ படிச்சுருக்கனும் படிப்பு எவ்வளவு முக்கியம் தெரியுமான்னு கேட்டேன். அவங்க அம்மாகிட்ட கூட உன் பெண்ணை படிக்கவச்சு இருக்கனும்னு சொல்லியிருக்கேன்” என்று கூறிவிட்டார்.

Big boss season 7 tamil
Big boss season 7 tamil Facebook

ஜோவிகாவிற்கு கோபம் வந்துவிட்டது. “நா வந்த அன்னிக்கே உங்க எல்லார்கிட்டையும் சொல்லிட்டேன். எனக்கு படிப்பு வராதுன்னு. மறுபடி மறுபடி நீங்க எங்கிட்ட அதப்பத்தி பேசினா என்ன அர்த்தம்? எனக்கு படிப்பு வரல… அதனால நான் படிக்கல. எத்தனையோ பேருக்கு படிக்க பிடிக்காமதான் படிக்கிறாங்க. அவங்களால படிக்கவும் முடியாம, ஆசைபட்டதை செய்யவும் முடியாம தவறான பாதைக்கு செல்கிறார்கள். அவங்களுக்கு முன்னுதாரனமா இருக்கனும்னுதான் நான் இதுல வந்து கலந்துக்கிட்டேன்” என்றார்.

“படிப்பைப்பத்தி உனக்கு இப்ப எதுவும் தெரியாது. பின்னாடி நான் படிக்கலையேனு நீ கஷ்டப்படுவ” என்று விசித்ரா கூறவே, “படிப்புன்னா என்ன விச்சு… டிகிரி வாங்குரறதா? அது இல்ல… தனக்கு எதுல அதிகமா ஆர்வம் இருக்கோ அதை படிக்கிறது. எனக்கு நடிக்க விருப்பம். அதனால அதுக்கு இருக்கின்ற கோர்ஸை எடுத்து படித்தேன்… ஏன் கலை ஒரு படிப்பு இல்லையா? அதுவும் ஒரு படிப்புதான்” என்று பொறிந்து தள்ளினார் ஜோவிகா.

விசித்திரா, “நான் சொன்னதை நீ புரிஞ்சுக்கல…” என ஆரம்பிக்கவே, “வெயிட்… வெயிட்… நா இன்னும் பேசி முடிக்கல…. உங்க படிப்புல அடுத்தவங்க பேசும் போது குறுக்க பேசக்கூடாதுன்னு சொல்லித்தரலையா? எனக்கு யார் யார்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு எங்க அம்மா சொல்லி தந்துருக்காங்க. அதுபோதும்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7 முகநூல்

தொடர்ந்து இந்த சண்டை இப்படியாக சென்றது...

விசித்திரா: “இந்த காலத்துல படிக்கலைனா ஒன்னுமே பண்ணமுடியாது”

ஜோவிகா: “யாரு சொன்னா?.... இங்க இருக்குறவங்க எல்லாரும் நல்லா படிச்சவங்களா?”

விசித்திரா: “நா ஒன்னும் உன்னை ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்கச்சொல்லல… பேசிக்கா எழுதப்படிக்க தெரிஞ்சிருக்கனும். ஒரு பாஸ்போர்ட் ஆபீஸ் பேங்க் சென்றால் ஃபார்ம்மை ஃபில் செய்ய தெரிஞ்சிருக்கனும்”

ஜோவிகா: “எனக்குதான் எழுத படிக்க தெரியுமே…”

விசித்திரா: “அப்படின்னா தமிழ் எழுதுடி பார்க்கலாம். கோர்வையா ஒரு சுத்த தமிழே வரமாட்டேங்குது” என்று விசித்திரா கூறவும்,

கோபம் தலைக்கு ஏற ஜோவிகா விசித்திராவை பார்த்து “தமிழ் எனக்கு இரண்டாவது Language. எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சிருக்கவேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லல… எனக்கு கார் பஞ்சர்னா, டயர் மாத்தத்தெரியும். உங்களுக்குத் தெரியுமா? பாஸ்போர்ட் ஆபீஸூக்கு போறப்போ ஃபார்ம் பில் பண்ண தெரியலைனா, அங்க இருக்கறவங்க கிட்ட உதவி கேட்பேன். நமக்கு உதவி செய்யத்தானே அவங்க உட்காந்து இருக்காங்க.

ஜோவிகா
ஜோவிகா Biggboss

ஃபார்ம் பில் பண்ண, நான் டிகிரி படிக்கனும்னு அவசியம் ஏதும் இல்ல…. படிப்பு வந்தா படி, இல்லைனா படிக்கனும்னு அவசியம் இல்ல…இங்க நா வந்தது விளையாடதான். இங்க யாரையும் அம்மா அப்பா என்று உறவு கொண்டாட வரல…. அதனால உங்க வேலை என்னவோ அத மட்டும் பாருங்க…” என்று கூறவும் (கூடவே நீட் தற்கொலைகளை குறிப்பிட்டு பேசினார்), விசித்திராவுக்கு உலகமே சுற்றியிருக்க வேண்டும். தனிமையில் ரூமிற்கு சென்று அழ ஆரம்பித்துவிட்டார்.

