போஸ் வெங்கட் டாணாக்காரன்
சினிமா

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: சமூக அக்கறையும் அரசியல் அறிவும் நிறைந்த ‘மதி’யாக போஸ் வெங்கட்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘டாணாக்காரன்’ திரைப்படத்தில் போஸ் வெங்கட் ஏற்று நடித்திருந்த ‘இன்ஸ்பெக்டர் மதி’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

காவல் துறையினரால் பொது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றி நிறைய தமிழ்த் திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் காவல்துறைக்கு உள்ளேயே நிகழும் கொடுமையைப் பற்றி சித்திரத்த படங்கள் அபூர்வமானவை. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று ‘டாணாக்காரன்’.

டாணாக்காரன்

புதிதாக காவல்துறை பணியில் இணையும் இளைஞர்களை ‘பயிற்சி’ என்கிற பெயரில், உயர் அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதை இந்தத் திரைப்படம் அசலுக்கு நெருக்கமான திரைமொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறது. தமிழ் இயக்கிய முதல் திரைப்படம் இது. இயக்குனர் காவல்துறையில் பணிபுரிந்தவர் என்பதால் அந்தத் துறைக்குள்ளேயே நிகழும் கொடுமையை மிக யதார்த்தமாக பதிவாக்கியுள்ளார்.

போஸ் வெங்கட் - அற்புதமான கேரக்டர் ஆர்டிஸ்ட்

‘டாணக்காரன்’ திரைப்படத்தில் லால், எம்.எஸ்.பாஸ்கர் என்று பல அற்புதமான நடிகர்கள், துணைக் கதாபாத்திரங்களில் அசத்தியிருந்தாலும், இன்ஸ்பெக்டர் மதியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட்டின் பாத்திரம் ஸ்பெஷலானது. ஊழல், ஆதிக்கவுணர்வு, சாதிய மனோபாவம், சித்திரவதை என்னும் கடுமையான இருளுக்கு இடையில் ஒரு நேர்மையான ஒளியாக இவரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோ, விரக்தியின் உச்சத்தில் விலகலான முடிவை எடுக்கும் போது, அரசியல் ரீதியில் அவனை சரியாக வழிநடத்தும் பாத்திரம் என்பதாலேயே ‘மதி’யின் கேரக்டர் மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது. 

போஸ் வெங்கட்

வாய்ப்பிற்காக முட்டி மோதும் பெரும்பாலான நடிகர்களைப் போலத்தான் வெங்கடேசனின் சினிமா பயணமும் ஆரம்பித்துள்ளது. ‘மெட்டி ஒலி’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் முதல் வாய்ப்பு கிடைக்கிறது. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது போல ‘போஸ்’ என்கிற பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததால் அந்தப் பாத்திரத்தின் பெயரே அவருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டது. 

மெட்டி ஒலி தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காலத்திலேயே நான் பார்த்திருக்கிறேன். சில திறமையான நடிகர்களை அவர்களின் ஆரம்பக் கட்டத்திலேயே பார்வையாளர்கள் இனம் கண்டுகொள்வார்கள். அவ்வாறு ‘யார்யா.. இந்தாளு.. இப்படி யதார்த்தமா நடிக்கறான்?’ என்று வெங்கட்டின் நடிப்பை நான் வியந்திருக்கிறேன். 

போஸ் வெங்கட்

மெட்டி ஒலிக்குப் பிறகு பல சீரியல்களில் நடித்து, பாரதிராஜாவால் ‘ஈர நிலம்’ என்கிற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ் சினிமாவில் பல்வேறு பாத்திரங்களை ஏற்று, இன்று தவிர்க்க முடியாத கேரக்டர் ஆர்டிஸ்ட்டுகளுள் ஒருவராக வெங்கட் பிரகாசிக்கிறார். அப்படியாக அவர் நடித்த சிறந்த பாத்திரங்களுள் ஒன்றுதான் ‘டாணாக்காரன்’ மதி. 

கருப்பு ஆடுகளுக்கு மத்தியில் ஓர் அரசியல் ஆசான்

காவல்துறை பயிற்சி நிலையம் என்கிற பெயரில், புதிதாக பணிக்கு இணைபவர்களை கொடுமைப்படுத்தும் வதைக்கூடமாக அது இருக்கிறது.

ஊழலும் அடிமைத்தனமும் பாரபட்சமும் நிறைந்திருக்கும் அந்தச் சூழலில் முற்போக்கு சிந்தனையும் அரசியல் அறிவும் கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் சட்ட வகுப்பு எடுப்பதற்காக வருகிறார். அவருடைய பெயர் மதி. (போஸ் வெங்கட்).

