முதல்வன் திரைப்படம் ரகுவரன் - அர்ஜுன்
முதல்வன் திரைப்படம் ரகுவரன் - அர்ஜுன் Youtube
சினிமா

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 23 | உடலசைவிலேயே அசாத்திய நடிப்பை கொடுத்த ‘முதல்வன்’ பட ரகுவரன்

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் அரசியல்வாதி பாத்திரத்தில் விதம் விதமாக நடித்திருந்தாலும் ‘முதல்வன்’ படத்தின் ‘அரங்கநாதன்’ பாத்திரத்தை நம்மால் எளிதில் மறக்க முடியாது. தனது அசாதாரண நடிப்பின் மூலம் அதை தனித்துவம் கொண்டதாக மாற்றியிருந்தார் ரகுவரன். 

முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன்

“நான் உட்கார்ந்திருக்கிற நாற்காலில நாலு கால் என்னோடது இல்ல. ஒரு கால் கூட்டணிக் கட்சிக்காரனுடையது. ரெண்டாவது கால் சாதிக்காரனோடது, மூணாவது கால், நாம ஆட்சி நடத்த பணம் தர்றானே. பணக்காரங்க.. அவங்களோடது. நாலாவது கால் நம்ம தொண்டர்கள்து.. இதுல ஒரு கால் போனாலும் நம்ம மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். இந்தப் பிரச்சினையை தீர்க்கக்கூடாது. இதை வெச்சு அரசியல் பண்ணனும்” என்று கொழுந்து விட்டெறியும் சாதிக்கலவரத்தை அடக்க ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல், தனது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதையே பிரதானமாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பாத்திரத்தை ரகுவரன் சிறப்பாகக் கையாண்டிருந்தார். 

ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பிறகு ஹீரோவான நடிகர்கள் பலர். ஆனால் ஹீரோவாக அறிமுகம் ஆகி பிறகு வில்லன் பாத்திரங்களில் பிரகாசித்தவர் ரகுவரன். கூடவே குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார். வருமானத்திற்காக ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்காமல், சவாலான பாத்திரங்களை தேடிச் சென்றவர் ரகுவரன். ஒப்பனை, உடல்மொழி, வசன உச்சரிப்பு என்று பாத்திரத்திற்காக மிகவும் மெனக்கெட்டவர். ‘மெத்தட் ஆக்டிங்’ பாணியில் பாத்திரத்தின் மனநிலையில் வாழ்ந்தவர்.

ரகுவரன்

அகங்காரம் + அதிகாரம் = அரங்கநாதர்

முன்நெற்றியில் வந்து விழும் நரை முடி, தடித்த கண்ணாடி, சந்தன நிற ஜிப்பா, நீளமான அங்கவஸ்திரம், வேட்டி என்கிற ‘அரங்கநாதன்’ கெட்டப், ரகுவரனுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தது. “இவரே பாம் வைப்பாராம், எடுப்பாராம்” “யோவ் முடியுமா.. முடியாதா?” என்று ரகுவரன் நடித்த பல காட்சிகளும் வசனங்களும் பிறகு ‘மீம்ஸ்’ மெட்டீரியல்களாக சமூகவலைத்தளங்களில் மாறியது.

முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன்

இந்தப் பாத்திரத்திற்காக வித்தியாசமான மாடுலேஷனைப் பின்பற்றியிருந்தார் ரகுவரன். சுமார் எழுபது வயது அரசியல்வாதியின் பாத்திரத்தை ரகுவரன் ஏற்று நடிக்கும் போது அவரது உண்மையான வயது நாற்பதாக மட்டுமே இருந்தது. 

மக்களின் மீது துளியும் அன்பில்லாத, தனது அதிகாரத்தையும் அகங்காரத்தையும் மட்டுமே முக்கியமாகக் கருதுகிற ஓர் அரசியல்வாதியின் முகத்தை ஆரம்பக் காட்சியிலேயே வெளிப்படுத்தி விடுகிறார் அரங்கநாதன். முதலமைச்சருக்கான ‘கான்வாய்’ ஆரவாரங்களுடன் பூஞ்சோலை கிராமத்திற்குள் வாகனங்கள் நுழைகின்றன.

முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன்

காரில் இருந்து இறங்கும் முதல்வர், வேண்டாவெறுப்பாக ஒருவர் போடும் மாலையை ஏற்றுக் கொள்கிறார். ‘ஐயா.. சால்வை.. சால்வை’ என்று இன்னொருவர் கதறுவதை கண்டுகொள்ளவில்லை. ‘அய்யா.. காந்தி சிலைக்கு மாலை போடணுங்க” என்று தலைமைச் செயலாளர் சொல்லும் போது ‘மொதல்லயே சொல்றதில்லையா?’ என்று எரிச்சலுடன் அந்தச் சடங்கை செய்து முடிக்கிறார்.