ஜோவிகாவின் இத்தகைய பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதில் வேதனை என்னவென்றால், வீட்டிலிருந்தவர்களும் ஜோவிகாவின் பேச்சை தவறென்று சொல்லவில்லை. எல்லோரும் கைத்தட்டுகிறார்கள். இணையவாசிகள் சிலரும்கூட. நேற்றைய போட்டியில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து Basic Manners-ஐயும் படிப்பையும் குழப்பிக்கொண்டுவிட்டார்கள். கல்வி, Manners மட்டுமே சொல்லித்தராது.

இந்த குழப்பத்தினால், ஜோவிகா பேச்சில் அடிப்படையிலேயே பல சிக்கல்கள் உள்ளன. படிப்பே வேண்டாம், டிகிரியே வேண்டாமென்கிற தொனியில் ஒரு கருத்தை பலகோடிபேர் இருக்கும் இடத்தில் ஜோவிகா போன்ற குழந்தையும் பவா போன்ற முதிர்ந்த மூத்த இலக்கியவாதியும் சொல்வது, நிச்சயம் ஏற்புடையதல்ல. ‘அப்போ, படிக்காமல் சாதனை செய்தவர்களும், நிம்மதியான வாழ்வை பெற்றவர்களும் இல்லவே இல்லையா’ என கேட்கின்றனர். இருக்கின்றனர். அவர்கள் நூறு பேர் என்றால், அது கிடைக்காமல் வாழ்வை தொலைத்தவர்களும் அன்றாட வாழ்க்கைக்கும் வேலைக்கும் போராடுபவர்கள் லட்சம்பேர்.

விசித்திரா
விசித்திரா

படிப்பு மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் விஷயம்! இங்கு இப்போதுள்ள பள்ளிக்கல்விமுறை எனக்கு பிடிக்கவில்லை / ஏற்கமுடியவில்லை / சிக்கல் உள்ளது என்றாலும்கூட, அதற்கு மாற்றுக்கல்விகள் பெறும் சூழல்களும் இங்கு உள்ளன. அதைப் பெறலாம். ஆனால் பெற்றோரின் வேலையையே செய்கிறேன் - எனக்கு அதுதான் வருகிறது என குழந்தைகளை அதை நோக்கி செலுத்துவது, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நம்மை பின்னோக்கி அழைத்துச்சென்று குலக்கல்வியில் கொண்டு நிறுத்தும். அதிலும் சமூக வலைத்தளங்களில் பலரின் ரோல் மாடலாக இருக்கும் பவாவே PHD படிப்பில் இல்லாத புகழ் வெளிச்சம் உனக்கு இருக்கும்மா என அதை மேலும் ஊக்கப்படுத்துவது அபத்தக்குவியல்.

ஜோவிகா தனது பேச்சில் நேற்று, படிப்பு வராத குழந்தைகளுக்காக, அவர்களின் Representation-ஆக நிற்கிறேன் என்றார்.! ஒருவேளை உங்களுக்கு இந்த கல்விமுறையில் சிக்கல் இருந்தால், அதை எப்படி மாற்றுவது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்வது அல்லது சீரமைப்பது என்றுதான் நீங்கள் உங்கள் பார்வையையும் கவனத்தையும் பேச்சையும் செலுத்த வேண்டுமே தவிர, அதுவே எனக்கு வேண்டாமென சொல்வது நிச்சயம் சரியல்ல. படிப்பதற்கு சிரமப்படும் குழந்தைகளுக்கு கூட சிறப்பு பள்ளிகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். படிப்பதற்கு சிரமப்படும் சிறப்புக் குழந்தைகளின் Representation-ஆக ஜோவிகா நிற்கிறாரா அல்லது வசதி வாய்ப்புகள் இருப்பதால், மீடியா புகழ் வெளிச்சம் இருப்பதால் படிக்க வேண்டாம் என கூலாக இருக்கும் priveleged சிறார்களின் Representation-ஆக நிற்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

இந்த உலகம், நம்மிடமிருந்து பிடுங்கிக்கொள்ள முடியாதது, நம் கல்வியையும் படிப்பையும் அறிவையும் மட்டும்தான். படிக்காத மேதை என இவர்கள் புகழும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராசர்கூட, பிள்ளைகளுக்கு படிப்பைக்கொடுக்கத்தான் நினைத்தாரே தவிர, படிக்காவிட்டால் என்னைப்போல ஆகலாம் என சொல்லவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு ஏன், கமல்ஹாசனே கூட நிறைய இடங்களில், “நான் 7-வதுதான் படித்திருக்கிறேன். அதற்காக சரியாக படிக்காவிட்டால் கமல்போல் ஆகிவிடலாம் என நினைக்காதீர்கள். அது சரியல்ல. நான் ஒருவேளை படித்திருந்தால், வாழ்க்கையில் நான் சிரமப்பட்டு கற்றுக்கொண்ட பல விஷயங்களை எளிமையாக கற்றிருப்பேன்” என்றுள்ளார். அதனால மக்களே... படிப்பு முக்கியம்!