போஸ் வெங்கட்

பயிற்சி மாணவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “என்ன சந்தேகம்னாலும் என் கிட்ட கேட்கலாம். ஆனா எனக்கொரு சந்தேகம். நீங்க ஏன் போலீஸ் வேலைக்கு வந்தீங்க.. மனசுல பட்டதை சொல்லணும்” என்று முதல் கேள்வியிலேயே ஆழமான ஆனால் தோழமையான உரையாடலை ஆரம்பிக்கிறார்.

“அய்யா.. போலீஸ்னா எல்லோரையும் அடிக்கலாம்யா.. மாமூல் வாங்கலாம். அப்படியே செட்டில் ஆயிடலாம்” என்று ஒரு மாணவன் யதார்த்தமாகச் சொல்ல வகுப்பில் அனைவரும் சிரிக்கிறார்கள். 

“ஏன்.. நீங்க ரவுடியா போயிருக்கலாமே.. இஷ்டத்திற்கு அடிச்சிருக்கலாம். மாமூலும் வாங்கியிருக்கலாம்” என்று அவனிடம்  மதி கேட்கும் பதில் கேள்வி, முகத்தில் அறைந்தது போல் இருக்கிறது.

“இல்லீங்கய்யா.. இது லத்திய கைல வெச்சிக்கிட்டு பண்றதுங்க” என்று அவன் சொல்ல “ஓ.. அடிக்கணும்ன்னு வந்திருக்கீங்க” என்று கசப்பான புன்னகையுடன் அமரச் சொல்கிறார். காவல்துறையில் பணிக்குச் சேரும் பெரும்பாலானவர்களின் சுயநல சிந்தனை இப்படித்தான் இருக்கிறது என்பதை இந்தக் கேள்வியும் பதிலும் உணர்த்துகிறது. 

டாணாக்காரன்

அடுத்து எழும் மாணவன் “ஊர்ல பொண்ணு தரேன்னாங்க” என்று இன்னொரு யதார்த்தமான காரணத்தைச் சொல்ல வகுப்பு சிரிக்கிறது. அடுத்து எழுபவன் முரட்டுத்தனமான தோற்றத்தில் இருக்கிறான். “அய்யா.. தேவையில்லாம நாட்ல போராட்டம், ஆர்ப்பாட்டம் பண்ணி டைம் வேஸ்ட் பண்றவனையெல்லாம் சுட்டுத் தள்ளணும்யா” என்பதாக அவனுடைய பதில் இருக்கிறது. அதுவரை புன்னகையுடன் இருந்த மதியின் முகம் இறுக்கத்தில் உறைகிறது. ஒட்டுமொத்த வகுப்பும் திகைத்து அவனை திரும்பிப் பார்க்கிறது. அதுவரை பன்மையில் மாணவர்களை மரியாதையுடன் விளித்துக் கொண்டிருந்த மதி, தன்னிச்சையாக ‘உட்கார்’ என்று ஒருமையில் அவனிடம் சொல்கிறார். 

ஒரு சாமானியனுக்கு கடவுளுக்கு அடுத்தபடியாக காவல்துறை

“உங்க வாழ்க்கைல எப்ப முதன் முதலா ஒரு போலீஸ்காரனை நேருக்கு நேரா எதிர்கொண்டீங்க.. ஞாபகம் இருக்கா?” என்று வகுப்பை நோக்கி மதி கேட்க அனைவருமே கை தூக்குகிறார்கள். இதன் பிறகு மதி பேசும் வசனமானது, காவல்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது. 

“அதான் போலீஸ். இல்லாத ஏழைகளோட மிகப் பெரிய நம்பிக்கை கடவுள். கடவுளுக்கு அடுத்தபடியா அவர் யார்ட்ட வந்து நிப்பான் தெரியுமா? நாளைக்கு காக்கிச் சட்டை போடப் போற உங்க கிட்டதான். அய்யா.. ஒருத்தன் என்னை அடிச்சிட்டான்.. அய்யா.. இன்னொருத்தி கூட என் புருஷன் தொடர்புல இருக்கான். வந்து கேளுங்க.. அவங்க அண்ணன் தம்பி கூட சொல்ல முடியாத விஷயத்தை உங்க கிட்ட வந்து சொல்லுவாங்க..”

“... போலீஸ்… ஒரு சமூக மருத்துவன். இதை வேலைன்னு நெனச்சா நல்ல வருமானம் வர்ற வேலை. ஆனா சேவைன்னு நெனச்சா.. மக்களுக்கு நீங்க கடவுளா மாறலாம்.