ஒரு ஆர்வக்கோளாறான தொண்டர், முதல்வரின் கையைப் பற்ற உற்சாகமாக முண்டியடிக்கும் போது தொண்டரின் நகம் பட்டு முதல்வரின் விரலில் ரத்தம் வந்து விடுகிறது. வாகனம் கிளம்புகிற போது அந்தத் தொண்டரை அழைக்கிற அரங்கநாதர், கார் சன்னலின் இடைவெளியில் தொண்டரின் கையைப் பிடித்து முறித்து விடுகிறார்.

முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன்

“என்னைக் கிள்ளினேல்ல.. பதிலுக்கு நானும் கிள்ளிட்டேன்” என்று சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் இந்தக் காட்சி, நாடகத்தன்மையைக் கொண்டதாக இருந்தாலும் ஒரு ஆசாமியின் வக்கிரத்தை வெளிப்படுத்துகிற காட்சி என்று சமாதானமாகிக் கொள்ளலாம். (ஒருவேளை உண்மைச்சம்பவமோ?!)

அந்த அட்டகாசமான ‘இண்டர்வியூ காட்சி’ 

இந்தப் படத்தில் வருகிற  ‘இண்டர்வியூ காட்சி’, இன்றைக்குப் பார்த்தாலும் பரபரப்பை அளிக்கக்கூடியது. அரங்கநாதன் இறுதியாகப் பேசுகிற வசனத்திலேயே இதைச் சொல்ல வேண்டுமென்றால் ‘That was a good interview’. ஒரு வெகுசன திரைப்படம், சுவாரசியமாக நகர வேண்டுமென்றால் காட்சிகள் நீளமாக அமையக்கூடாது.

நறுக்குத் தெறித்தாற் போல் வசீகரமான துண்டுகளாக அவை பயணித்துக் கொண்டிருக்க வேண்டும். இதுதான் ஷங்கர் திரைக்கதை எழுதும் பாணியும் கூட. இந்த வழக்கத்திற்கு மாறாக ‘இண்டர்வியூ காட்சி’ பன்னிரெண்டு நிமிடங்களுக்கும் மேலாக நீள்கிறது.

முதல்வன் திரைப்படம்

ஷங்கர் எடுத்த அனைத்து திரைப்படங்களையும் ஒப்பிடும் போது இதுதான் மிக நீளமான காட்சி. சிரமப்பட்டு எடுத்த காட்சியும் கூட. ‘முதல்வனின்’ திரைக்கதை இந்த நீளத்தைக் கோருகிறது. ஏனெனில் படத்தின் முக்கிய திருப்பமே இங்குதான் நிகழப் போகிறது. 

இதைப் படமாக்கிய அனுபவத்தைப் பற்றி, ஷங்கர் ஒரு முறை நேர்காணலில் பகிர்ந்த போது “ரகுவரன் கிட்ட காட்சி. வசனத்தை விளக்கிட்டு ‘ஆக்ஷன்’ சொல்லிட்டு தூரத்துல இருந்து பார்க்கறேன்.. அவர் நடிக்கறது மாதிரியே தெரியல. சும்மா.. கைய நீட்டி.. பேசற மாதிரி இருந்தத பார்த்து ஷாக் ஆயிட்டேன்.

ரகுவரன் - சங்கர்

அப்புறமா மானிட்டர்ல பார்க்கும் போதுதான் தெரியுது. அவர் முகபாவங்கள்லயே எத்தனை நுட்பமான நடிப்பைத் தந்திருக்கிறார்ன்றது தெரிஞ்சது. ஃபைனல்ல பார்க்கும் போது முழு திருப்தியைத் தந்தது” என்பது போல் சொல்லியிருந்தார். ஒரு முதல்வருக்கான தோரணையுடன் அந்தக் கட்டுப்பாட்டின் எல்லையில் நின்று தனது நடிப்பை சிறப்பாக வழங்கியிருந்தார் ரகுவரன். 

இந்தக் காட்சியில் ரகுவரன், அர்ஜுன் ஆகிய இருவருமே போட்டி போட்டு சிறப்பாக நடித்திருந்தார்கள். முதல்வருக்குரிய பந்தாவுடன் நேர்காணலை எதிர்கொள்ளத் தயாராவார் அரங்கநாதன். ஆளுங்கட்சியின் புகழ்பாடும் வழக்கமான இண்டர்வியூ என்கிற மிதப்பில் அமர்ந்திருப்பார். ஆனால் புகழேந்தியின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் முகம் வியர்த்து தண்ணீர் அருந்த வேண்டியிருக்கும். 

முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன் - அர்ஜுன்

“ஒரு நாள் சிஎம்மா இருந்து பாரு”

தேர்தல் அறிக்கையைக் காட்டும் புகழேந்தி, ‘ஞாபகமிருக்கா?” என்று கேட்க ‘எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு’ என்று முதலில் நக்கலாக சொல்லும் முதலமைச்சர், “புத்தகத்தை எழுதினதே நான்தானே.. ஒவ்வொரு வாக்குறுதியும் மனசுல பதிஞ்சுருக்கு. எல்லோருக்கும் இலவச கல்வின்றது ‘கலவி’ன்னு அச்சாகியிருக்கு. லன்னாலே புள்ளி போடலே. மனப்பாடம்ப்பா” என்று அநாயசமாக அந்தக் கேள்வியை எதிர்கொள்வார்.

புகழேந்தியின் கேள்விகளுக்குள் சிக்கிக் கொண்டாலும் ஒரு கட்டத்தில் ரகுவரனின் ஆதிக்கம் ஓங்கும். “ஒரு நாள் சிஎம்மா இருந்து பார்க்கறியா.. எவ்வளவு குறை நிறைகள், எவ்வளவு கண்ணீர், எவ்வளவு மாலைகள்.. எத்தனை டென்ஷன்னு.. பதவில இருக்கறவனுக்குத்தான் தெரியும்” என்று சவால் விடுவார். பதட்டமடைவது இப்போது புகழேந்தியின் முறை.

முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன் - அர்ஜுன்

அவர் நீர் எடுத்து அருந்த “லைவ் ரிலே ஓடிட்டிருக்கு தம்பி.. பதில் சொல்லு” என்று பதிலுக்கு நக்கலடிப்பார். ஒரு அட்டகாசமான பின்னணி இசையுடன் இந்த பரபரப்பான காட்சி முடிவடையும். இப்படி இருவருக்குமே சமமான இடம் அளிக்கும் வகையில் இந்தக் காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. 

இந்தப் படத்தின் சிறப்பம்சத்திற்கு சுஜாதாவின் வசனமும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அடர்த்தியான விஷயங்களை சுருக்கமான மொழியில் ஆழமாகவும் சுவாரசியமாகவும் குறும்பாகவும் சொல்வது சுஜாதாவின் பாணி. பல இடங்களில் அவரது முத்திரை பளிச்சிட்டது.

முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன்

எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களை கவர்னர் முன்னிலையில் தரும் போது வசனம் ஏதுமில்லாமல் பார்வையாலேயே மிரட்டலான நடிப்பைத் தந்திருப்பார் ரகுவரன். ‘ஒரு நாள்ல என்ன செஞ்சு கிழிச்சிடறேன்னு பார்க்கறேன்’ என்கிற அலட்சியம் அதில் நிறைந்திருக்கும். 

சாதாரண உடல்மொழியிலேயே மிரட்டியிருந்த ரகுவரன்

ஊழலில் சிக்கிய அனைத்து அமைச்சர்களையும் கைது செய்யும் புகழேந்தி “இதுக்கெல்லாம் மூல காரணம் நீங்கதான். அதனால உங்களையும் கைது பண்றேன்” என்று சொல்ல முதலில் திகைத்தாலும் “ஸ்கூல் பையன் மாதிரி பேசாத. ஒரு சிஎம்-ஐ கைது பண்றது அவ்வளவு ஈஸியில்ல” என்று கெத்தாகப் பேச “நான்தான் இன்னிக்கு சிஎம்” என்று சொல்லி வரம் தந்தவனின் தலையிலேயே கையை வைப்பார் புகழேந்தி. இருளடைந்த முகத்துடன் ஆத்திரம் கொப்பளிக்க காவல் துறை வாகனத்தில் ஏறுவார் அரங்கநாதர். 

முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன்

மக்களிடையே செல்வாக்கு உயரும் புகழேந்திக்கு, சதித் திட்டங்களின் மூலம் பல்வேறு விதமான நெருக்கடிகளைத் தரும் அரங்கநாதரை, தனிச் சந்திப்பின் மூலம் வென்று வீழ்த்தும் அந்த ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ காட்சி, நாடகத்தன்மையிலானது என்றாலும் அட்டகாசமானது. வில்லன் பாத்திரம் என்பதற்காக ஓவர் ஆக்ட் செய்து மிரட்டாமல், இடது கையை உயர்த்தி சுட்டு விரலை நீட்டி நீட்டி “தம்பி. சுடும்ன்னு சொல்றேன்.. உனக்குப் புரியலை. கையை விட்டுப் பாரு” என்று சாதாரண உடல் அசைவிலேயே தனது பாத்திரத்தை மறக்க முடியாததாக ஆக்கிவிட்டார் ரகுவரன்.