இவ்விவகாரம் பற்றிய கவிஞர் மனுஷ்யபத்திரனின் பதிவொன்று வைரலாகி வருகிறது. அதையும் இங்கே விழிப்புணர்வுக்காக சேர்க்கிறோம்.

“பிக்பாஸ் ஒரு அபத்தமான பொய்யான கருத்தை இன்று உண்மைபோல நிறுவ முயன்றது. விசித்ரா ஜோவிகாவிடம் ஒரு டிகிரி படிக்கிறது நல்லது என்று சொன்னதில் என்ன குற்றம் இருக்கிறது என்று தெரியவில்லை. அதற்கு ஜோவிகா ' படிப்பு வரலை...படிக்காம இருக்கது என் உரிமை ' என்று ஹிஸ்டீரிகலாக முழங்கியதையும் அதை பவா உட்பட அத்தனை இல்லவாசிகளும் ஆதரித்தையும் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிலருக்கு பள்ளிப்படிப்பு சிரமமாக இருக்கலாம். அவர்களுக்கு எத்தனையோ மாற்றுக் கல்வி ஏற்பாடுகள் இருக்கின்றன. என் பிள்ளைகள் இருவருக்குமே முறையான கல்வி அமைப்பு பொருந்தவில்லை. ஆனால் அவர்கள் பள்ளிசாரா மாற்றுக் கல்வி அமைப்பின் மூலம் அம்மு பத்தாவதும் அப்பு பணிரெண்டாவதும் வந்துவிட்டார்கள். அம்மு படம் வரைகிறாள். அப்பு புகைப்படம் எடுக்கிறான். ஆனாலும் அவர்கள் கல்லூரிக்கு போகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நானுமே இளமையில் பள்ளி கல்விக்கு பொருந்திபோகவில்லை. ஆனாலும் தொடர்ந்து அஞ்சல் வழியில் எம்.ஏ.வரை படித்து இரண்டாம் எம்.ஏவை நேரடியாக பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
அப்போது எனக்கு இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருந்தன. படிப்பும் பட்டமும் ஒரு உலகளாவிய ஏற்பாடு. அது ஒடுக்கப்பட்ட கல்வியறிவற்ற சமூகங்களில் இருந்துவருபவர்களின் தன்னம்பிக்கை. படிப்பு இல்லாமல் உயர்ந்தவர்கள் சிலர் இருக்கலாம். வீழ்ந்தவர்கள் கோடானு கோடிப்பேர். ஒரு நூற்றாண்டுக்கு முன் 90 சதவிகிதம் கல்வியறிவற்றிருந்த சமூகத்தை போராடி மீட்டெடுத்து மேலே கொண்டுவந்திருக்கிறோம். ஒரு குழந்தையால் ஒரு கல்வி அமைப்பில் பொருந்திப்போகமுடியவில்லை என்றால் பொருத்தமான மாற்றுக் கல்வி ஏற்பாட்டை உருவாக்கித் தரவேண்டும். அத்தகைய ஏற்பாடுகள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றன. மாறாக " படிப்பு வரலை...படிக்காம இருக்கிறது என் உரிமை" என்பதுபோன்ற பேத்தல்களை ரொமான்டிசைஸ் செய்து ஆதரிப்பது பொறுப்பற்றதனம்.

ஜோவிகா போன்ற privilege சமூக பின்புலம் கொண்டவர்களுக்கு படிப்பு இல்லாவிட்டாலும் மாற்றுவழிகள் இருக்கின்றன. ஆனால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அவர்கள் தங்கள் வரலாற்றுப் பாதாளங்களிலிருந்து மேலேவர படிப்பும் பட்டமும்தான் பற்றுக்கோடு. ' படிப்பு வராவிட்டால் தொழில் கல்விக்குபோ, படிப்பு வராவிட்டால் வேற ஏதாச்சும் பண்ணு..படிக்காத மேதை...படிப்புத்தான் அறிவா..." என்பதெல்லாம் கல்விக்கு எதிரான ஒரே குரல்கள். எண்ணும் எழுத்தும் தெரியாவிட்டால்கூட பரவாயில்லை என நியாயப்படுத்தும் அளவுக்கு இன்றைய ஷோவில் போனார்கள். இதில் ' நீட்' பற்றிய பேத்தல்கள் வேறு. தேவனே.. இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.”

இன்றைய எபிசோடில், கமல் இதற்கு உரியமுறையில் விளக்கம் கொடுக்கிறாரா என்று பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com