விக்ரம் பிரபு

உழைக்கும் மக்களோட உரிமைகளை, அவங்களோட நியாயமான போராட்டத்தை, பெண்கள், குழந்தைகளை மதிக்கற பண்பை, எந்தச் சூழலிலும் என் நேர்மையை யாருக்கும் காசுக்காக விற்க மாட்டேன்ற துணிச்சலை இந்தப் பயிற்சில நான் உங்களுக்கு தர முடியும்ன்னு முழுமையா  நம்பறேன். புதுசா.. மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிற உங்களுக்கு என்னோட புரட்சிகரமான வாழ்த்துகள்” என்று முஷ்டியை மடக்கி கையை உயர்த்தி மதி வாழ்த்து சொல்லும் காட்சியில் போஸ் வெங்கட்டின் நடிப்பும் எழுதப்பட்டிருக்கும் வசனமும் அற்புதமாக இருக்கிறது. 

ஊழலும் லஞ்சமும் சமூக நோய்

இன்னொரு காட்சி. ‘உயர் அதிகாரிகளுக்கு பரிசு’ என்கிற பெயரில் பயிற்சி மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதை மதி கவனிக்கிறார். இதை உயர் அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். ஆனால் மறைமுகமான அவமதிப்பையே எதிர்கொள்ள நேர்கிறது. ஏறத்தாழ அனைத்து அதிகாரிகளும் அந்த மோசடிக்கு உடந்தை என்னும் போது ஒரு நோ்மையான அதிகாரியால் என்ன செய்து விட முடியும்?

விக்ரம் பிரபு

புதிதாக உருவாகவிருக்கும் காவலர்களிடமாவது விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று வகுப்பில் அதைப் பற்றி பேசுகிறார். ‘கையூட்டுத் தடுப்புச் சட்டம் 1987’ என்பது பாடத்தின் தலைப்பு. “இந்த கையூட்டு, லஞ்சம், ஊழல் எல்லாம் ஏதோ புதுசா.. இன்னிக்கு நேத்திக்கு வந்ததில்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளா.. இந்த மனித சமூகத்தின் சீரழிவின் அடையாளம்தான் இந்த லஞ்சமும் ஊழலும். யாருக்கும் எதுவும் கிடைக்கறதுக்கு முன்னால எல்லாமே எனக்குத்தான் கிடைக்கணும்ன்ற ஒரு உளவியல் நோய்தான் லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் காரணம்”

“.. கொலை பண்ணிட்டு கொள்ளையடிச்சிட்டு அதுல இருந்து தப்பிச்சுக்கறதுக்காக கொடுக்கறது மட்டும் லஞ்சம் இல்ல. நீங்க எல்லோருமா சேர்ந்து காம்ப்ளிமெண்ட்ன்ற பேர்ல ஏசிக்கு வசூல் பண்ணிக் கொடுக்கறீங்கள்ல.. அதுக்குப் பேரும் லஞ்சம்தான். அநீதியை பார்த்துட்டு சகிச்சிக்கிட்டு போகாதீங்கடா தம்பி. ஒரு தடவ சகிச்சிக்கிட்டு போயிட்டா, அதுவே பழக்கத்திற்கு வந்துடும்.

விக்ரம் பிரபு

அந்த மாதிரி பழகி நம்மாளல எதுவுமே செய்ய முடியாதுன்னு ஒதுங்கிப் போன போலீஸ்காரன்தான் தொன்னூறு சதவீதம் இங்க இருக்கான். அந்த வரிசைல நீங்களும் இருக்காதீங்க. பணம் கொடுக்காதீங்க. உங்க நண்பர்களும் கொடுக்க அனுமதிக்காதீங்க. லஞ்சத்தையும் ஊழலையும் எதிர்த்து சண்டை போடுங்க” என்று பயிற்சி மாணவர்களை நேர்மையான வழியில் நல்வழிப்படுத்தும் காட்சியில் போஸ் வெங்கட்டின் நடிப்பும் உடல்மொழியும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. நேர்மையான செயல்பட முனையும் ஹீரோவிற்கு கூடுதல் ஊக்கம் தருகிற காட்சி இது. 

அமைப்பை மாற்ற அமைப்பிற்குள்தான் போராட வேண்டும்

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. ஹீரோவிற்கும் அவரது டீமிற்கும் கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. அதை எதிர்த்து குரல் தருகிறார் மதி. “இந்த சிஸ்டம் இப்படித்தான் இயங்கும். இயங்க வேண்டும். அதை எதிர்த்து நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்று அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. 

