பாரதிராஜா web
சினிமா

அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் பாரதிராஜா உடல்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Rishan Vengai

இயக்குநர் இமயம் பாரதிராஜா மரணமடைந்ததை அடுத்து, அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது உடல் தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று மாலை 3 மணிக்கு அங்குள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கின்போது, முழு அரசு மரியாதை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். உடல்நலக் குறைவால் காலமான பாரதிராஜாவின் உடல், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

Bharathiraja

அப்போது அவரது உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார். கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்ட பாரதிராஜாவின் உடல், வத்தலகுண்டு அருகே காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு அங்குள்ள தோட்டத்தில், அரசுமரியாதையுடன் அவரது உடல்நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளைத் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பாரதிராஜா

பாரதிராஜாவின் உடல் ஏன் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது என்ற காரணத்தை வெளிப்படுத்திய பாரதிராஜாவின் சகோதரியின் மகன், “மன அழுத்தம் ஏற்பட்டால் அவர் இங்குதான் வந்து தங்குவார். இளையராஜா, வைரமுத்துவை இந்த வீட்டில் தான் சந்தித்து பேசுவார், இங்கு அவருக்கு தாய் மடியில் படுக்கும் உணர்வை அளிப்பதாக கூறுவார்” என தெரிவித்துள்ளார்.