”சுயமரியாதைக்கு இழுக்கு என்றால் கோவம் வரும்..” - கமல் பேசியது குறித்து கன்னட நடிகர் துருவா சர்ஜா
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ’தக் லைஃப்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் எனத் தெரிவித்திருந்தார்.
கமலின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கர்நாடகத்தில் ’தக் லைஃப்’ திரைப்படம் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, ”கர்நாடக மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது, அதுபற்றி கமலுக்கு தெரியவில்லை, பாவம் வரலாறு தெரியாமல் பேசுகிறார்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் காட்டமாக பேசியிருந்தார். கர்நாடகா உயர்நீதிமன்றமும் கமலின் கருத்துக்கு விமர்சனம் செய்தது.
இந்தசூழலில் ”இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கப் போவதில்லை” என்று கமல் கூறியதால் கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கமலின் இந்தவிவகாரம் குறித்து தற்போது கருத்து தெரிவித்திருக்கும் கன்னட நடிகர் துருவா சர்ஜா, எங்கள் மொழியின் சுயமரியாதைக்கு ஒரு கலங்கம் என்றால் எங்கள் மக்களுக்கு கோவம் வரும் என்று பேசியுள்ளார்.
எங்கள் மொழிக்கு இழுக்கு என்றால் கோவம் வரும்..
கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பில் பிரேம் இயக்கத்தில் கன்னட நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் திரைப்படம் ‘KD The Devil'. 1970 காலகட்டத்தில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிக்கும் இப்படத்தில், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தமிழ், கன்னடா, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கன்னட நடிகர் துருவா சர்ஜா கமல் பேசிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.
கமல் விவகாரத்தில் எந்த கன்னட திரைப்பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த துருவா, “கமல் சார் கொடுத்த ஒரு ஸ்டேட்மென்ட், கர்நாடகா மக்களை கோபமாக்கிவிட்டது. நான் வெளிப்படையாக சொல்கிறேன், எல்லோரும் அவரவர் தாய் மொழியை நேசிக்கிறார்கள். அதே போலதான் எங்களுக்கும். எங்கள் தாய் மொழிக்கு ஒன்று என்றால், கண்டிப்பாக கோபம் வரும். அந்தநேரத்தில் அந்தப் படத்தை (தக் லைஃப்) தவிர மற்ற படங்கள் வெளியாகவே செய்தன. எங்கள் கன்னட மக்கள், எல்லோரையும் வரவேற்பார்கள். ஆனால், அவர்களின் சுயமரியாதைக்கோ மொழிக்கோ இழுக்கு எதுவும் வந்தால் எதிர்ப்பார்கள்" என்று பேசியுள்ளார்.