தனக்கும் தன்னைச் சார்ந்த குழுவிற்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் அதிகார வர்க்கத்தினரின் சதியால் மறுக்கப்படுவதால் ஹீரோ மனம் உடைந்து போகிறான். காவல் துறை பணியில் இருந்து விலக முடிவு செய்கிறான்.

விக்ரம் பிரபு

அப்போது அவனைத் தடுத்து நிறுத்தி மதி பேசும் வசனம்தான், இந்தத் திரைப்படத்தின் முத்தாய்ப்பான காட்சி. 

“என்னடா.. தம்பி. ஒண்ணும் சொல்லாம போற?”

“அய்யா.. எங்கப்பாவோட கடைசி ஆசைங்கய்யா.. காக்கிச் சட்டய போட்டுக்கிட்டு ஒரு நோ்மையான போலீஸா நான் ஆவணும்ன்றது. அதனாலதான் நான் செத்தாலும் பரவாயில்லன்னு இத்தனை முயற்சி பண்ணேன். நேர்மைக்கு இங்க மதிப்பில்லன்னா நான் இருந்து என்ன செய்ய முடியும்?!.. வேணாம்யா.. நான் போறேன்”

“டேய் தம்பி.. இந்த சிஸ்டம் இருக்கே.. முரட்டு வெள்ளைக்காரனுக்கும் முட்டாள்தனமான அரசியல்வாதிகளுக்கும் பொறந்த குழந்தைடா. இங்க நேர்மையா இருக்கணும்னு நெனக்கறவன்தான் கஷ்டப்படணும். இத மாத்தணும்.. இதை நாம மாத்தாம.. யாரு வந்து மாத்துவா? மக்களை நேசிக்கிற நீ வெளில போய் என்ன பண்ணப் போற?

விக்ரம் பிரபு

சிஸ்டத்துக்கு எதிரா போராட்டம் பண்ணப் போறியா? இல்ல ஆர்ப்பாட்டம் பண்ணப் போறியா.. அதிகாரம் இல்லாத உன்னை அது எரிச்சுக் கொன்னுடும். அந்த அதிகாரத்தைக் கைப்பத்தணும். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் சொன்னதுதான். இங்க சிஸ்டமே நமக்கு எதிரானது. அந்த சிஸ்டத்துல அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து கதவுகளை நான் திறந்து வெச்சிருக்கேன். அதிகாரத்தைக் கைப்பத்தி சிஸ்டத்தை சரி பண்ணிக்கங்க. சிஸ்டத்தை சரி பண்றதுக்காகவே நாம அதிகாரத்தை கைப்பத்த வேண்டியிருக்கு. 

‘மதி’ பாத்திரத்தில் அசத்தியிருக்கும் போஸ் வெங்கட்

நீங்க போட்டில காண்பிச்ச வேகத்தை வேலைல காண்பிச்சா ஒரு ஐபிஎஸ் ஆபிசரா மக்கள் பக்கம் வந்து நிக்கலாம். இல்ல.. இந்த மெடல் கிடல் அது இதுன்னு ஆசைப்பட்டியானா.. சிஸ்டத்துல இருக்கிற போலீஸா இருக்க முடியுமே ஒழிய மக்களுக்கான போலீஸா இருக்கவே முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்சினைன்னா அவன் சந்திக்கற முதல் நபர் போலீஸ்காரன்தான். உங்களை மாதிரி மக்களை நேசிக்கற நேர்மையான பசங்க இருந்தா அவங்க பிரச்சினையை நியாயமா பேசி தீர்த்து வைக்க முடியும். அதனாலதான் சொல்றேன். நீங்கள்லாம் காக்கிச் சட்டை போடணும்”

சரியான நேரத்தில் இன்ஸ்பெக்டர் மதி தரும் லட்சியவாதி அறிவுரை, தந்தையின் கடைசி நேர விருப்பத்தின் வாக்குமூலம் போன்றவை ஹீரோவின் மனதை மாற்றுகின்றன. அவன் காவல்துறை பணியில் இணைகிறான். ஒரு நல்ல மாற்றத்திற்கான விதையுடன் படம் நிறைகிறது.

விக்ரம் பிரபு

அதிகாரத்தை பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்யும் கருப்பு ஆடுகள் நிறைந்திருக்கும் அரசுத்துறையில் ஒரு நேர்மையான, சமூக அக்கறையுள்ள, அரசியல் அறிவு நிறைந்திருக்கிற ‘மதி’ என்னும் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை மறக்கவே முடியாது. இதைச் சிறப்பாக கையாண்ட போஸ் வெங்கட் பாராட்டப்பட வேண்டியவர்.