\
director bharathiraja Sayed 16 vayathinile movie rajini salary issue
பாரதிராஜா - ரஜினிpt

ரூ.5,000 கேட்ட ரஜினி.. ரூ.3000 மட்டுமே கொடுத்த பாரதிராஜா!

கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்த 16 வயதினிலே படம், தமிழ்த் திரையுலகையே புரட்டிப் போட்டது. வசூலிலும் வாரிக் குவித்தது.
Published on

'இயக்குநர் இமயம்' எனப் புகழ்பெற்ற பாரதிராஜா, உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 10) அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவரது நினைவலைகள் பற்றிப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அவரது ‘16 வயதினிலே’ படம் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்த இந்தப் படம், தமிழ்த் திரையுலகையே புரட்டிப் போட்டது. வசூலிலும் வாரிக் குவித்தது. இசைஞானி இளையராஜா இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.5000 கேட்டதாகவும், ஆனால் பாரதிராஜா ரூ.3000 மட்டுமே கொடுத்ததாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து பாரதிராஜா அளித்த ஒரு பேட்டியில், “16 வயதினிலே' படத்தில் கிராமத்து ரவுடியான பரட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்தை அணுகினேன். அப்போது அவர், சம்பளமாக 5,000 ரூபாய் கேட்டார். அதற்கு நான், ’அது ஒரு மிகக் குறைந்த பட்ஜெட் படம். என்னால் அந்தத் தொகையைக் கொடுக்க முடியாது’ என்று அவரிடம் கூறினேன். பிறகு, அவர் 4,000 ரூபாய் கேட்டார், இறுதியில் 3,000 ரூபாய்க்கு வந்தார், அதை நான் கொடுக்க ஒப்புக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார். அப்போது, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், இந்தப் படத்தில் நடித்ததற்குப் பிறகு ரஜினி, கமல், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் உச்சம் தொட்டனர். அதிலும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டில் கால் பதித்தார்.

பாரதிராஜா
பாரதிராஜா

பாரதிராஜாவின் மறைவு குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பல நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர் பாரதிராஜா. திரையுலகில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதலில் குரல் கொடுத்தது பாரதிராஜாதான். குழந்தை போன்றவர் பாரதிராஜா, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் என் நடிப்பை பிடிக்காது என வெளிப்படையாக கூறுவார்” என்றார்.

director bharathiraja Sayed 16 vayathinile movie rajini salary issue
நடிக்க ஆசைப்பட்ட பாரதிராஜா.. கோபத்தில் இயக்குநராக மாறிய கதை.. மின்னிய நட்சத்திரங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com