\
பாரதிராஜா - கங்கை அமரன்
பாரதிராஜா - கங்கை அமரன்pt

”அவர் காசுல தான் நாங்க சாப்பிட்டு வாழ்ந்தோம்..” நா தழுதழுக்க பேசிய கங்கை அமரன்!

அவர் இல்லை என்றால் நானும் இளையராஜாவும் சென்னை வந்திருக்க மாட்டோம், எங்களை ஆளாக்கிய மகான் பாரதிராஜா என்று கண்ணீர்விட்டபடி பேசினார் கங்கை அமரன்.
Published on
Summary

தமிழ் சினிமாவின் கிராமிய மண்வாசனையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானது திரையுலகுக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அவரின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தும் நிலையில், அவருடன் பயணித்த கங்கை அமரன், ‘அவர் சம்பளத்தை பகிர்ந்து நாங்க சாப்பிட்டு வாழ்ந்தோம், எங்களை ஆளாக்கியவர் அவர்’ என கண்கலங்கிப் பேசினார்.

தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் அவர் உருவாக்கிய தாக்கம் சாதாரணமானது கிடையாது. ஸ்டுடியோவுக்குள் உழன்ற சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படத்தை கொடுத்தவர். கதாநாயகனுக்கான வரையறைகளை மாற்றி நாயகனுக்கு கோவணம் கட்டி வெத்தலை சொத்தப்பும் சப்பாணியாக மாற்றிக் காட்டியவர்.

இயக்குநர் பாரதிராஜா மரணம்
இயக்குநர் பாரதிராஜா மரணம்web

தமிழ் சினிமாவில் அவர் வருகைக்கு முன்.... அவர் வருகைக்கு பின் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அவருடைய இழப்பு தமிழ் திரையுலகிற்கு மாபெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

பாரதிராஜா உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்திவரும் நிலையில், அவருடைய நண்பரும் ஒன்றாக சேர்ந்து பயணப்பட்டவருமான கங்கை அமரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், “எங்களை வளர்த்து ஆளாக்கிய ஆள் பாரதிராஜா, அவர் சென்னைக்கு வரலனா, இளையராஜாவும் நாங்களும் சென்னைக்கு வந்திருக்க மாட்டோம். அவருடைய சம்பளத்தை பகிர்ந்து தான் நாங்கெல்லாம் சாப்பிட்டு வாழ்ந்தோம். எங்களுக்கு சாப்பாடு போட்டு எங்கள ஆளாக்குன ஆளு அவர், அப்படிப்பட்டவர இழந்துட்டோம், பேசமுடியாதளவு வருத்தம் இருக்கு. அவர் எங்களுக்கு என்னெல்லாம் பண்ணியிருக்காருனு எல்லாருக்கும் தெரியும், என்னை, வைரமுத்துவை எல்லாம் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அவர் இப்போது இல்லை, அவருடைய படைப்பை பார்த்து சந்தோஷப்படுங்க என கண்ணீர்விட்டு பேசினார்.

மேலும், பாரதிராஜா மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ‘அனாதையாக சாவ விட்டுட்டிங்களே’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘இது எங்களுடைய குடும்ப பிரச்னை, அதை செய்தியாக்காதீர்கள், எந்த பிரச்னையும் இல்லை, நல்ல ஆத்மா மறைந்திருக்கிறது, அவருடைய ஆத்மா சாந்தியடை பிரார்த்தியுங்கள்’ என பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com