விடாமுயற்சி, குட் பேட் அக்லி முதலிய இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித்குமார், படப்பிடிப்பு வேலைகளை முடித்தபிறகு துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள புறப்பட்டுச்சென்றார்.
சமீபத்தில் ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் ரேஸிங் அணியை உருவாக்கிய நடிகர் அஜித்குமார், தன்னுடைய அணியுடன் சேர்ந்து அடுத்தடுத்து நடக்கவிருக்கும் கார் பந்தயங்களில் அடுத்த 9 மாதங்களுக்கு பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. அதில் 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்குமார் ரேஸிங் அணி, 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது.
முதல்முறையாக ஒரு சர்வதேச ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் அணி, முதல் பங்கேற்பிலேயே போர்ஷே 992 கப் கார் ரேஸ் பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது. இந்த வெற்றி அணிக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அஜித்குமார் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி வெற்றியில் பங்கேற்றார்.
அஜித்குமார் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதை பார்ப்பதற்காக நேராக துபாய்க்கே சென்ற அஜித் ரசிகர்கள் அவருக்கு உற்சாகத்தை அளித்தனர். அதைப்பார்த்த அஜித்குமார் மிகுந்த நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
இந்நிலையில் கார் ரேஸில் வெற்றிபெற்றபிறகு பேட்டியளித்த அஜித்குமார் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய அவர், “அஜித் வாழ்க, விஜய் வாழ்க-னு சொல்றீங்களே, நீங்க எப்ப வாழப் போறீங்க? உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் ரசிகர்கள் அனைவரும் முதலில் உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இருக்கிறேன். அதேபோல என்னுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி சிறப்பாக இருக்க வேண்டும்” என்று ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோளை வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அஜித்குமார், ”நிறைய இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர், சாலையில் அவர்கள் பொறுப்பற்ற வகையில் செயல்படுவதால் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. சாலை விபத்துக்குள்ளானவர்களை மருத்துவ வல்லுநர்கள் தான் மீட்க வேண்டும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் இந்தியாவில் அதுபோன்று இல்லை.
ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்றுவதாக நினைத்து மக்கள் விபத்தில் உள்ளவர்களை மீட்கின்றனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு சிலர் தண்ணீர் தருகின்றனர். ஆனால் விபத்துக்குள்ளானவருக்கு SPINAL INJURY ஏரற்பட்டிருந்தால் அது ஆபத்தாகிவிடும். என் நண்பருக்கும் இதுபோன்று நடந்துள்ளது. அதனால் மருத்துவ வல்லுநர்கள் தான் விபத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டும்.
அண்மை காலத்தில் நிறைய பேர் அதி நவீன இருசக்கர வாகனங்களில் பணம் செலவிடுகின்றனர், ஆனால் பாதுகாப்பான ஹெல்மேட், க்ளவுஸ் போன்றவற்றிற்கு செலவிடவதில்லை.. உங்கள் வாகனத்தின் மதிப்பில் 15 சதவிகிதத்தை உங்கள் பாதுகாப்பிற்கு செலவிடுங்கள்” என்று பேசியுள்ளார்.
சமூக வலைதளங்கள் தற்போது டாக்ஸிக் ஆகிவிட்டதாக தெரிவித்திருக்கும் அஜித்குமார், ”அண்மை காலங்களில் சமூக வலத்தளம் மிகவும் TOXIC ஆகிவிட்டது. எதாவது நடைபெற்றால் திரைபிரபலங்கள் உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்படுகின்றனர்.
ஆரோக்கியமான உடல், சிக்ஸ் பேக்கை விட மனநலம் முக்கியம். எண்ணம் போல் தான் வாழ்க்கை, நம் எண்ணங்களால் தான் நம் வாழ்க்கை அமையும். அனைத்து வெறுப்புகளும் முடிவுக்கு வரவேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்” என்று பேசியுள்ளார்.