நடிகர் விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் முதலிய பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து கவனம் ஈர்த்த இயக்குநர் அட்லீ, அவருடைய 5வது படத்திலேயே ஷாருக்கான் உடன் கைக்கோர்த்து ‘ஜவான்’ என்ற 1000 கோடி வசூல் திரைப்படத்தை கொடுத்து ஹிந்தி இண்டஸ்ட்ரியையே கலக்கினார்.
இதன்மூலம் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக உருவான அட்லீ, அடுத்து எந்த ஹீரோவுடன் கைக்கோர்க்க போகிறார் என்ற பேச்சில் சல்மான்கான் பெயரெல்லாம் அடிபட்டது.
ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இருவரும் கைக்கோர்க்க, அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமில்லாமல் இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் என்ற பிரமாண்ட கூட்டணி முடிவான பிறகு மற்ற நடிகர்கள் யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கைக்கோர்த்துள்ளனர்.
இந்தசூழலில் புஷ்பா திரைப்படங்களில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்த ராஷ்மிகா மந்தனா, உருவாகிவரும் #AA22xA6 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை தற்போதே ஏற்படுத்தியிருக்கும் #AA22xA6 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி எதிர்ப்பார்ப்பை இரட்டிப்பாக்கி உள்ளது.
வெளியாகியிருக்கும் தகவலின் படி, AA22xA6 படத்தில் அல்லு அர்ஜுன் ’தாத்தா, தந்தை மற்றும் 2 மகன்கள்’ என 4 கதாபாத்திரங்களில் ஒரு குடும்பத்தின் மொத்த ஆட்களாகவும் நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.
முதலில் அட்லீ அல்லு அர்ஜுனை மகன்கள் கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் மட்டுமே நடிக்கவைக்க விரும்பியுள்ளார், தாத்தா மற்றும் தந்தை கதாபாத்திரத்தில் வேறு நடிகர்களை அணுகலாம் என நினைத்துள்ளார். ஆனால் அல்லுஅர்ஜுன் தான் தாத்தா மற்றும் தந்தை என 4 கதாபாத்திரத்திலும் தானே நடிக்கவிரும்புவதாக தெரிவித்துள்ளார்.
முதலில் அட்லீ தயங்கினாலும், பின்னர் லுக் டெஸ்ட் சிறப்பாக வரவே இது புது அனுபவமாக இருக்கும் என அட்லீயும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஹங்காமாவிடம் ஒரு நெருங்கிய வட்டாரம் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ரசிகர்கள் முதன்முறையாக அல்லு அர்ஜுனை 4 வேடங்களில் பார்க்கவிருக்கின்றனர். இது அல்லுவின் சினிமா கேரியரிலும் முதல் பலவேட திரைப்படமாக அமையவிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இப்படம் இரண்டு பிரபஞ்சங்கள் சார்ந்த திரைக்கதையாகவும், இதுவரை இந்திய சினிமா பார்க்காத மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ இந்திய சினிமாவை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் பெரிய வேலையை கையில் எடுத்திருப்பதாகவும், அது ஹிட்டடித்தால் அல்லு அர்ஜுன் இந்தியா சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுப்பார் என்றும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.